ஹக்கீம் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள், சுவிஸ் வங்கி ‘லொக்கரில்’ உள்ளன: ஏராளமான உண்மைகளை அம்பலப்படுத்தும் நேர்காணல்

🕔 June 4, 2017
– ரி. தர்மேந்திரன் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான முக்கிய ரகசிய ஆவணங்கள், பஷீர் சேகு தாவூத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அவை உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும் என்று ஐக்கிய கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயலாளர் ஏ.யூ.எல்.எம். ஹாரிஸ் வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க சுவிஸில் இருந்து தாயகம் திரும்பி வந்த இவரை நாம் நேர்காணல் கண்டபோது;

கேள்வி:-  ஈரோஸ் இயக்கத்தில் நீங்கள் இணைந்த பின்னணி என்ன?

பதில்:- மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதியில் காங்கேயனோடையை சொந்த இடமாக கொண்டவன் நான். என்னை ஒரு இஸ்லாமிய தமிழன் என்று சொல்லி கொள்வதில் பெருமையும், பெருமிதமும் அடைபவன். தொழினுட்ப உத்தியோகத்தரான எனது தந்தையார் அரசாங்க கடமையின் நிமித்தம் தமிழர் பிரதேசங்களில் கடமையாற்றி உள்ளார். இதனால் அவருடைய நண்பர்கள் கூடுதலாக தமிழர்கள்தான். அவருடன் தொழில் புரிந்த சக உத்தியோகத்தர்களில் உமா மகேஸ்வரனும் ஒருவர் என்பதை இந்த இடத்தில் சொல்லி கொள்கிறேன். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றுப்படி எனது தாய் வழி மூதாதையர்கள் தமிழர்களாகத்தான் இருந்திருக்க முடியும். ஆகவேதான் எனது தாய்மொழியாக தமிழ் உள்ளது. எனவே சிறிய வயது முதல் எனக்குள் தமிழ் பற்று மிக நிறைவாகவே காணப்பட்டது.

நான் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரம் படித்து கொண்டிருந்தேன். அப்போது சிங்கள அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு பல நூற்றுக்கணக்கான மலையக மாணவர்கள் அகதிகளாக வந்து எமது பாடசாலையில் தங்கி இருந்தனர். இவர்களின் சோக கதைகளை செவிமடுத்து மிகவும் கவலை அடைந்தேன். மலையக மக்கள் மீது எனக்கு அதீத கரிசனை ஏற்பட்டது. எனவே மலையக மக்களின் நலனில் அதிக கரிசனை கொண்டு செயற்பட்டு கொண்டிருந்த ஈரோஸ் இயக்கத்தில் இணைந்தேன்.
1989 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட – பொது தேர்தலில் ஈரோஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நானும், பஷீர் சேகு தாவூத்தும் போட்டியிட்டு இருந்தோம். அத்தேர்தலில் எனக்கு 2500 வாக்குகள் கிடைத்தன. அவற்றில் சில நூறு வாக்குகள் மாத்திரம் முஸ்லிம் நண்பர்களுடையவையாக இருக்க ஏனைய அனைத்தும் தமிழ் சகோதரர்களுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி:- உங்களுக்கும், பஷீர் சேகு தாவூத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து கூறுங்கள்?

பதில்:- ஈரோஸ் இயக்கத்தில் பொது குழு உறுப்பினராக அரசியல் பிரிவில் பஷீர் சேகு தாவூத் விளங்கினார். நான் இவரை எனது அரசியல் குருவாக வரித்து கொண்டேன். ஒரு ஏகலைவன் போல தூரத்தில் இருந்தவாறு இவரிடம் நிறைய கற்று கொண்டேன். மனிதனாக என்னை சிந்திக்க தூண்டியவர் இவர்தான். 1989 ஆம் இவரே என்னை தேடி வந்து சந்தித்த அந்த தருணம் என்றென்றைக்குமே இனிமையான சம்பவமாக பசு மரத்தாணி போல நெஞ்சில் பதிவாகி உள்ளது. எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி இவர் கலந்து காணப்படுகின்றார் என்று கூறலாம்.

கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைகின்ற தீர்மானத்தை பஷீர் சேகு தாவூத் எடுத்தபோது உங்களை போன்ற சக தோழர்களின் மன நிலை எவ்வாறு இருந்தது?

பதில்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பஷீர் சேகு தாவூத் இணைந்ததில் எனக்கோ, என் போன்ற தோழர்களுக்கோ உடன்பாடு இருக்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்புக்கு போராட்ட இயக்க பின்னணி உள்ள ஒருவர் தேவைப்பட்டதால் பஷீரை உள்வாங்குவதில் குறியாக காணப்பட்டார். இதுவும் ஒரு இனத்தின் விடுதலைக்கும், விடிவுக்குமான அரசியல் இயக்கத்துக்கு பங்களிக்க கூடிய சந்தர்ப்பம் என்பதால் நாம் அரை மனதுடன் பஷீரை விட்டு கொடுத்தோம்.

ஆனால் பஷீர் சேகு தாவூத் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் தற்போது ரொம்பவே அவமானப்படுத்தப்பட்டு உள்ளார். அவருடைய அறிவு, ஆற்றல், அனுபவம் ஆகியவற்றை ஒரு தேசிய பட்டியலுக்குள் குறுக்கி பார்க்கின்றார்கள். அமைப்புகளை, கட்சிகளை மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவது சம்பந்தமாக மாத்திரம் அன்றி, மக்களிடம் இருந்து அவற்றை அன்னியப்படுத்தி அழிப்பது சம்பந்தமாகவும் ஈரோஸில் இருந்தபோது விசேட நிபுணத்துவ பயிற்சி பெற்ற பஷீர் சேகு தாவூத்தின் அமைதி, கடலின் ஆழம் போன்றது என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிற்போக்கு தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட ஏராளமான முக்கிய ரகசிய ஆவணங்களை புலம்பெயர் தேசங்களை சேர்ந்த 06 நண்பர்களின் பொறுப்பில் பஷீர் சேகு தாவூத் வைத்திருக்கின்றார் என்று காற்றுவாக்கில் கதைகள் அடிபடுகின்றனவே?

பதில்:- பஷீர் சேகு தாவூத்தால் எனது சுவிஸ் முகவரிக்கு பல ரகசிய ஆவணங்கள் கொண்ட பொதி அனுப்பப்பட்டு இருந்தது. அதை அவரின் அறிவுறுத்தல், ஆலோசனை ஆகியவற்றுக்கு அமைய  சுவிஸ் வங்கி லொக்கரில் வைத்து உள்ளேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிற்போக்கு தலைமையால் அவர் கொல்லப்படலாம் என்கிற பாதுகாப்பற்ற சூழல் சில காலம் நிலவியபோதே, மிக நம்பிக்கையான நண்பர்களுக்கு ஹக்கீம் தொடர்பான ரகசிய ஆவணங்களை அனுப்பி வைத்திருக்கின்றார். உரிய தருணத்தில் அவர் இந்த ஆவணங்களை வெளிப்படுத்துவார் என்று நம்புகின்றேன்.

கேள்வி:- உங்களை முன்னிறுத்தி பஷீர் சேகு தாவூத் புதிய அரசியல் கட்சி ஒன்றை அண்மையில் ஆரம்பித்து உள்ளார் என்று தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் கூறுகின்றனவே?

பதில்:- தமிழ் உறவுகளின் விடுதலைக்காக போராட்டத்தில் இணைந்த என்னால் விடுதலை புலிகளால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளை பார்த்து கொண்டிருக்க முடியவில்லை. எனவே வட – கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சியை 2000 ஆம் ஆண்டு ஆரம்பித்தேன். அப்போதும் பஷீரின் ஆலோசனை, வழிகாட்டல் ஆகியவற்றை பெற்று இருந்தேன். இக்கட்சியை தேர்தல் ஆணையாளர் அங்கீகரித்து இருந்தார். முஸ்லிம் மக்களின் குரலாக, முஸ்லிம் குரல் என்கிற பத்திரிகையை நண்பர் பௌஸருடன் சேர்ந்து 2007 ஆம் ஆண்டு சுவிஸ் செல்கின்ற வரை நான் நடத்தினேன். நான் இப்பத்திரிகையை நடத்தியதிலும், சுவிஸ் சென்றதிலும்கூட பஷீரின் பங்கு, பங்களிப்பு ஆகியன உள்ளன. பஷீர் சேகு தாவூத்தின் உதவி, ஒத்தாசை ஆகியவற்றுடனேயே செடோ ஸ்ரீலங்கா என்கிற அரச சார்பற்ற தொண்டு நிறுவனத்தை பதிவு செய்து மனிதாபிமான, மனித நேய சேவைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

இன்றைய காலத்தின் தேவை கருதி, குறிப்பாக கிழக்கு மாகாணத்தை தளமாக கொண்ட முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றின் அவசியத்தை உணர்ந்தவனாக வட – கிழக்கு முஸ்லிம் காங்கிரஸை, ‘ஐக்கிய கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ்’ என்று பெயர் மாற்றம் செய்து, கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு வந்து உள்ளேன். முஸ்லிம் கூட்டமைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்களாக கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் இதில் இணைய இதயபூர்வமாக முன்வந்து உள்ளனர். அதே நேரம் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் குரல்’ என்கிற பத்திரிகையை இப்போது ஆரம்பித்து உள்ளேன். இது விசேடமாக கிழக்கு மக்களின் குரலை சுமந்து நிற்கும்.

கேள்வி:- நீங்கள் புலம்பெயர் நாடு ஒன்றில் வசித்து வருகின்ற நிலையில்கூட, தாயக முஸ்லிம்களின் அரசியலில் தொடர்ந்து உணர்வுபூர்வமாக ஈடுபட்டு வருகின்றீர்கள். புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்ற முஸ்லிம்களின் தாயக அரசியல் குறித்த ஈடுபாடும், செயற்பாடும் பொதுவாக எவ்வாறு உள்ளன?

பதில்:- இலங்கை தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்களே இன்னமும் அரசியல் ரீதியாக செயற்படவில்லை. தேர்தலில் வாக்களிப்பது மாத்திரமே அரசியல் செயற்பாடு என்று நம்பி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் புலம்பெயர்ந்த முஸ்லிம்களின் அரசியல் செயற்பாடு குறித்து சொல்லவா வேண்டும்? தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க போகிறது என்று தோன்றுகின்றபோது மாத்திரம், முஸ்லிம் புத்திஜீவிகள் என்று அறியப்படுகின்ற சிலர் லண்டனில் கூட்டம் போடுவதையும், அறிக்கைகள் விடுவதையும் காண முடிகின்றது. என்னை பொறுத்த வரை இன பிரச்சினையில் பாதிக்கப்பட்டு புலம்பெயர் தேசங்களுக்கு வந்த முஸ்லிம்கள் மிக சொற்ப அளவினரே ஆவர். ஏனைய அனைவரும் பொருளாதார வளம் தேடி வந்தவர்கள். இவர்களிடம் எப்படி இன உணர்வை எதிர்பார்க்க முடியும்?

கேள்வி:- வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவது அல்லது பிரிக்கப்படுவது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றி மூத்த தமிழ் என்றும், வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகு என்றும் பெருமைப்பட்டு கொள்ள முடிகிறதே தவிர, தமிழுக்கு என்று ஒரு நாடு இந்த உலகத்தில் இல்லாமல் உள்ளதை கண்கூடாக காண முடிகின்றது. மிக மூத்த மொழிக்கு நாடு இல்லையே? என்கிற கவலை என்னை ரொம்பவே அரிக்கின்றது.

எனவே தமிழை ஆட்சி மொழியாக கொண்டு இரு மாகாணங்கள் இலங்கையில் அமைய பெறுவது வரவேற்கப்பட வேண்டிய விடயமே ஆகும். இலங்கையில் 07 சிங்கள மாகாணங்கள் இருப்பது போல, அமெரிக்காவில் 50 ஆங்கில நாடுகள் இருப்பது போல, ஜேர்மனில் 16 ஜேர்மனிய கண்டோன்கள் இருப்பது போல, ஏன் தமிழ் பேசும் மாகாணங்கள் இலங்கையில் இருக்க கூடாது? வட மாகாணத்தை தமிழர்களும், கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய தமிழர்களும் ஆட்சி செய்யட்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களை படிப்பினையாக கொண்டு பார்க்கின்றபோது பிரிந்த வடக்கு, கிழக்கில் வாழ்வதுதான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது என்பதே யதார்த்தம் ஆகும். இல்லையேல் இணைந்த வடக்கு, கிழக்கில் சிறுபான்மையினராக, பாதுகாப்பற்றவர்களாக, பலவீனமானவர்களாக உள்ளனர் என்று முஸ்லிம்கள் உள்ளுணர்வால் அச்சம் கொண்டு காணப்படுவார்கள். மேலும் வடக்கும், கிழக்கும் ஆரம்பத்தில் ஒரு போதும் இணைந்திருக்கவில்லை. எனவே எந்த அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைப்பை கோருகின்றனர்? என்பதுதான் புரியாமல் உள்ளது.

கேள்வி:- கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவு இன்று எவ்வாறு உள்ளது?

பதில்:- எல்லோரும் சொல்வது போல கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவு நன்றாக இல்லை என்பதே உண்மையான நிலை ஆகும். நீறு பூத்த நெருப்பாகவே தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான உறவு உள்ளது. ஒரு சமூகத்தின் மீது பாய மற்ற சமூகம் சமயம் பார்த்து காத்திருக்கின்றது. ஆனால் நாம் பிரிந்து நிற்பதால் எதையும் அடைய போவதில்லை. மாறாக சிங்கள இனத்துக்கு அடிமைப்பட நேரும், கிழக்கு சிங்களத்துக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டு விடும்.

இரு சமூகங்களும் 80 களுக்கு முன்னர் ஒற்றுமையாக வாழ்ந்த சூழல் மீண்டும் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்று மனதார விரும்புகின்றேன்.  அன்று விவசாய நிலங்களில் இரு சமூகங்களுக்கும் இடையில் ஏற்பட்ட உறவு உண்மையானதாக இருந்தது. தற்போது நிலவுவது வியாபார கொடுக்கல், வாங்கல்களுக்கான உறவே ஆகும். பொருளையும், பணத்தையும் பரிமாறி கொள்கின்றபோது மாத்திரம் போலியாக உறவு கொண்டாடுகின்றனர். கிழக்கில் புதிய தமிழ் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். இவை கிழக்கை எவருக்கும் அடிமைப்படுத்துகின்ற, அடகு வைக்கின்ற தலைமைகளாக இருக்க கூடாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்