நான்கு தடவை மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது: தென்கிழக்கு பல்லைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு

🕔 April 4, 2017

– எம்.வை. அமீர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் பதவியை பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை, தன்னையும் தனது குடும்பத்தையும் கொலைசெய்வோம் என அச்சுறுத்தி, நான்கு அநாமோதய கடிதங்கள் தனது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தின் 19வது வருடாந்த ஒன்றுகூடல், அண்மையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட கேட்போர் கூடத்தில் ஊழியர்சங்க தலைவர், யாசீன்பாவா முபாறக் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பேராசிரியர் நாஜீம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“நான் இங்கு நேர்மையான உபவேந்தராக கடமையாற்றுவதன் காரணமாகவும், களவுசெய்ய விடவில்லை என்பதற்காகவும், கொலன்னாவையில் உள்ள பாதாள உலக பயங்கரவாதிகளை பயன்படுத்தி என்னுடைய பிள்ளைகளை கடத்தப்போவதாகவும் எங்களை கொலை செய்யபோவதாகவும் அச்சுறுத்துகின்றார்கள்.

இலங்கையில் உபவேந்தர் பதவி என்பது நாட்டிலுள்ள ஏழாவது பிரஜை என்கின்ற அந்தஸ்த்திலுள்ளது. ஆனாலும் நான் அவ்வாறானதொரு அமைப்பில் செயப்படவில்லை. இன்றையதினம் ஊழியர்கள் கடமை விடுமுறையுடன் நிகழ்வில் பங்குகொண்டிருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் வந்து என்னுடைய அறையை திறக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சிலர் தங்களது அறைகளையும் விரிவுரை மண்டபங்களையும் திறக்க ஆட்கள் வேண்டும் என்று கோரினார்கள். இருந்தபோதும் என்னைப் பொறுத்தமட்டில் என்னுடைய அலுவலகத்தை நானே திறந்து என்னால் கடமையாற்றமுடியும்.

வீட்டில் கழிவறைகளை சுத்தம் செய்வதிலிருந்து அவசர திருத்த வேலைகளையும் நானே செய்வதுண்டு. இங்கு தங்களுடைய பணிகள் வரையறுக்கப்பட்டது என சிலர் நினைத்துள்ளனர். அதற்குமேல் எதனையும் செய்ய மாட்டேன் என தீர்மானித்துள்ளனர். அது அவர்களின் விருப்பம். நான் அவ்வாறு இருக்கப்போவதில்லை. இது என்னுடைய பல்கலைக்கழகம் என்று, ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். எங்களுடைய பல்கலைக்கழகம் என்பதை மனதில் கொள்ளவேண்டும். இந்த பல்கலைக்கழகம் இன்று இருப்பதைவிட நாளை இன்னும் சிறப்பாக இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.

உபவேந்தர் என்ற பணியை நான் மிகுந்த உளச்சுத்தியுடன் செய்து வருகிறேன். அவ்வாறு நான் செயற்படும்போது சிலர் பாதிக்கப்படுகின்றனர். கடமை நேரத்தில் வெளியே செல்வது தொடர்பில் எடுத்த இறுக்கமான நடவடிக்கையால், தற்போது அவர்கள் பல்கலைக்கழகத்துக்கு நன்மை பயக்கும் வகையில் செயற்படுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இறைபொருத்தத்துடன் செயற்படுகின்றனர்.

ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்குவதில் நான் மிகுந்த கரிசனையுடன் செயற்படுகிறேன். நான் எடுத்த சில முன்னெடுப்புக்கள் ஊழியர் நலன்கள் சார்ந்ததாகவே இருந்தன. சிலர் சில இடங்களில் கூடிக்கொண்டு எனக்கு எதிராக பேசுவதில், எனக்கு கவலையில்லை. இந்த பல்கலைக்கழகத்தைப்பற்றி பேசி அதற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம். மற்றைய பல்கலைக்கழகங்கள் போல் அல்லாது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தரை, தேவை கருதி எப்போதும் சந்திக்கலாம். என்னை சந்திப்பதற்கு அனுமதி எடுத்துக்கொண்டு வரத்தேவையில்லை. நான் அலுவலகத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் எப்போதும் சந்திக்க முடியும். அவரவரது வேலைகளை சுதந்திரமாக செய்யமுடியும். அவற்றில் நான் தலையிடுவதில்லை.

ஊழியர் சங்கத்துக்கு யார் தலைவராக இருக்கிறார் என்பது எனக்குப் பிரச்சினையில்லை. எனக்கு எந்த குழுவும் இல்லை. யார் வந்தாலும் அவர்களுடன் இணைந்து செயற்படுவேன்.

பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக பொறுப்பேற்றதிலிருந்து அநாமோதய கடிதங்களுக்கு என ஒரு பெட்டி வைத்துள்ளேன். அது நாளுக்குநாள் நிறைந்து வருகிறது. இவற்றில் எனக்கு எதிராகவும் என்னை நேசிப்பவர்களுக்கு எதிராகவும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளுடன் கூடிய கடிதங்கள்தான் அதிகமாக உள்ளன. கவலையான விடயம் என்னவென்றால் இவ்வாறான கடிதங்களை எழுதுபவர்கள் எங்களைச் சேர்ந்தவர்கள்தான்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்