திறக்க மறுக்கும் கதவுகள்

🕔 May 9, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

விழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உலகில் ஏராளம் உள்ளன. விடை காணப்படாத சில கேள்விகள் நீண்ட காலமாக அப்படியே இருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி என்கிற கேள்விகளை, சில சம்பவங்கள் மீது பிரயோகிக்கும் போது, ‘பூமரங்’ போல், அந்தக் கேள்விகள் மீளவும் நம்மையே வந்தடைகின்றன. குறிப்பாக, உலகில் நிகழ்ந்த சில மரணங்கள் இன்னும் மர்மங்களாகவே இருக்கின்றன. இருந்தார்களா? இறந்தார்களா என்று தெரியாமலேயே, வரலாற்றுப் பக்கங்களிலிருந்து சிலர் மறைந்து போய் விட்டனர்.

உலகில் துலக்கப்படாத மரணங்களும், அதனுடன் தொடர்பான மர்மங்களும் ஏராளமுள்ளன. அவற்றில் பலவற்றினை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரரும் ‘நேதாஜி’ என்று அன்போடு அழைக்கப்படுகின்றவருமான சுபாஷ் சந்திரபோஸின் ‘மரணம்’ என்பது, இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

ஜப்பானின் கட்டுப்பாட்டிலிருந்த பார்மோசா என்ற இடத்தில், 1945ஆம் ஆண்டு நடந்த ஒரு விமான விபத்தில் சுபாஸ் சந்திரபோஸ் இறந்தார் என்றும், அவரின் உடல் தாய்வானில் எரிக்கப்பட்டதாகவும் ஒரு கதை உண்டு. ஆனால், ஏராளமானோர் இதனை நம்பவில்லை. மேலும், இந்தக் கதையை நிரூபிக்கும் படியான எவ்வித ஆதாரங்களும் இதுவரை வெளியாகவுமில்லை.

இன்னொருபுறம், சைபீரியாவிலுள்ள ரஷ்ய சிறையில் சுபாஸ் வைக்கப்பட்டிருந்ததாக வேறொரு கதையும் உள்ளது. இது தவிர, இந்தியாவில் ஒரு சாமியார் போல் தனது அடையாளத்தை மறைத்து சுபாஸ் சந்திரபோஸ் வாழ்ந்து வந்தார் எனவும் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்க – பிரிட்டிஷ் படையினர் தன்னை கைது செய்வதிலிருந்தும் தப்பிப்பதற்காகவே, தான் இறந்து விட்டதாக ஒரு கதையினை சுபாஸ் பரப்பி விட்டார் என்று, அவரைப் பற்றி எழுதப்பட்ட ‘இன்டியாஸ் பிகஸ்ட் கவர்அப்’ (ஐனெயை’ள டீபைபநளவ ஊழஎநச ருp) எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சுபாஸ் சந்திரபோஸுக்கு என்ன நடந்தது என்பதற்கான விடையினை அறிந்து கொள்வதற்கான ஆவணங்கள் இந்திய மத்திய அரசிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவற்றினை இந்திய மத்திய அரசு வெளியிட மறுத்து வருகிறது. சுபாஸ் சந்திரபோஸ் தொடர்பில் தம்மிடமுள்ள ஆவணங்களை வெளியிட்டால், பிற நாடுகளுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவில் பாதிப்புகள் ஏற்படும் என்று, இந்திய மத்தி அரசு கூறிவருகிறது. சுபாஸ் சந்திரபோஸ் தொடர்பிலான 130க்கும் மேற்பட்ட ஆவணங்கள் இந்திய மத்திய அரசிடம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவரும், முன்னைநாள் அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணத்திலும் மர்ம முடிச்சுக்கள் உள்ளன என்று பரவலாகப் பேசப்படுகிறது. அவர் பயணம் செய்த இலங்கை விமானப் படையின் ரஷ்ய நாட்டுத் தயாரிப்பான எம்.ஐ. 17 ரக ஹெலிகொப்டர் வானில் வெடித்துச் சிதறியபோது அஷ்ரப் உயிரிழந்தார். 2000ஆம் ஆண்டு இந்த விபத்து நடந்தது. ஊரகந்த – அரநாயக எனுமிடத்தில் அஷ்ரப்பின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அஷ்ரப் பயணித்த விமானத்தை ஓட்டிவர் கப்டன் ஷிரான் பெரேரா என்பவர். இவர் 7000 மணித்தியாலங்கள் ஆகாயத்தில் பறந்த அனுபவத்தைக் கொண்டவர். அஷ்ரப் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட விமானமோட்டி ஷிரான் பெரேராளூ ‘வானிலை மிகவும் தெளிவாக இருக்கிறது’ என்று கூறியிருக்கின்றார். இந்த நிலையில்தான் அந்த விபத்து நிகழ்ந்தது.

அஷ்ரப் பயணம் செய்த ஹெலிகொப்டர் வெடித்துச் சிதறியது, ஒரு விபத்தாக இருக்க முடியாது என்று, கணிசமான முஸ்லிம்களும், அவரின் கட்சிக்காரர்களும் கூறுகின்றனர். அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் நீடிக்கும் இந்த மர்ம முடிச்சு அவிழக்கப்பட வேண்டும் என, அஷ்ரப்பினால் முஸ்லிம் காங்கிரசுக்குள் அழைத்து வரப்பட்டவரும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றார்.

அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஆணைக்குழுவொன்று அப்போது நியமிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதியரசர் எல்.எச்.ஜி. வீரசேகர என்பவர் அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். மு.காங்கிரசின் தற்போதை தலைவர் ரஊப் ஹக்கீம், அந்தக் கட்சியின் பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட பலர், ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தனர். விசாரணைகளை ஆணைக்குழு நடத்தி முடித்த பின்னர், அதன் அறிக்கையினை அரசிடம் கையளித்தது. ஆனால், இன்று வரை அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், அஷ்ரப்பின் மரணத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட அவரின் மனைவி, மகன் மற்றும் தாய் ஆகியோருக்கு 80 லட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்க வேண்டும் என, மேற்படி ஆணைக்குழு சிபாரிசு செய்தது. இதற்கிணங்க, அஷ்ரப்பின் குடும்பத்துக்கு 70 லட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்குவதற்கு அப்போதைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதனையடுத்து, அஷ்ரப்பின் மனைவி பேரியல் அஷ்ரப்புக்கு 50 லட்சம் ரூபாவும், மகன் அமானுக்கு 20 லட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்கப்பட்டது. அஷ்ரப்பின் தாயாருக்கு இழப்பீடு வழங்க முடியாதென அமைச்சரவை மறுத்துவிட்டது.

அஷ்ரப்பின் மரணம் தொடர்பான இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்ட அவரின் குடும்பத்தார் கூட, அவரின் மரணம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையினை வெளியிடுமாறு வற்புறுத்தவில்லை. மட்டுமன்றி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அந்த அறிக்கையினை வெளியிடச் செய்வதற்குரிய எவ்வித காத்திரமான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கவில்லை. இருந்த போதிலும், குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டுமென அவ்வப்போது சிலர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவற்றினை, ஆட்சியாளர்கள் கருத்தில் எடுக்கவேயில்லை.

இவ்வாறானதொரு நிலையில்தான் 2016ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி, தகவலறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தினூடாக எந்தவொரு பொதுமக்கள் அலுவலகத்திலும் தகவலைப் பெறுவதற்கான உரிமை, ஒவ்வொரு இலங்கையருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், பல்வேறு பிடிகளை தமது கைக்குள் வைத்துக் கொண்டுதான், இந்த சட்டத்தினை ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் என்பதனை, இச் சட்டத்தினை ஆழ்ந்தும், கூர்ந்தும் படிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

தகவல்களை அறிவதற்கான உரிமைச் சட்டம் நமக்குக் கிடைத்து விட்டபோதும், எல்லா வகையான தகவல்களையும் இச் சட்டத்தினூடாக நம்மால் பெற்று விட முடியாது. ஒரு நபரின் தனிப்பட்ட விடயங்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள், நாடாளுமன்ற சிறப்புரிமையை பாதிக்கும் தகவல்கள் மற்றும் ஒருவரின் தனிப்பட்ட மருத்துவ நிலைமைகள் என, 14 வகையான விடயங்களை தகவறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோர முடியாது. அவ்வாறு கோரப்படும் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியும் என, அதே சட்டம் கூறுகிறது.

இதேவேளை, தகவல் அறியும் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னர் ஒரு ஆவணம் இருக்குமாயின் அதனை 10 வருடங்களும், சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் உருவாக்கப்படும் ஒரு ஆவணத்தினை 12 வருடங்களும் பாதுகாக்க வேண்டும் எனவும், தகவலறியும் உரிமைச் சட்டம் வலியுறுத்துகின்றது.

தவலறியும் உரிமைச் சட்டம் அமுலுக்கு வந்தமையினையடுத்து, மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பின் மரணம் தொடர்பான மர்ம முடிச்சுக்களை அவிழ்த்துப் பார்க்கலாம் என்கிற நம்பிக்கை, அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீருக்கு ஏற்பட்டது. எனவே, அஷ்ரப்பின் மரணம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை, தகவறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனக்கு வழங்குமாறு கோரி, மு.கா.வின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி ஜனாபதிபதி செயலகத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.

தகவறியும் உரிமைச் சட்டத்திற்கிணங்க ஒருவர் விண்ணப்பமொன்றினை மேற்கொள்வதாயின், முதலில் குறித்த நிறுவனத்திலுள்ள தகவல் அலுவலருக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். குறித்த தினங்களுக்குள் அவர் தகவலை வழங்காமல் விட்டால் அல்லது விண்ணப்பத்தினை நிராகரித்தால், அந்த நிறுவனத்தின் குறித்தளிக்கப்பட்ட அலுவலகரிடம் முறையிடலாம். அந் நிறுவனத்தின் உயர் அதிகாரி, குறித்தளிக்கப்பட்ட அலுவலகராக தொழிற்படுவார். அவரும் தகவலை வழங்காமல் விட்டால் அல்லது சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்து விட்டால், தகலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் முறையிடலாம். அங்கும் பலன் கிடைக்காமல் போகுமாயின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்.

பசீர் சேகுதாவூத்தின் விண்ணப்பத்துக்குப் பதிலளிக்கும் வகையில், ஜனாதிபதி செயலகத்தில் தகவல் அலுவலராகக் கடமையாற்றும் ஜனாதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரி.ரி. உபுல்மாலி என்பவர் மூன்று கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார். முதலாவது கடிதம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியிடப்பட்டு பசீருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், பசீர் அனுப்பி வைத்த விண்ணப்பம் கிடைக்கப் பெற்றதாகவும், அந்த விண்ணப்பம் தொடர்பான தமது முடிவினை 14 நாட்களுக்குள் அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அலுவலர், மார்ச் 02ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்றினை பசீருக்கு இரண்டாவதாக அனுப்பியிருந்தார். அதில்ளூ அஷ்ரப்பின் மரணம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையானது, தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது என்றும், அதனை மீளப் பெறுவதற்கு தமக்கு கால அவகாசம் வழங்குமாறும் கோரப்பட்டிருந்தது. இதன் பின்னர் அந்த அறிக்கையினை வழங்க முடியாமல் உள்ளதாக பசீருக்கு மற்றொரு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் குறித்தளிக்கப்பட்ட அலுவலகராகச் செயற்படுகின்ற ஜனாபதியின் செயலாளர் பி.பி. அபேகோனுக்கு, தனது விண்ணப்பம் தொடர்பில் பசீர் முறையீடு செய்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோனிடமிருந்து பசீருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டது. அதில்ளூ பசீர் கேட்டிருந்த மேற்படி ஆணைக்குழு அறிக்கையானது 12 வருடங்களுக்கு மேற்பட்டது என்றும், அதனால் அந்த அறிக்கையினை தேடிப்பெற முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டு, பசீரின் விண்ணப்பத்தை நிராகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அடுத்த நடவடிக்கையாக, தகலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் முறையிடுவதற்கான சந்தர்ப்பம் பசீருக்கு உள்ளது. அங்கும் பலன் கிடைக்கவில்லை என்றால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்.

இந்த நிலையில், இது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள பசீர் சேகுதாவூத்ளூ ‘நூற்றாண்டு காலப் பழமையான ஆவணங்களெல்லாம் தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படும் போது, வெறும் 12 வருடங்களேயான எமது தலைவரின் – மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையினை ஏன் வழங்க முடியாது’ என்று கேள்ளியெழுப்பியுள்ளார். மேலும், ‘எனது விண்ணப்பம் குறித்து ஆணைக்குழுவுக்கு முறையீடு செய்வேன்’ என்றும், ‘அங்கும் பயன் கிடைக்கவில்லையாயின் நீதிமன்றினை நாடுவேன்’ எனவும் பசீர் கூறியுள்ளார்.

பி.பி. அபேகோனின் பதிலில், குறித்த அறிக்கையினை கண்டெடுக்க முடியாதுள்ளது என்றுதான் கூறப்பட்டுள்ளது. தவிர, தகவலறியும் உரிமைக்கான சட்டம் அமுலுக்கு வரும் முன்பாக, குறித்த ஆவணம் அழிக்கப்பட்டு விட்டதாகவோ அல்லது வேறெதுவும் காரணங்களின் நிதித்தம் வழங்க முடியாது என்றோ குறிப்பிடப்படவில்லை என்பது இங்கு கவனத்துக்குரியது.

தகவறியும் உரிமைக்கான சட்டத்தின் கீழ் – ஒரு விண்ணப்பதாரி கோருகின்ற தகவலை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தகவல் அலுவலர் மற்றும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர் மறுத்தாலும் கூட, பொதுமக்கள் ஆர்வத்தினைக் கருத்திற் கொண்டு, குறித்த தகவலை வெளிப்படுத்தும் படி, அவர்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் தகலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு உள்ளது.

அஷ்ரப்பின் மரணம் பற்றிய மர்மத்தை அறிந்து கொள்வதற்கு, அவரை நேசிக்கின்ற முஸ்லிம் சமூகமும், அவரின் அரசியல் கொள்கைகளை இன்னும் பின் தொடருகின்ற தொண்டர்களும் பெரும் ஆர்வமாக உள்ளனர் என்பது மறைக்க முடியாத விடயமாகும். ‘எங்கள் தலைவன் எப்படி மரணித்தான்’ என்பதைத் தெரிந்து கொள்வதற்கான தவிப்பு முஸ்லிம் மக்களிடம் இன்னுமுள்ளது. எனவே, ஏக்கம் நிறைந்த இந்த ஆர்வம் கவனத்திற் கொள்ளப்படுதல் அவசியமாகும்.

ஒரு காலத்தில் அரசியல் அநாதைகளாகவும், பெருந் தேசியக் கட்சிகளுக்குப் பின்னால் அலைந்து திரிபவர்களாகவும் இருந்த முஸ்லிம் சமூகத்துக்கு, ஒரு முகவரியைப் பெற்றுத் தந்தவர் அஷ்ரப். அந்தத் தலைவனின் மரணம் மற்றிய மர்ம முடிச்சு அவிழ வேண்டும் என்பதுதான் அஷ்ரப்பை நேசிப்பவர்களின் அவாவாக உள்ளது.

ஆனால், தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தைக் கொண்டு தட்டியும் திறக்க மறுக்கின்றன ‘குகை’க் கதவுகள்.

‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்பது மட்டுமே, அஷ்ரப்பை நேசிப்பவர்களுக்கான ஆறுதல் வார்த்தைகளாக இப்போதைக்கு இருக்கின்றன.

நன்றி: தமிழ் மிரர் (09 மே 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்