மலையேறும் பேய்களும், பேயோட்டும் மந்திரமும்

🕔 May 2, 2017

ள நிலைவரத்தை மேலும் சூடேற்றுவதற்காக, தாம் வகுத்து வைத்திருந்த திட்டத்தின் பிரகாரம், கடந்த செவ்வாய்கிழமையன்று மாயக்கல்லி மலையடிவாரத்துக்கு வந்திறங்கினார் ஞானசார தேரர். தங்கள் ‘கதாநாயகன்’ களத்தில் இறங்கி விட்டதால், மாயக்கல்லி விவகாரத்தில் ஏற்கனவே ‘மலை’யேறியுள்ள ‘பேய்’களுக்கு பெருத்த கொண்டாட்டமானது.

மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், அம்பாறை கச்சேரியில் அரசாங்க அதிபரையும் ஞானசார தேரர் சந்தித்தார். அங்கு உயர் மட்டக் கூட்டமொன்றும் நடைபெற்றது. அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் மாகாண காணி ஆணையாளர் டீ.டீ. அனுர தர்மதாச, மாவட்ட உதவி காணி ஆணையாளர் டீ.டீ.எஸ். தக்ஷிலா குணரத்ன, இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர், மாவட்ட நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், தீகவாபி மாணிக்கமடு பரிவார சைத்திய ரஜமகா விகாரையின் மகாநாயக்க அம்பகஹபிட்டியே சீலரத்ன தேரர், சிங்கள ராவய மற்றும் சிங்ஹலே அமைப்புக்களின் தேரர்கள் உள்ளிட்டோர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அரசாங்கத்தின் உயர் தலைவர் ஒருவரைப் போன்று, அங்கு ஞானசாரர் நடந்து கொண்டார். அரசாங்க அதிபருக்கு ஞானசார தேரர் உத்தரவுகளைப் பிறப்பித்தார். அவை அனைத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாத செயற்பாடுகள் மறக்க முடியாதவை. அவருடைய தோல்விக்கு அதுவே பிரதான காரணமானது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை, ஞானசார தேரர்தான் முன்னின்று நடத்தினார். இது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். அதனால்தான், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஞானசார தேரரைப் பிடித்து நாய்க் கூட்டில் அடைப்போம்’ என்று, கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காக பண்டாரநாயக்க குமாரதுங்க கூறினார். முஸ்லிம்களின் வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பக்கம் திருப்புவதற்காக, அவர் அப்படிக் கூறியிருந்தார்.

யாரை நாய்க் கூட்டில் அடைப்போம் என்று சந்திரிகா கூறினாரோளூ அதே மனிதரை, மைத்திரிபால சிறிசேன அழைத்து பேசுகின்றார். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் அந்த மனிதர் நடந்துகொண்டமைக்கு சற்றும் குறைவில்லாமல், நல்லாட்சியிலும் நடந்து கொள்கின்றார். நீதிமன்ற உத்தரவுகளைக் கிழித்து எறிகின்றார், அரச அதிகாரிகளை அழைத்து உத்தரவு பிறப்பிக்கின்றார். அப்படியாயின் இதற்கு அர்த்தம்தான் என்ன என்பதை விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக யாரும் இருக்க முடியாது.

‘நல்லாட்சி’ என்பது உண்மையில் ‘நல்ல ஆட்சியே இல்லை’ என்பதை முஸ்லிம்கள் உணரும் தருணங்கள் வெளிப்பட்டு வருகின்றன. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தவை, மைத்திரி ஆட்சியிலும் நடைபெற்று வருகின்றன. பள்ளி வாசல்கள் தாக்கப்படுகின்றன, முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன, முஸ்லிம் பிரதேசங்களில் அடாத்தாக புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் ஆட்சியாளர்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், இதை எப்படி நல்லாட்சி என்று அழைக்க முடியும்.

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையை அடாத்தாக வைத்து 06 மாதங்கள் கடந்து விட்டன. இப்போது மலையடிவாரத்திலுள்ள முஸ்லிம்களின் காணிகளில் விகாரையமைக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாயக்கல்லி மலை அமைந்துள்ள மாணிக்கமடு – தமிழர்கள் வாழும் கிராமமாகும். இறக்காமம் பிரதேச செயலகப்பகுதியில் மாணிக்கமடு அமைந்துள்ளது. இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். எவ்வாறாயினும், மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிராக, தமிழ் அரசியல்வாதிகள் எவரும், இதுவரையில் குறிப்பிடத்தக்க எதிர்ப்புகளை வெளிப்படுத்தவில்லை என்பது கசப்பான உண்மையாகும். தமிழ் அரசியல்வாதிகளின் இந்த மௌனம் – முஸ்லிம்கள் மத்தியில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளமையினையும் இங்கு பதிவு செய்தல் வேண்டும்.

இந்த நிலையில்தான், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தனை அழைத்துக் கொண்டு, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஜனாதிபதியை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேற்படி இருவரும் மாயக்கல்லி மலை விவகாரம் குறித்து ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியமை தொடர்பாக, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தனது விமர்சனமொன்றினைப் பதிவு செய்துள்ளார். ‘அரசாங்கத்தினதும், தந்திரோபாயம் வகுக்கும் பௌத்த தீவிரவாதிகளினதும் உபாய நகர்வுகளை உணராத அல்லது ஆய்வுக்கு உட்படுத்தி எதிர் உபாயங்களை வகுக்க நாதியற்ற மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், ரா. சம்பந்தனும், ஜனாதிபதியைச் சந்தித்து மாயக்கல்லி மலை விவகாரத்தில் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்’ என்று பஷீர் சேகுதாவூத் விமர்சித்துள்ளார். மேலும், ‘ஜனாதிபதி ஏற்கனவே தலையிட்டுத்தான் மாயக்கல்லி மலையில் ‘சூனியம்’ வைக்கப்பட்டுள்ளது என்பதை ஊகிக்க நாதியற்றவர்களாகவா மேற்படி சிறுபான்மை அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளனர்’ என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பஷீர் சேகுதாவூத்தின் இந்தக் கேள்வி கவனிப்புக்குரியது. மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியின் செயலாளர் ஒருவர், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் பின்னணி இதுதான். அதாவது, மாயக்கல்லி மலை அடிவாரத்தில் பௌத்த பேரினவாதிகள் தற்போது விகாரையொன்றினை அமைக்க முயற்சிக்கின்றனர். அதற்காக மலையடிவாரத்திலுள்ள முஸ்லிம்கள் இருவரின் காணிகளை அபகரிக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அதற்கு காணியின் சொந்தக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், குறித்த காணிக்குரிய அனுமதிப்பத்திரம் பொய்யானது எனத் தெரிவித்து, அந்தக் காணிகளை விகாரையொன்றினை அமைப்பதற்காக வழங்குமாறு கோரி, அம்பாறையிலுள்ள பௌத்த பிக்கு – ஜனாதிபதி செயலகத்துக்கு கடிதமொன்றினை எழுதியிருந்தாகக் கூறப்படுகிறது. இந்தக் கடிதத்துக்கு இணங்க, ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த ஜனாதிபதி செயலாளர் ஒருவர், தொல்பொருள் திணைக்களத்துக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்ளூ ‘குறித்த காணியின் அனுமதிப்பத்திரம் பொய்யானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட காணியை விகாரையமைப்பதற்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு’, ஜனாதிபதியின் மேற்படி செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இது இப்படியிருக்க, இவ்வாறானதொரு கடிதம் – ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனது செயலாளர் ஒருவரால் அனுப்பப்பட்டமை குறித்து, தான் அறிந்திருக்கவில்லை என்று, ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோரிடம் ஜனாதிபதி மைத்திரி தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மாயக்கல்லி மலை விவகாரம் – தற்போது சூடானதொரு பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ் ஊடகங்கள் மட்டுமன்றி, சிங்கள ஊடகங்களும் இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவமளித்து வருகின்றன. கணிசமான சிங்கள ஊடகங்கள்ளூ ‘மாயக்கல்லி மலையடிவாரத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்கு முஸ்லிம்கள் தடையாக உள்ளனர்’ என்கிற தொனியில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எனவே, மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அறியாதவராக இருக்க முடியாது. இது இன முறுகலை தோற்றுவித்துள்ள விடயம் என்பதால், இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் ஜனாதிபதி கண்டும் காணாதவர் போலவே இருந்து வருகின்றார். போதாக்குறைக்கு, மிகவும் ‘சீரியசான’ மேற்படி விவகாரம் தொடர்பில், தனது செயலாளர் கடிதமொன்றினை எழுதியமை குறித்து, தனக்கு எதுவும் தெரியாது என்று, மிகவும் ‘சிம்பிளாக’ ஜனாதிபதி பதிலளித்துள்ளமை ஆச்சரியமாக உள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், இறக்காமம் பிரதேசத்துக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சென்றிருந்தார். மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பாக இதன்போது மு.கா. தலைவருக்கும், இறக்காமம் பிரதேச மக்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது மு.கா. தலைவரிடம் மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை மக்கள் எழுப்பியிருந்தனர். ‘ஜனாதிபதியை நீங்கள் சந்தித்த போது, மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் உங்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் என்ன’ என்று ஹக்கீமிடம் மக்கள் கேட்டபோது, அதற்குரிய பதிலை ஹக்கீம் வழங்கவில்லை.

மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், இளக்காரமான தமது அரசியல் தலைவர்களை முஸ்லிம் மக்கள் நம்பிக் கொண்டிருப்பதில் பயன்களேதும் இல்லை. இந்தப் பிரச்சினை குறித்து, அப்பகுதி முஸ்லிம் மக்கள் கொண்டுள்ள ஆத்திரமும், ஆவேசமும் தங்கள் மீது திரும்பி விடக்கூடாது என்பதற்காக, இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது ‘தலைக்கு எட்டியவற்றினையெல்லாம்’ பேசியும், செய்தும் கொண்டிருக்கின்றனர்.

மாயக்கல்லி மலைப் பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைப்பதற்கு பலவந்தமாக மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோவிடமும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதனையடுத்து, மு.காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி ஊடகங்களுக்கு தவலொன்றினைத் தெரிவித்திருந்தார். ‘ஆளுநருடன் மு.கா. தலைவர் பேசியதாக வெளிவந்த அந்தச் செய்தியைப் படித்ததும், கிழக்கு மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு பேசினேன். இதன்போது, மயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரையொன்றினை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கோ அதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ தனக்கு எந்த அதிகாரமுமில்லை என்று, கிழக்கு மாகாண ஆளுநர் என்னிடம் கூறினார்’ என்று, ஊடகங்களுக்கு ஹசனலி தெரிவித்திருந்தார். அப்படியென்றால், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எவ்வித அதிகாரங்களும் கிடையாது என்பதை சட்ட முதுமானியான மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அறிந்திருக்கவில்லையா என்கிற கேள்வி இங்கு எழுகிறல்லவா? அப்படி ஹக்கீம் அறிந்திருந்தால், விகாரை அமைப்பதை தடுப்பதற்கு அதிகாரமற்ற ஆளுநரிடம், அந்த செயற்பாட்டினை தடுத்து நிறுத்துமாறு எதற்காக கோரிக்கை விடுத்தார் என்று கேட்கவும் தோன்றுகிறதல்லவா?

அம்பாறை மாவட்டத்துக்கு கடந்த செவ்வாய்கிழமை வருகை தந்த பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர்ளூ ‘மே இரண்டாம் திகதி (இன்றைய தினம்) மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரையமைப்பதற்கான அடிக்கல்லினை நடுவோம்’ என்று கூறியிருந்தார். மேலும், மலையடிவாரத்திலுள்ள முஸ்லிம்களின் காணிகளை விகாரையமைப்பதற்காக சுவீகரிக்குமாறும், தேவையெனில் மாற்றுக் காணிகளை, சுவீகரிக்கப்படும் காணிகளின் உரிமையாளர்களுக்கு வழங்குமாறும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஞானசார தேரர் உத்தரவிட்டிருந்தார் (ஆமாம், உத்தரவுதான்). இதேவேளை, சர்ச்சைக்குரிய மாயக்கல்லி மலையடிவாரப் பகுதியினுள் மே மாதம் 17 ஆம் திகதி வரை, யாரும் நுழையக் கூடாது என கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை, நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையில்தான், அந்த தடையுத்தரவை மீறி, கடந்த செவ்வாய்கிழமை மாயக்கல்லி மலையடிவாரப் பகுதிக்குள் ஞானசார தேரர் தனது பரிவாரத்தினருடன் நுழைந்தார். அவருடன் பொலிஸ் உயர் அதிகாரிகளும் அங்கு வருகை தந்திருந்தனர். ஞானசாரர் விடயத்தில், மாயக்கல்லி மலையடிவாரத்திலும் சட்டம் தன் கடமையைச் செய்யாமல் திகைத்து நின்றதை, அங்கு காண முடிந்தது.

மாயக்கல்லி மலை விவகாரத்தில் ஞானசார தேரர் களமிறங்கிமையானது, எழுந்தமானமாக நடந்ததல்ல. மாயக்கல்லி மலையினையும் அதனைச் சுற்றியுள்ள சிறுபான்மை மக்களின் இடங்களையும் பௌத்தத்தின் அடையாளங்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புச் செய்யும் திட்டம், நீண்ட காலங்களுக்கு முன்னர் வகுக்கப்பட்டது என்பதை, நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளுக்கு ஆட்சித் தலைவர்களின் ஆசிர்வாதங்கள் இல்லாமலிருக்க முடியாது.

எனவே, மலையேறும் இந்தப் பேய்களை, ஆட்சியாளர்களின் உதவிகளுடன் விரட்டி விடலாம் என்று மக்கள் நம்புவது அப்பாவித்தனமானதாகும்.

பேரினவாதக் கூச்சல்களுடன் மலையேறும் பேய்களை ஓட்டுவதற்குரிய ‘மந்திரத்தை’ தமிழர்கள் மிக நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்கள்.

அதனால்தான், தமது ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை, அந்த மக்களால் மீட்டெடுக்க முடிந்துள்ளது.

பேய்களை விரட்டும் அந்த ‘மந்திரத்தை’, தமிழர்களிடம் முஸ்லிம்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்