ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மூடப்படுகிறது: மஹிந்த திறந்ததை, நல்லாட்சி பறிக்கிறது

🕔 April 25, 2017

லுவில் துறைமுகத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துவதன் மூலம், அந்தத் துறைமுகத்தை மூடவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை நிருவகிப்பதற்கு ஏற்படும் தாங்க முடியாத செலவு காரணமாகவே, அந்தத் துறைமுகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த துறைமுகத்தை நிருவகிப்பதற்கான போதிய நிதி இல்லாமையினை அடுத்து, அமைச்சருக்கும் அமைச்சு அதிகாரிகளுக்குமிடையில்,  துறைமுக செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஒலுவில் வர்த்தகத் துறைமுகம் மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகியவை 2008ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆயினும், 2013ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – இந்தத் துறைமுகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

எவ்வாறாயினும் ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் போது சரியான சுற்றுச் சூழல் மதிப்பீடு மற்றும் சாத்தியக் கூற்றறிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று, அமைச்சு அதிகாரிகள் தற்போது தெரிவிக்கின்றனர்.

மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சின் பேச்சாளர் தர்ம வன்னிநாயக இது குறித்து தெரிவிக்கையில்; “துறைமுகத்தின் வாய் பகுதியை 40 மில்லியன் மீற்றர் கியுப் மண் மூடியிருந்தது. இதனை அகற்றுவதற்காக 350 மில்லியன் ரூபாவினை அமைச்சு செலவிட்டது. ஆயினும், இரண்டு மாதங்களுக்குள் அந்த இடத்தை மீண்டும் மண் மூடிவிட்டது” என்றார்.

ஒலுவில் மீன்பிடி துறைமுத்தினை மூடுவது குறித்து-  துறைமுக அதிகாரசபை, மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனம் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியற்றுடன் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சு கலந்துரையாடலொன்றினை நடத்தியது. இதன்போது, குறித்த துறைமுகத்தை திறந்து வைத்திருந்ததில் எவ்வித லாபமும்  இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஒலுவில் மீன்பிடி துறைமுத்தை மூடுவது குறித்து, அரசாங்கத்துடன் அமைச்சர் பேசவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்