அரபுலகை கூறுபோடும் சியோனிஸ சூழ்ச்சி: அலசுகிறார் பசீர் சேகுதாவூத்

🕔 June 10, 2017

– பசீர் சேகுதாவூத் –

“மதம்,மொழி,சாதி, பால் வேறுபாடு போன்ற
அடையாளங்கள் ஒரே நேரத்தில்
விடுதலைக்கான ஆயுதமாகவும், அடக்கு முறைக்கான கருவிகளாகவும் செயல்படுகின்றன” – ஃபூக்கோ –

லைவர் அஷ்ரஃப் சேருடன் 1995 ஆம் வருடம் ஹஜ் செய்வதற்காகச் சென்றிருந்தேன். மக்காவில் இருந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்களும், புத்தளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனும் என்னைச் சந்தித்து அவர்களின் காரியாலயத்தில் இடம் பெறும் கலந்துரையாடல் ஒன்றில், நான் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

இவ்வழைப்பை ஏற்றுக்கொண்டு ஜித்தா ‘சூக்’ கில்(சந்தையில்) அமைந்திருந்த அவர்களது காரியாலயத்துக்குச் சென்று, குறிபடும் கலந்துரையாடலில் பங்கு கொண்டு உரையாற்றினேன். அவ்வுரையில் “இன்னும் சில காலம் கடந்ததும் சவூதியில் குண்டுத் தாக்குதல்கள் உட்பட ஆயுத வன்முறைகள் இடம் பெற வாய்ப்புள்ளது என்றும், இந்த நாட்டுக்குள்ளேயே குடும்ப ஆட்சிக்கு எதிரான போக்கு புதிய பரம்பரையிடம் தலைதூக்கும் வாய்ப்புள்ளது என்றும், நீண்ட கால அடிப்படையில் சவூதி துண்டு துண்டாகப் பிளவுபடவும் கூடும் ” என்றும் எனது கருத்துக்களை முன்வைத்தேன். இது இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது.

அக்காலத்தில் இக்கருத்தை ஒரு கற்பனை என்றே அங்கு பிரசன்னமாகி இருந்த பெரும்பாலானவர்கள் எண்ணினார்கள் என்பதை எனது உரையின் பின்னர் பேசிய பலரது கருத்துரைகளில் இருந்து நான் புரிந்து கொண்டேன். சுமார் 60 பேர் அளவில் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் அனைவரும் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். (இங்கு கலந்து கொண்டிருந்த எவராவது இலங்கையில் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்றுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்).

நெருக்கடியின் விளைவு

மத்திய கிழக்கு நெருக்கடியினால், கடந்த 25 ஆண்டுகளாக உலகில் உள்ள இரண்டு பில்லியன் முஸ்லிம் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக ஆகியுள்ளனர். பெரும் தொகையானவர்களை வறுமை பீடித்துள்ளது, மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாகியுள்ளனர், இரண்டு மில்லியன் முஸ்லிம் மக்கள் வன்முறையினால் உயிரிழந்துள்ளனர்.

கால் நூற்றாண்டுகளில் இவ்வளவு இழப்புகளையும் சந்தித்த அனுபவங்களைப் பாடமாகக் கொள்ளத்தேவையில்லை. எவ்வளவு அழிவுகள் ஏற்படினும் ஒரு சில முஸ்லிம் மன்னர்களின் குடும்ப ஆட்சி நிலைத்திருந்தால் போதுமானது. இந்த நோக்கிற்காக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தை அரபுலகெங்கும் வியாபிக்கச் செய்தல் தமக்கு அனுகூலமானது. இவ்வாறு, கட்டார் இராஜதந்திர நெருக்கடியை உருவாக்கியவர்கள் நம்புகிறார்கள் என்பது தெட்டத் தெளிவானது.

ஆனால், இந்த நெருக்கடி கட்டாரையும், ஈரானையும் மட்டுமல்ல சவூதியையும், இந்நாட்டோடு கூட்டுவைத்துச் செயல்படுகிற நாடுகளையும் எதிர்காலத்தில் அழிவுக்கு இட்டுச் செல்லக் கூடியது என்பதை நிச்யமாகப் பட்டறிவு உணர்த்தும். இவ்வழிவைத்தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்புகிறது.

கட்டார் ஏன் குறி வைக்கப்படுகிறது

கட்டார் ஏகாதிபத்திய இராச்சியமாக இருந்த போதும், மிதவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிற, அதேநேரம் சவூதியோடு ஒப்பிட்டால் தனது சுதந்திரத்தை அதிகமாக விரும்புகிற, அடிமைத்தனமற்ற வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்கிற ஒரு நாடாகும்.

இவை மட்டுமன்றி, கட்டார் நவீன இஸ்லாமிய முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும், அரபு மாற்றுச் சிந்தனையாளர்களுக்கும் அடைக்கலமாகவும், இவர்களின் தளமாகவும் இருக்கிறது. இங்கு சிறந்த புகழ் பூத்த பல்கலைக் கழகங்கள் அமைந்திருக்கின்றன. துனீஸியா நாட்டைச் சேர்ந்த பூவாசி என்பவர் தொடங்கி வைத்த அரபு வசந்தத்திற்கு ஆரம்பத்திலேயே ஆதரவு வழங்கிய அரபு நாடு கட்டார். பலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவையும் உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நாட்டில் அமெரிக்க ராணுவத்தளம் இயங்கி வருகிற போதும் அமெரிக்காவின் எல்லா செயலுக்கும் தலையாட்டுகிற போக்கைக் கட்டார் கடைப்பிடிக்கவில்லை.

மேலும், கட்டார் உலகில் அதிகமான இயற்கை எரிவாயுவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 120 ஆண்டுகளுக்கும் அதிகமாக எரிவாயுவை உலகுக்கு வழங்கக் கூடிய வளத்தைக் கொண்டிருக்கிறது.

இரண்டாவது அதிக இயற்கை எரிவாயுவைக் கொண்டுள்ள நாடு ஈரான் ஆகும். இந்நாடு பிராந்தியத்தில் ராணுவ வல்லமை கூடியதுமாகும். எவ்வளவு தடைகள் விதிக்கப்பட்ட போதும் இன்றுவரை நிமிர்ந்து நிற்கும் துணிவை நிரூபித்து வருகிறது.

ஈரானிலும், கட்டாரிலும் அமெரிக்காவின் கண் குத்திட்டு நிற்பது இந்த நாடுகள் கொண்டிருக்கும் இயற்கை எரிவாயு வளத்திலேயே ஆகும்.

அமெரிக்காவுக்கு ஈரானைச் சின்னாபின்னமாக்கவும் வேண்டும், கட்டாரின் எரிவாயுவில் தனி ஆதாய உரிமமும் (Royalty) வேண்டும். ஏற்கனவே கட்டாரில் ராணுவத் தளம் இருக்கிறது, தற்போது சவூதியின் உதவியுடன் ராஜ தந்திர நெருக்கடியையும் உருவாக்கியாயிற்று. படிப்படியாக நெருக்கடியை அதிகரித்தால் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்குமே வாய்ப்புகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கியுள்ள அமெரிக்காவுக்கு உலகில் தன்னைத் தொடர்ந்தும் உலகப் பொலிஸ்காரனாக நிலைதிறுத்திக் கொள்வதற்குரிய பொருளாதார உறுதிப்பாட்டை இந்த எரிவாயு உரிமம் நல்கும். அதேவேளை, இஸ்ரேலுக்குப் பிராத்தியத்தில் பெரும் அரசியல் ஆதாயம் கிடைப்பதோடு, தனது நாட்டுக்குள் ஹமாஸ் இயக்கத்தை எதிர் கொள்ளத் தேவையான மேலதிகத் தெம்பும் கிடைக்கும்.

சவூதி: சொந்தச் செலவில் சூனியம்

இந்த நெருக்கடியினால் சவூதிக்கு எவ்வித நலனும் கிடைக்கப் போவதில்லை. குடும்ப ஆட்சியும் நிலை குலையும் நிலைமையே ஏற்படும். காலப் போக்கில் சவூதி அரேபியா உடைந்து பல சிறிய ராச்சியங்களாக சிதறக்கூடிய சந்தர்ப்பத்தையும் நிராகரிக்க முடியாது. ஏற்கனவே சவூதியின் புதிய பரம்பரை இளைஞர்கள், மன்னராட்சியில் வெறுப்புற்றுக் காணப்படுகின்றனர். உண்மையான அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசாங்கத்தைத் தெரிவு செய்வதில் மக்களின் பங்களிப்பு இல்லாமையைக் கண்டு இவ்விளைஞர்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர். நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களின் கருத்துத் தாக்கமும் அதிகரித்து வருகின்றது. இப்னு சவூத் குடும்பத்துக்கு நாட்டைக் கைப்பற்றுவதற்கான யுத்தத்தில் பெரும் பங்களிப்பை வழங்கிய போதும், பின்னர் அக்குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட வீறார்ந்த சவூதிப் பழங்குடியினர், இப்னு சவூத் பரம்பரையைப் பழிவாங்க சுமார் ஒரு நூற்றாண்டாகக் காத்திருக்கிறார்கள்.

மேலும் மக்காவும், மதீனாவும் ஒரு நாட்டிற்கன்றி உலக முஸ்லிம்களுக்குச் சொந்தமான பகுதிகளாக மாறவேட்டும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகின்றது. குடும்பங்கள் அல்ல, மக்கள் திரளே தங்களை நிர்வகிக்கும் நிலையை எட்டவும் கூடும். ‘மக்களின் அதிகாரத்தின் முன்னால் எந்த எதேச்சாதிகார சக்திகளும் தூசு போல்தான்’ என்பதற்கு உலக வரலாறுகள் சான்று பகர்கின்றன.

அண்மையில் ஈரானில் இரண்டு முக்கிய தளங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை அனுப்பித் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். இத்தாக்குதல்களை இயக்கியவர்கள் இவ்வமைப்பைக் கட்டி வளர்த்து வருகிற ஏகாதிபத்திய சக்திகளன்றி வேறு யாராக இருக்க முடியும்? இந்த தாக்குதல்களுக்குப் பதிலடியை ஈரான் அதே பாணியில் சவூதிக்குக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சவூதி அரேபியா தனது தற்கால வெளி நாட்டுக் கொள்கைகளிலும், ராஜதந்திர செயற்பாடுகளிலும் மீள் பரிசீலனையைச் செய்ய வேண்டியது கட்டாயமாகும். இது அந்நாட்டிற்கும், உலக முஸ்லிம் உம்மாவுக்கும் மிகவும் அத்தியாவசியமாகும்.

இதற்கிடையில், எர்துகானின் துருக்கி  – சுமார் 500 வருடங்களுக்கு முந்திய சுல்தான் ‘காஸி’ என வரலாற்றில் அறியப்படும், முதலாம் உஸ்மானின் ராஜ தந்திரத்தைப் பிரயோகிக்க முற்படுவதையும் காணக் கிடைக்கிறது.

அண்மையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இஸ்ரேலை எதிர்ப்பதற்கு முஸ்லிம்களுக்கு எவ்விதத் தார்மீக உரிமையும் கிடையாது என்று திருவாய் மலர்ந்து அருளியுள்ள வீடியோ, சமூக வலைத் தளங்களில் உலவுகிறது. இக்கூற்றை உற்றுப் பார்ப்பவர்கள் சியோனிசமும், பௌத்த தீவிரவாதமும் ஒரு கொடியில் இணைந்து செயல்படத் தொடங்கியிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இலங்கை முஸ்லிம் தலைவர்கள் இவ்விடயத்தில், அரபுலகில் நிலவும் இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு, கூர் உணர் திறனுடன் இருத்தல் அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்