ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும் பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர்

🕔 March 11, 2017

– முன்ஸிப் அஹமட் –

ம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச கடலில் காணப்பட்ட மிதக்கும் பூஜை பீடமொன்றினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மியன்மார் நாட்டிலிருந்து மிதந்து வந்திருக்கலாம் என நம்பப்படும், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் பூசை பீடம், தற்போது ஒலுவில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பிரதேச கடலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை, இந்த மிதக்கும் பூசை பீடம் கைப்பற்றப்பட்டது.

சுமார் 20 சதுர அடியினைக் கொண்ட இந்த மிதக்கும் பூசை பீடத்தினுள், பூசை நடத்துவதற்கான பிரதான பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனுள் அரிசி, மணக்குச்சிகள், முக அமைப்பில் செதுக்கப்பட்ட தேங்காய், ஓவியம் வரையப்பட்ட குடங்கள் மற்றும் தகரத் தட்டுகள் உள்ளிட்டவை காணப்படுகின்றன.

இந்த மிதக்கும் பூசை பீடத்தினைச் சுற்றிலும் பௌத்த கொடிகள் கட்டிப் பறக்க விடப்பட்டுள்ளன.

இதேவேளை, தங்க முலாம் பூசப்பட்ட தகரங்களால், இந்த பூசை பீடத்தின் மேற்பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதனுள் காணப்பட்ட தண்ணீர் போத்தலொன்றில் மியன்மார் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதேவேளை, மியன்மார் நாட்டு மொழியில் அச்சிடப்பட்ட ரசீதுப் புத்தகங்களும், இதனுள் காணப்படுகின்றன.

இந்த மிதக்கும் பூசை பீடம் தொடர்பில் தகவல்களை சேகரிக்கும் பொருட்டு, அம்பாறையிலிருந்து பொலிஸார் ஸ்தலத்துக்கு வருகை தந்ததோடு, அங்கிருந்த பொருட்கள் தொடர்பில் தகவல்களைச் சேகரித்தனர்.

மியன்மார் நாட்டு கலாசாரங்கள் மற்றும் அந்த நாட்டு மொழிக்குரிய எழுத்துக்களைக் கொண்ட பொருட்கள் இதனுள் அதிகம் காணப்படுகின்றமையினால், இந்த மிதக்கும் பூசை பீடமானது, மியன்மாரிலிருந்து மிதந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த படகு தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்