பிரதேச செயலாளர் ஹனீபாவின் இடமாற்றம், அட்டாளைச்சேனைக்கு பெரும் இழப்பு: கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

🕔 April 19, 2017

– எம்.ஜே.எம். சஜீத் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஐ.எம். ஹனீபா இடம் மாறி சென்றமையினால், அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்று, கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

“மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்ற அதிகாரிகளின் மனம் புன்படாத வகையில் நாம் செயற்பட வேண்டும்.  சமூகத்துக்காக சேவையாற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கின்ற மக்களாக அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் திகழ வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பையின் தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கடந்த 06 வருடகாலமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய ஐ.எம். ஹனீபா, சிறந்த ஆழுமையுடன் செயற்பட்டு இப்பிரதேசத்தில் வாழும் மூவின மக்களினதும் நன்மதிப்பை பெற்றார். அவர் ஒரு சிறந்த அதிகாரியாவார்.

இப்பிரதேசத்தில் வாழும் மூவின மக்களினதும் இன ஒற்றுமைக்கு, செயலாளர் ஹனீபா பாரிய பங்காற்றினார். இப்பிரதேசத்தின் ஏழை மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்.

அவ்வாறானதொரு சிறந்த பிரதேச செயலாளர் இடமாறி சென்றமையினால், அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. இவர் இலங்கை நிருவாக சேவையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார். கடந்த காலங்களில் அட்டாளைச்சேனை பிரதேசம் எதிர்நோக்கிய பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் தியாகத்துடன் ஹனீபா சேவையாற்றினார்.

விசேடமாக, ஒலுவில் துறைமுகப் பிரச்சினை, காணிப்பிரச்சினை மற்றும் அஷ்ரப்நகர் காணிப்பிரச்சினை போன்றவற்றுக்கு முகம்கொடுத்து அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, தீகவாபி, ஆலம்குளம், சம்புநகர் மற்றும் திராய்க்கேணி ஆகிய பிரதேசங்களில் வாழும் மூவின மக்களுடனும், இப்பிரதேசத்தின் அரசியல் தலைவர்களுடனும், சமய தலைவர்கள் பிரமுகர்களுடனும் நீண்டகாலமாக புரிந்துணாவோடு செயற்பட்டு நெருக்கமான உறவுகளைப் பேணி  வந்தார்.

மேலும், இப்பிரதேசத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பாரிய பங்கினை வழங்கியதுடன், உயர் அதிகாரிகளுடனும் சிறந்த உறவினைப் பேணி அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வறிய மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கும் உதவி செய்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய ஹனீபா கடந்த 2013ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கான கடிதத்தினை பெற்றிருந்தபோது, அட்டாளைச்சேனைப் பிரதேச மக்களின் நன்மை கருதி முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான அதாஉல்லாவும், நானும் இணைந்து அரசியல் அதிகாரத்தினை பயன்படுத்தி, அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் நன்மைக்காக பிரதேச செயலாளர் ஹனீபாவுடைய இடமாற்றத்தினை நிறுத்தினோம்.

எங்களின் நடவடிக்கையினால் பிரதேச செயலாளர் ஹனீபா எங்களோடு முரண்பட்ட நிலையில் இருந்தார். இருந்த போதும் மக்களுக்கு பணியாற்றுகின்ற சிறந்த அதிகாரியின் சேவையினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் நாம் செயற்பட்டோம். இதனால் நமது பிரதேசம் அபிவிருத்தி செயற்பாட்டிலும், நிருவாக ரீதியிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று விளங்கியது.

மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்ற அதிகாரிகளுடன், அவர்களுடைய மனம் புண்படாத வகையில் நடக்க வேண்டும்.  நமது சமூகத்துக்காக, சேவையாற்றியமைக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்ற மக்களாகவும் நமது பிரதேச மக்கள் திகழ வேண்டும்” என்றார்.

தொடர்பான செய்திகள்:

01) அமைச்சரின் அடாவடியும், அட்டாளைச்சேனையின் அவலமும்: மக்கள் பாடம் புகட்ட வேண்டுமென அக்கறையாளர்கள் கோரிக்கை

02) பிரதேச செயலாளர் ஹனீபாவின் தற்காலிக சேவையிழப்பு குறித்து அட்டாளைச்சேனை பொதுமக்கள் கவலை; கடமைக்கு திரும்புமாறும் கோரிக்கை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்