நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள் குழப்பம்; கட்சியின் முடிவு குறித்து மாகாணசபை உறுப்பினருக்கு தெரியாதாம்

🕔 May 6, 2017
– பாறுக் ஷிஹான் –

டக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து அய்யூப் அஸ்மினை மீளழைத்து அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  அறிவித்துள்ள நிலையில், கட்சியின் இத்தீர்மானம் தொடர்பில் தனக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியினை அய்யூப் அஸ்மினிடமிருந்து மீளப் பெற்றுக் கொள்கின்றமை குறித்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை அறிவித்துள்மை குறித்து, அஸ்மினைத் தொடர்புகொண்டு ஊடகவியலாளர் ஒருவர்  கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எனினும் மாகாண சபை உறுப்பினர் அஸ்மினை மீள அழைப்பதற்கான இறுதி முடிவினை மேற்கொண்டுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அதனை ஊடகங்களுக்கு அறிக்கையாக அனுப்பி வைத்துள்ளது.

ஆனாலும், கட்சி மேற்கொண்டுள்ள இந்த முடிவு குறித்து, தனக்கு எதுவும் தெரியாது என்றும்,  கட்சிதான் இறுதி  முடிவு செய்ய வேண்டும் எனவும் அய்யூப் அஸ்மின் கூறி வருகின்றமை தொடர்பாக   சமூக ஊடகங்களில்   விமர்சனங்கள் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணசபைக்கான தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, வடக்கு மாகாணசபையில், தமிழ் தேசிய கூட்டமைப்பானது, தமக்குக் கிடைத்த போனஸ் ஆசனமொன்றினை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு வழங்கியது.

மேற்படி ஆசனத்துக்கு அய்யூப் அஸ்மினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நியமித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்