தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பழனிச்சாமி பதவியேற்பு; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் கெடு

🕔 February 16, 2017

Palanisami - 011மிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். இதன் மூலம் சுமார் இரண்டு வாரங்களாக அங்கு நிலவி வந்த அரசியல் தள்ளாட்ட நிலைக்கு ஓரளவு தீர்வு கிட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, 15 நாட்களில் தனது பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், பிரிவு 356ன் படி  ஆட்சி கலைக்கப்பட்டு, தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்படுவதற்கான சந்தர்பங்கள் அதிகமுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு மாநில ஆட்சியானது அரசியல் அமைப்புச்  சட்டத்தின் அம்சங்களின் அடிப்படையில் செயல்படாத அல்லது செயல்பட இயலாத நிலையில் உள்ளதாக ஆளுநர் அறிக்கை அளித்தாலோ அல்லது வேறு வகையில் தெரியவந்தாலோ, 356-வது சட்டப்பிரிவின் கீழ் குடியரசுத்தலைவர் ஆட்சியை அந்த மாநிலத்தில் பிரகடனம் செய்யலாம்.

356 இன் கீழ் ஆட்சிக் கலைப்பு 

இந்தியாவில் இவ்வாறான ஆட்சிக் கலைப்பு பல முறை நடந்திருக்கிறது. பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் பலமுள்ளதாக சொல்லப்பட்ட சூழலில் கூட, உட்கட்சி பிரச்னை, நிர்வாக சீர்கேடு ஆகியவற்றை காரணம் காட்டி, ஆட்சிகள் கலைக்கப்பட்டிருக்கின்றன.

சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தோடு உள்ள ஒருவரை ஆளுநர் முதல்வராக பதவியேற்க அழைக்க வேண்டும். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, அவரின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கை மீது சந்தேகம் எழுந்தால், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோரலாம். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பெரும்பான்மையை முதல்வராக பொறுப்பேற்றவர் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்று தரப்பினருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கொடுக்கலாம். யாரும் பெரும்பான்மையை நிரூபிக்காத பட்சத்தில் ஆளுநர் ஆட்சியை கலைக்க அறிக்கை அனுப்பலாம். இதையடுத்து ஆட்சியை கலைத்து குடியரசுத்தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்படும்.

இப்போதைய கணக்கு

தற்போதைய சூழலில், தமிழக சட்ட சபையில் மொத்தமுள்ள 233 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். (ஜெயலலிதா மரணத்ததால் ஒரு இடம் காலியாக உள்ளது). இவர்களில் அ.தி.மு.க.வின் பக்கமாக 135 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 10 எம்.எல்.ஏ.க்கள் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 125 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பெரும்பான்மை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு 117 எம்.எல்.ஏ.களின் ஆதரவு தேவை. தற்போது 125 பேரின் ஆதரவு தனக்கு உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் நிலையில், இதில் 10 பேர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றாலோ அல்லது எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க மறுத்தாலோ எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்காமல் போகக்கூடும். அவ்வாறு 117 பேரின் ஆதரவைப் பெற முடியாத பட்சத்தில், அவர் ஆட்சி அதிகாரத்தை இழப்பார். அந்த சூழலில் மறுதரப்பு பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதி கோரும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். யாரும் பெரும்பான்மை நிரூபிக்காத பட்சத்தில் பிரிவு 356ன் கீழ் சட்டமன்றம் கலைக்கப்படும்.

இப்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை கோர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையில் தோல்வி ஏற்படும் பட்சத்தில் அல்லது சட்டம் ஒழுங்குப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் ஆட்சி கலைக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கவே செய்கின்றன என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்