மாயக்கல்லி விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிப்பு: மாகாணசபை உறுப்பினர் லாஹிரை காணவில்லை

🕔 May 13, 2017

– முன்ஸிப் அஹமட் –

றக்காமம் மாயக்கல்லி மலைப் பகுதியின் சர்ச்சைக்குரிய பகுதியினுள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை, யாரும் உள்நுழையக் கூடாது என, அம்பாறை மேலதிக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கடந்த புதன்கிழமை – மேற்படி மலையில் வெசாக் பூஜை வழி­பா­டுகள் இடம்பெற்றுள்ளன.

மாயக்கல்லி மலையில் அடாத்தாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை முன்னிறுத்தி இந்த வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

பூஜை வழி­பா­ட்டில் சுமார் 80 பக்­தர்கள் கலந்து கொண்டனர் என்று,  அம்பாறை வித்தியா­னந்த பிரி­வெ­னாவின் அம்­பே­பிட்­டிய சீல­ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றின் உத்தரவை அவமதிக்கும் வகையில், இடம்பெற்ற இந்த செயற்பாட்டுக்கு எதிராக, பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்னர், திருகோணமலை பகுதியில் மறியல் போராட்டம் நடத்திய வேலையில்லாப் பட்டதாரிகள் –  நீதிமன்ற உத்தரவுப் பிரதியினை கிழித்தெறிந்ததன் மூலம், நீதிமன்றினை அவமதித்ததாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுப் பிரதியினை அவமதித்த வேலையில்லா பட்டதாரிகளைக் கைது செய்யுமாறு கோரி, கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம். லாஹிரின் ஏற்பாட்டில், சில சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

தற்போது, மாயக்கல்லி மலைப் பகுதியினுள் நுழையக் கூடாது எனும் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டமையினூடாக, நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி லாஹிர், தனது சக சட்டத்தரணிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆகக்குறைந்தது கிழக்கு மாகாணத்தினுள் நீதிமன்ற அவமதிப்பு நடைபெற்று, அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படாது விட்டால், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி எனும் வகையில், லாஹிர் களமிறங்க வேண்டும் எனவும் மக்கள் கூறுகின்றனர்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்கள் என்பது போல், நீதிமன்றினை அவமதிப்பு செய்த ஒரு சாராரை மட்டும் கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, லாஹிர் போன்ற மக்கள் பிரதிநிதிகள் ஒதுங்கியிருந்தால், அது ஓரவஞ்சனையாகி விடும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்பான செய்திக்கு: வேலையில்லா பட்டதாரிகளை பழிவாங்க, முதலமைச்சர் வகுத்த திட்டம்; மாகாணசபை உறுப்பினர் லாஹிரை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்