கிண்ணியாவுக்கு தரமான வைத்தியசாலை, நிரந்தர இடத்தில் கிடைக்கும்: அமைச்சர் றிசாத் அறிவிப்பு

🕔 March 22, 2017

 

– சுஐப் எம் காசிம் –

கிண்ணியா வைத்தியசாலையை நிரந்தரக் கட்டிடத்தில் தரமான வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித தன்னிடம் உறுதியளித்தார் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று புதன்கிழமை காலை தெரிவித்தார்.

கிண்ணியா பொது நூலகத்தில் டெங்கு பாதிப்புக்கள் குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே, அவர் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் இந்தக் கூட்டத்தில் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுஸைன் பைலா, டொக்டர் ஹில்மி மஹ்ரூப், மருத்துவ உயர் அதிகாரிகள், பொலிஸ் மற்றும் முப்படையினர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது அமைச்சர் றிசாத் மேலும் தெரிவிக்கையில்;

“கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்புக்களின் நிலவரங்களை ஆராய்வதற்காக கடந்தவாரம் இங்கு விஜயம் செய்து நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டோம்.

இந்த மக்களின் துயரங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் நேற்றும் விஷேடமாக சந்தித்து நிலமைகளை எடுத்துக் கூறினேன்.

நாம் வாக்குறுதி அளித்தபடி 02 கண்டைனர்களை வழங்கியுள்ளோம். அத்துடன் எமது இன்னோரன்ன உதவிகள் இன்னும் தொடரும்.

அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவர் இங்கு வந்திருப்பது எமக்கு மகிழ்ச்சி தருகின்றது. அவருக்கு ஊர்மக்கள் சார்பில் எனது நன்றிகள்.

டெங்கு நுளம்பு ஒழிப்புப் பணிகளுக்காக அவர் பல்வேறு உதவிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளார். அத்துடன் கழிவகற்றல், குப்பை கூழன்களை வெளியேற்றல், துப்பரவுப் பணிகளுக்காக ட்ரக்டர், துப்பரவுப் பணியாளர்களுக்கான சம்பளம், புகை விசிறும் கருவிகள், கழி உறிஞ்சிகள், ஆகியவற்றையும் தருவதாக அவர் வாக்குறுதியளித்துள்ளார்.

கிண்ணியா வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ், உள் வாங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். எனினும் மாகாண அமைச்சின் கீழ் இந்த வைத்தியசாலை நிர்வாகம் அமைந்திருப்பதால், மாகாண சபை இதனை விடுவிக்க வேண்டும். இங்கிருக்கும் முதலமைச்சர் ஒத்துழைப்பை நல்கினால் எமது செயற்பாடுகள் இலகுவாக அமையும்.

கிண்ணியா பிரதேச மக்கள் டெங்கு ஒழிப்புப் பணிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.  மனிதநேயப் பணிகளுக்காக இந்தப் பிரதேசத்துக்கு வந்துள்ள தொண்டு நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தாமும் சுத்தமாக இருந்து சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமே இந்தப் பாதிப்பிலிருந்து நாம் விடுபட முடியும்.

அடிக்கடி டெங்கு நோயின் தாக்கத்துக்கு இலக்காகும் இந்த மக்களுக்கு நிரந்தர விடிவு பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம். இந்த முயற்சியில் ஊடகத்துறையின் பங்களிப்பையும் நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டும் உரையாற்றினார். அதன் பின்னர், கிண்ணியா வைத்தியசாலைக்கு அமைச்சர்கள் விஜயம் செய்து டெங்கு நோயாளர்களைப் பார்வையிட்டனர். அதேவேளை, மாவட்ட வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களிடம் தற்போதைய நிலவரங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்.

இதன் பின்னர் தோப்பூர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர்கள், அங்கும் நோயாளிகளைப் பார்வையிட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்