பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தினால், எமக்கு தெரிந்தவற்றை எல்லாம் வெளியிடுவோம்: சம்பிக்கவுக்கு, கம்மன்பில எச்சரிக்கை

🕔 June 20, 2017

பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவுக்கு, பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப்படியில்லா விட்டால், தனக்குத் தெரிந்தவை அனைத்தினையும் வெளியிட வேண்டி வரும் எனவும் கம்மன்பில அச்சுறுத்தியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே, அவர் இந்த விடயங்களைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

“ஞானசார தேரரின் பின்னால் அமைச்சர் சம்பிக்க இருந்தாரா, இல்லையா என்பது பற்றி நான் கூற மாட்டேன். ஆனால், அமைச்சருக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்; பொதுபல சேனா தொடர்பில் குற்றச்சாட்டுக்களை  நீங்கள் முன்வைப்பதன் மூலம், எமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் வெளியிடும் நிலைக்கு எம்மை தள்ளி விட வேண்டாம்.

ஜாதிக ஹெல உறுமயவுக்கும், பொதுபல சேனாவுக்கும் இடையிலான சர்ச்கைளுக்கு நாடுவில் நான் வர விரும்பவில்லை. ஆனாலும், பொதுபல சேனா பற்றிய பிழையான அறிக்கைகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, அமைச்சரை நான் எச்சரிக்கிறேன். இல்லாவிட்டால், எங்களுக்குத் தெரிந்தவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தும் நிலைக்கு ஆளாகி விடுவோம்” என்றார்.

மேலும், ஞானசார தேரரை யாரேனும் தமது விருப்பப்படி செயற்படுத்திக் கொண்டிருந்தனரா என்பது பற்றி தன்னால் கூற முடியும் என்று தெரிவித்த உதய கம்மன்பில, “அந்த இடத்துக்கு இப்போது நான் செல்ல விரும்பவில்லை” என தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பில் ஞானசார தேரர் இணைந்த பிறகும், சம்பிக்க ரணவக்கவுக்கும், ஞானசார தேரருக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்ததாகவும் கம்மன்பில கூறினார்.

சம்பிக்க ரணவக்க செயலாளராகப் பதவி வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளராக ஞானசார தேரர் பதவி வகித்தார் என்று, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்