குறவனின் நாயும், உளவு நிறுவனங்களும்: ஹக்கீம் குறித்து, அன்சில் சொன்ன ‘கறுப்பு’ கதை

🕔 March 13, 2017

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நமது கட்சியை அடமானமாக வைத்து பல்வேறு தரப்பினரிடம் பணம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவரிடம்  நாம் கேட்டபோது, எதையும் அவர் மறுக்கவில்லை என்று, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார்.

‘மரத்தின் வேர்களுக்கு விளம்பல்’ எனும் தலைப்பில், முஸ்லிம் சமூகத்துக்கும், கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் மு.காங்கிரசின் தலைவர் ஹக்கீம் செய்த அநீதிகள் குறித்து, தனது ஊரவர்களான பாலமுனை மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமொன்றினை, சட்டத்தரணி அன்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தினார்.

இந்தக் கூட்டத்திலேயே, மேற்கண்ட விடயத்தினை  அவர் கூறினார்.

அன்சில் அங்கு தொடர்ந்து கூறுகையில்;

“மஹிந்த ராஜபக்ஷவை 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதற்காக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பணம் வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தன மூலமாக அந்தப் பணம், மு.கா. தலைவருக்கு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று, நோர்வேயிடம் மு.கா. தலைவர் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. சில நாடுகளின் உளவு அமைப்புக்களும் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு பணம் கொடுத்துள்ளன என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் குறித்து, மு.கா. தலைவரிடம் நாம் கேட்டோம். அவர் எதனையும் மறுக்கவில்லை.

அப்படியென்றால், யாரோ ஒரு எஜமான் – எங்கோ கொடுக்கின்ற பணத்துக்கு நாங்கள் எல்லோரும் கஷ்டப்பட்டு, இங்கேயிருக்கின்ற மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கின்றோமா என்கிற கவலை எனக்கு வந்தது.

நீங்கள் குறவனின் நாய்களைப் போன்றவர்கள் என்று, என்னுடைய நண்பரொருவர் என்னைப் பார்த்து ஒருதடவை கூறினார். அப்படியென்றால் என்ன என்று கேட்டேன்.

வேட்டையாட வருகின்ற குறவன் – தன்னுடன் நாய்களையும் அழைத்து வருவான். வேட்டையாடப்பட வேண்டிய பன்றி, மான், மரை போன்ற மிருகங்களைக் கண்டவுடன், அந்த மிருகங்களை நோக்கி தனது நாய்களை குறவன் ஏவி விடுவான். நாய்களும் அந்த மிருகங்களை வேட்டையாடி, குறவனிடம் கொடுக்கும்.

வேட்டையாடப்பட்ட மிருகங்களை குறவன் எடுத்துக் கொண்டு சென்று, மொத்தமாக விற்று விட்டு – காசைப் பெற்றுக் கொள்வான். குறவனுக்காக வேட்டையாடிய நாய்கள், தமது பசிக்காக அங்குமிங்கும் அலைந்து திரும்பவும் வேட்டையாட வேண்டியிருக்கும்.

இப்படி, குறவனின் நாய்களின் நிலைமைதான் உங்களுடையதும் என்று, தனது உதாரணத்தை விபரித்து எனது நண்பர் விளக்கமளித்தார்.

குறவனின் நாய்கள் மிருகங்களை வேட்டையாடுவது போல், எம்மவர்களாகிய உங்களிடமிருந்து நாம் பெற்றுக் கொடுக்கும் வாக்குகள், எங்கோ இருக்கின்ற உளவு நிறுவனங்களுக்கு விலை பேசப்படுகிறதா என்கிற கேள்வி என்னிடத்தில் வந்தபோது, அது குறித்து ஆராய முற்பட்டேன். அப்படி நான் நடந்து கொண்டது பிழையா என்று உங்களிடம் கேட்கிறேன்” என்றார்.

(ஆசியர் குறிப்பு: தமிழன், சோனகன் என்பது போன்று, ஒரு இனத்தைச் சேர்ந்த மனிதரை அடையாளப்படுத்தும் – கௌரவமான இன அடையாளச் சொல்லாகவே இங்கு ‘குறவன்’ என்கிற சொல்லினை, இந்தச் செய்தியில் நாம் கையாண்டுள்ளோம்)

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்