அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் நியமனம்: மூக்குடைபட்டார் ‘மாகாணம்’ தவம்

🕔 May 8, 2017

– நவாஸ் –

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபர் பதவிக்கு, தகுதியற்ற ஒருவரை நியமிக்க முயற்சித்து மூக்குடைபட்ட சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபராக கடமையாற்றியவர் ஒய்வு பெற்றுச் சென்றதனால், ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்துக்கு அப்பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றிய மௌலவி மன்சூர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதன் மூலம் பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படத் தொடங்கின.

இந்த நிலையில், அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு அதிபராக ஏ.எல். இக்பால் என்பவரை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை, மாகாண சபை உறுப்பினர் மேற்கொண்டார். இதற்கிணங்க, இக்பால் என்பவர் அதிபர் நியமனக் கடிதமொன்றினையும் பெற்றுக் கொண்டதாக அறிய முடிகிறது.

இதேவேளை, அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு இக்பால் என்பவரை அதிபராக நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்து – கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு பாடசாலை அபிவிருத்திக் குழு எழுத்து மூலம் கடிதமொன்றினை அனுப்பியது.

மேலும் மத்திய கல்வி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

அக்கரைப்பற்று கோட்டத்திலுள்ள 17 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இப்பாடசாலைகளில் அதிபர்களாக கடமையாற்றுகின்றவர்கள், தற்காலிக அடிப்படையிலே நியமிக்கப்பட்டுள்ளனர்.  மேற்படி பாடசாலைகளில் கூட அதிபராக நியமிக்க முடியாத ஒருவரையே, மத்திய கல்லூரிக்கு அதிபராக நியமிப்பதற்கு, மாகாண சபை உறுப்பினர் தவம் ஆர்வம் காட்டியதாக, பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினரொருவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தின் அதிகாரம் ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் கைக்கு சென்றமையினை அடுத்து, மேற்படி இக்பால் என்பவரை அக்கரைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரியாக நியமிப்புச் செய்யவதற்கு தவம் திட்டமிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அவ் வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு மாகாண கல்வி அமைச்சு விண்ணப்பம் கோரியிருந்தது. அதனடிப்படையில் பொருத்தமான ஒருவர் நியமிக்கப்பட்டார். இதனால், கோட்டக் கல்லி அதிகாரியாக தற்காலிகமாகக் கடமையாற்றி வந்த ஏ.எல். இக்பால் அப்பதவியை இழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கல்வி நடவடிக்கைகளுக்கு பொருத்தமற்ற ஒருவரை, இவ்வாறு முக்கிய பதவிகளுக்கு நியமிப்புச் செய்ய முயற்சிப்பதன் மூலம், பிள்ளைகளின் கல்வியினை வீழ்ச்சி அடையச் செய்வதற்கு மாகாண சபை உறுப்பினர் தவம் முயற்சிக்கின்றார் என, அக்கரைப்பற்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது இவ்வாறிருக்க, அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் விடயத்தினை, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிவசத்தின் கவனத்துக்கு – அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் கொண்டு சென்றதுடன், அங்கு தற்காலிக அதிபராக கடமையாற்றி வந்த மௌலவி மன்சூருரை நிரந்தர அதிபராக நியமிக்கச் செய்து, அதற்கான கடிதத்தையும் பெற்றுக்கொண்டனர்.

பாடசாலை அபிவிருத்திக் குழுவின் நடவடிக்கைகளை அறிந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், தான் அதிபராக நிமிக்கவுள்ள ஏ.எல். இக்பால் என்பவரை ஸ்ரீ.ல.மு.காஙகிரஸின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமிடம் அழைத்துச் சென்றிருந்தார். ஆனாலும், ஏவலே ஸ்ரீ.ல.மு.காஙகிரஸின் தலைவருக்கு அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபர் நியமன விடயத்திலுள்ள நியாயங்கள் எடுத்துச் சொல்லப்பட்டிருந்தையால், இவ்விடயத்தில் ஹக்கீம் தரப்பிலிருந்து தவத்துக்கு எவ்வித சமிக்கைகளும் காட்டவில்லை எனவும் அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்