இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம்

🕔 April 27, 2017

– அஹமட் –

ட்சியில் பங்குதாரர்களாக இருக்கின்றோம் எனச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரசினர், இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாக கூறுகின்றமையானது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என  அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி ஏ. கபூர் தெரிவித்துள்ளார்.

மாயக்கல்லி மலையடிவாரத்தில் பௌத்த விகாரையொன்று அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிராக மு.காங்கிரசை சேர்ந்த அக்கரைப்பற்று அரசியல்வாதியொருவர் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்வதற்கான முஸ்தீபுகளை மேற்கொண்டு வருகின்றமை தொடர்பிலேயே, மேற்கண்ட விடயத்தை அஸ்மி  கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் பணத்துக்காகவும் பதவிக்காகவும் அடகு வைத்து வியாபாரம் செய்து வரும், முஸ்லிம் காங்கிரசின் சாயம் மேலும் வெளுத்துப் போயுள்ளது.

அத்தோடு, மக்களின் உணர்வுகளின் மீதேறி சவாரி செய்து, அற்பத்தனமான அரசியல் நடத்திவரும் மு.கா. தலைவரின் கோரமான முகம், இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

மாயக்கல்லி மலையில் பௌத்த சிலையினை வைத்துள்ளதோடு, அங்கு விகாரையொன்றினையும் அமைக்க முயற்சிப்பதன் மூலம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தீகவாபிக்கு சொந்தமான நிலத்தில்தான்  கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான முஸ்லிம் பிரதேசங்கள் அமைந்துள்ளன என்று அமைச்சர்  தயா கமகே மிகப் பகிரங்கமாக கூறியபோது, மு.காங்கிரசின் தலைவரும் அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகளும் வாய் மூடிக் கிடந்தார்கள்.

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட போது, அங்கு வந்து சென்ற மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்; குறித்த சிலையை இரண்டு வாரங்களில் அகற்றுவதாக பிரதமர் வாக்குறுதியளித்துள்ளதாகக் கூறினார். ஆனால், சிலை வைக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் எதுவும் நடக்கவில்லை.

ஜனாதிபதியுடனோ, பிரதமருடனோ பேசி, மேற்சொன்ன புத்தர் சிலையினை அகற்றுவதற்கு வக்கற்ற மு.கா. தலைவர்; மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை நிர்மாணிக்கப்படுவதற்கு எதிராக எதைத்தான் செய்து விடப்போகிறார்.  பெற்றுக் கொண்ட பணத்துக்காகவும் பதவிக்காகவும் மேலும்,  சிங்கள வாக்காளர்களைப் பகைத்துக் கொண்டு கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது என்பதனாலும்,  பொத்திக் கொண்டு இருப்பதைத் தவிர மு.கா. தலைவருக்கு வேறு வழிகள் எவையும் கிடையாது.

மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அம்பாறைக்கு வந்து, அரசாங்க அதிபரை அச்சுறுத்தும் வகையில், கூட்டம் நடத்தி பேசி விட்டுச் சென்றிருக்கின்றார். இந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி, அதில் அமைச்சர் பதவி வகிக்கும் மு.கா. தலைவருக்கு, இது விடயத்தில் ஏன் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று என மக்கள் கேட்கின்றார்கள்.

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும், அதற்காக குரல் கொடுக்க வேண்டிய தேவைகளும் எக்கச்சக்கமாக இருக்கும் போது,  காணாமல் போனவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை நடத்தும் ஹர்த்தாலுக்கு,  தானும் ஆதரவு என்று மு.கா. தலைவர் முண்டியடித்துக் கொண்டு கை தூக்குவது கோமாளித்தனமானதாகும். ஆனாலும், இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவளித்தமையானது, மு.கா. தலைவரின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம்தான் என்பதையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாண முஸ்லீம்கள் தொடர்பில் ஹக்கீமுக்கு  கரிசனையில்லை. புலிகளால்  முஸ்லீம்கள் காணாமல் ஆக்கப்பட்டதன் வலி – ஹக்கீமுக்குப் புரியாது.  கிழக்கு முஸ்லிம்களின் காணி பிரச்சினை தீர்ந்தபாடில்லை. புலிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் இல்லை. ஆனால், இந்தப் பிரச்சினைகளில் ஒன்றை முன்வைத்தேனும் ஹர்த்தால் நடத்த வேண்டுமென ஹக்கீமுக்கு தோன்றவேயில்லை.

இந்த நிலையில், மாயக்கல்லி மலை விவகாரத்துக்கு எதிராக,  இன்றைய தினம் ஹர்த்தால் மேற்கொள்ளுமாறு மு.கா.வின் முகவரொருவர் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு, தமிழர்களின் ஹர்த்தாலில் நனைய முயற்சித்தார்.  ஆனால், அது பலிக்கவில்லை.

இதனையடுத்து, மாயக்கல்லி மலை விவகாரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும், அக்கரைப்பற்று பிரதேச செயலாளருக்கு  அது தொடர்பில் மகஜர் ஒன்றினைக் கையளிக்கப் போவதாகவும், மு.கா.வின் அக்கரைப்பற்று அரசியல்வாதியொருவர் குசுகுசுத்துத் திரிவதாக அறிகின்றோம்.

இது என்ன கூத்து என்று புரியவேயில்லை.

ஆட்சியை உருவாக்கியவர்கள் என்றும், ஆட்சியின் பங்காளிகள் என்றும், ஜனாதிபதியை உருவாக்குவதில் முக்கிய பங்குவகித்தவர்கள் என்றும் கூறுகின்றவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர். இவர்களின் கையில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முதலமைச்சர், மாகாண அமைச்சர், நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பனர்கள் என்று ஏகப்பட்ட அதிகாரங்கள் உள்ளன. இப்படியிருக்கையில், ஹர்தால் என்றும் ஆர்ப்பாட்டம் என்றும் மக்களை சூடாக்கி, மாயக்கல்லி மலையிலும் ஏன் அரசியல் லாபம் தேட வேண்டும்.

எதிரணியினர் செய்ய வேண்டியதை, ஆளுங்கட்சியின் பங்காளிகள் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் செய்யப் போவதாகச் சொல்லிக் கொள்கிறீர்களே, வெட்கமில்லையா?

உங்கள் ஆர்ப்பாட்டத்தின் மூலம்,  உங்கள் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய கையாலாகாத்தனத்தை பட்டா போட்டு விற்கப் போகிறீர்களா?

இன்றைய ஹர்த்தாலுக்கு மு.காங்கிரஸ் ஆரவு வழங்கியும் கூட, முஸ்லிம் மக்கள் அதனைப் புறக்கணித்தமையின் ஊடாக, மு.கா. அரசியல்வாதிகளுக்கு சொன்ன செய்தி என்ன தெரியுமா?

இன்று போ; நாளை வராதே!

Comments

புதிது பேஸ்புக் பக்கம்