பொத்துவிலில் ஒரு கிணறு அமைக்க 13 கோடிக்கு மேல் செலவானதாம்: ஹக்கீம் கூறிய கணக்கினால், மக்கள் அதிர்ச்சி

🕔 April 7, 2017

– முஸ்ஸப் அஹமட் –

பொத்துவில் பிரதேசத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையினைத் தீர்க்கும் பொருட்டு, அங்கு ஐந்து கிணறுகளை அமைத்துள்ளதாகவும், அதற்காக தனது நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சிலிருந்து 670 மில்லியன் ரூபாவினை செலவு செய்ததாகவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ள கணக்கு, மக்களிடையே பாரிய அதிர்ச்சியினையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்படி தகவலைத் தெரிவித்தார்.

“ஏற்கனவே இங்கிருந்த ஐந்து கிணறுகளை மூடிவிட்டு, புதிதாக 05 கிணறுகளைத் தோண்டினோம். என்னுடைய அமைச்சிலிருந்து 670 மில்லியன் ரூபாய்களை அதற்காக நான் செலவளித்திருக்கிறேன். சாதாரணமாக, இவ்வாறான பெரிய தொகையினைச் செலவு செய்து இவ்வாறு கிணறுகளை நாம் தோண்டுவதில்லை. இந்தக் கிணறுகளை மிக ஆழமாகத் தோண்டியிருக்கிறோம். இருந்தும் இந்தப் பிரதேசத்தின் வறட்சி, மிக மோசமாக உள்ளமையினால், அந்தக் கிணறுகளிலும் போதியளவு தண்ணீர் கிடைக்கவில்லை” என்று, தனது உரையில் மு.கா. தலைவர் ஹக்கீம் விபரித்தார்.

எவ்வாறாயினும், 05 கிணறுகளை நிர்மாணிக்கும் பொருட்டு, 670 மில்லியன் ரூபாவினை செலவு செய்துள்ளதாக, அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ள கணக்கு, மக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கணக்கின் படி, ஒரு கிணற்றினை தோண்டுவதற்கு 134 மில்லியன் ரூபாய் (13.4 கோடி ரூபாய்கள்) செலவாகி இருக்க வேண்டும்.

இந்த நிலையில், கிணறு ஒன்றினை நிர்மாணிப்பதற்கு இவ்வாறானதொரு பெருந்தொகை நிதி செலவாகியிருப்பது சாத்திம்தானா என்கிற கேள்வி, மக்களிடையே எழுந்துள்ளது.

இதனையடுத்து, பொத்துவிலில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி கிணறுகளுக்கு, செலவிடப்பட்ட நிதி தொடர்பான விபரங்களை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் சில தரப்புகள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்