கோடிகள் பற்றிய வாக்கு மூலம்

🕔 February 1, 2017

MTM - Article - 867– முகம்மது தம்பி மரைக்கார் –

‘எமது தலைவர் ரஊப் ஹக்கீம் பதினெட்டாவது சீர் திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது உண்மையா? அழ்ழாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்லுங்கள்’

மேலேயுள்ள கேள்வி, ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ‘அதிர்வு’ எனும் நேரடி நிகழ்சியில் கேட்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கலந்து கொண்டிருந்தார். அவரிடம்தான் அந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது. வசந்தம் தொலைக்காட்சியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பார்வையாளர் ஒருவர் பதிவு செய்திருந்த மேற்படி கேள்வியினை, தவிசாளர் பசீரிடம் நிகழ்ச்சி நடத்துநர் கேட்டார்.

அந்தக் கேள்விக்கு மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் இவ்வாறு பதிலளித்தார். ‘அழ்ழாஹ்வின் மீது ஆணையாக 18 ஆவது சீர் திருத்தத்துக்கு தலைவர் ரஊப் ஹக்கீம் பணம் பெறவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, செலவுக்காக என்று பணம் பெற்றார். அதில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு கோடி ரூபாய் கொடுத்தார். எனக்கும் ஒரு கோடி ரூபாய் தந்தார். அழ்ழாஹ் மீது ஆணை’.

வியாபாரம்

இந்தப் பதில் மிகவும் முக்கியமானது. மு.கா. தலைவர் பணம் பெற்றதாக மட்டும் பசீர் கூறவில்லை. அதில் தனக்கு பங்கு கிடைத்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். கடந்த நாடாளுமன்றத்தில் தலைவர் ஹக்கீமுடன் சேர்த்து மு.கா.வுக்கு 08 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். பசீரின் கூற்றுப்படி பார்த்தால், ஹக்கீம் தன்னைத் தவிர்த்து மற்றைய 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மொத்தமாக 07 கோடி ரூபாயினை வழங்கிருக்க வேண்டும். ஆனாலும், தலைவர் மொத்தமாக எவ்வளவு தொகையினை ‘தேர்தல் செலவுக்காக’ பெற்றுக் கொண்டார் என்று அந்த நிகழ்சியில் பசீர் கூறவில்லை.

மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் கூறுகின்றமை உண்மையாயின்ளூ இது பாரதூரமானதொரு விடயமாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், கிட்டத்தட்ட முஸ்லிம்களில் மிகப்பெரும்பான்மையானோர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் அணி திரண்ட பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பும் இடம்பெற்ற பிறகுதான், அப்போதைய வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக மு.கா. தலைவர் அறிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மு.காங்கிரஸ் ஆதரவளித்திருந்தாலும் கூட, முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்கு மைத்திரிக்கே கிடைத்திருக்கும். கள நிலைவரம் அப்படித்தான் இருந்தது.

இப்படியானதொரு தேர்தல் களத்தில், மைத்திரிபால சிறிசேனவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய ஆதரவுக்காக, பல கோடி ரூபாய் பணமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படுகின்றமையானது, அந்தத் தேர்தலில் சமூகப் பற்றோடு வாக்களித்த முஸ்லிம் மக்களுக்கு அதிர்ச்சியான தகவலாகும்.

ஜனாதிபதி தேர்தலில், அப்போதைய வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு, கோடிக்கணக்கான ரூபாய்களை மு.கா. பெற்றுக் கொண்டதாகக் கூறுகின்ற நபர் சாதாரணமான ஒருவர் இல்லை. மு.காங்கிரசின் தலைவர் பதவிக்கு அடுத்த நிலையிலுள்ள தவிசாளர் பதவியினை வகிக்கும் ஒருவர்தான் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார் என்பது, இங்கு கவனிப்புக்குரியதாகும்.

மைத்திரிக்கு ஆதரவு வழங்குவதற்காக மு.கா. பணம் பெற்றது என்று பசீர் கூறுகின்ற தகவல் உண்மையாயின், மைத்திரிக்கு மு.கா. விலைபோயிருக்கிறது என்று அர்த்தமாகிறது. அப்படியென்றால், மைத்திரியின் ஆட்சியினை எதிர்க்கும் தகுதி மு.கா.வுக்கு இருக்கிறதா என்கிற கேள்வி இங்கு தவிர்க்க முடியாதது.

களவு

மு.காங்கிரசைப் பொறுத்த வரையில், அந்தக் கட்சி சார்பில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும், கட்சியின் உயர்பீடத்தினுடைய அங்கீகாரம் பெறப்பட்டதாக இருக்க வேண்டும். கட்சியின் அனைத்து செயற்பாடுகளும் உயர்பீடத்துக்குத் தெரியப்படுத்தப்படுதல் அவசியமாகும். ஆனால், ‘கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிக்கு ஆதரவளிப்பதற்காக பணம் பெற்றுக் கொள்வது குறித்து, மு.கா.வின் உயர்பீடத்துக்கு ஒருபோதும் தெரியப்படுத்தப்படவில்லை’ என்று, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரொருவர் நம்மிடம் கூறினார். மேலும், ‘பசீர் சொல்வது உண்மையென்றால், இந்த விவகாரமானது காதும் காதும் வைத்தது போல் கள்ளத்தனமாக நடந்திருக்க வேண்டும்’ என்றும் அந்த உயர்பீட உறுப்பினர் தெரிவித்தார்.

பங்குதாரி

இன்னொருபுறம், இந்தத் தகவலை வெளிப்படுத்தியதன் ஊடாக, மு.கா. தவிசாளர் பசீர் தன்னை புனிதப்படுத்திக் கொள்ள முடியாது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. அவர் கூறுகின்றமைபோல் மைத்திரிக்கு ஆதரவளிப்பதற்காக மு.கா. பணம் பெற்றிருந்தால், அந்தப் பாவத்தில் தவிசாளர் பசீரும் பங்கேற்க வேண்டும். இன்னொருபுறம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மு.கா. தவிசாளர் பசீர் நடுநிலை காத்திருந்திருந்தார். அப்படியொரு நிலைப்பாட்டில் இருந்த ஒருவர்; ‘தேர்தல் செலவுகளுக்காக’ என்று சொல்லி வழங்கப்பட்ட பணத்தினை, ஏன் பெற்றுக்கொண்டார் என்பதும் இங்கு கேள்விக்குரியதாகும்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பேரினவாதிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள் இந்த ஆட்சியிலும் தலை காட்டத் தொடங்கியிருக்கின்றன. வில்பத்து காட்டினை விஸ்தீரணப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரி விடுத்திருக்கும் அறிவித்தல் ஊடாக, அந்தப் பகுதியில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இன்னும், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறைமையானது முஸ்லிம்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. எனவே, இவற்றினையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு – முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ள மு.காங்கிரசுக்கு உள்ளது. ஆனால், மைத்திரிக்கு ஆதரவளிப்பதற்காக கோடிக்கணக்கில் முஸ்லிம் காங்கிரஸ் பணம் பெற்றிருந்தால், அவரின் ஆட்சியினை எதிர்த்து நிற்பதற்கான இயலுமை இருக்க முடியாது என்று மு.காங்கிரசின் முக்கியஸ்தர் ஒருவர் கூறுகின்றார்.

அழுக்கு அகற்றுதல்

மு.காங்கிரசை தூய்மைப்படுத்த வேண்டும் என்று மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் அடிக்கடி கூறி வருகின்றார். அத்தோடு, தன்னையும் தூய்மைப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். அப்படியென்றால், கட்சியும் – அவரும் அசுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை, அவரின் கூற்றினூடாக புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, தன்னை ‘தூய்மைப்படுத்தி’ கொள்வதற்காகவே, தான் ‘அசுத்தப்பட்ட’ கதைகளை ‘அதிர்வு’ நிகழ்சியில் பசீர் பதிவு செய்திருக்கலாம் என்கிற அபிப்பிராயத்துக்கு இங்கு வர முடிகிறது.

மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் இந்த விடயத்தினை மட்டும், மேற்படி தொலைக்காட்சி நிகழ்சியில் கூறவில்லை. இதனை விடவும் பாரதூரமான பல விடயங்களை மேற்படி அதிர்வு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருந்தார்.

அகப்படுதல்

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் மு.காங்கிரஸ் இணைவதற்கும், அதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவிடம் அந்தக் கட்சியினை அடமானம் வைப்பதற்கும் காரணமாக, பசீர் சேகுதாவூத் இருந்தார் என்கிற குற்றச்சாட்டொன்று உள்ளது. இது குறித்து அதிர்வு நிகழ்சியில் மு.கா. தவிசாளர் பசீரிடம் கேள்வியெழுப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் மிகவும் பாரதூரமானதாகும்.

‘மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் செய்தாகக் கூறப்படும் மிகப் பெரிய தனிப்பட்ட குற்றம் ஒன்றுக்கு எதிராக, 2005 ஆம் ஆண்டு கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது. அதனை மூடி மறைப்பதற்காகவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு மு.காங்கிரஸ் ஆதரவு வழங்க நேரிட்டது’ என்று பசீர் பதிலளித்தார்.

மேலும் ‘மஹிந்த ராஜபக்ஷவுடன் மு.காங்கிரஸை பசீர்தான் கொண்டு சேர்த்தார் என்று, பலர் என்னைக் குற்றம் சாட்டி வருகின்றனர். மு.கா. தலைவர் ஹக்கீமுக்காக, அந்தச் சேற்றினை நான் பூசிக் கொண்டேன். மு.காங்கிரசின் தலைவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், அவர் சிற்றூழியர் வேலையொன்றினைக் கூட, பெற்றுக் கொள்வதற்கான தகுதியினையும் இழந்து விடுவார்.

குறித்த முறைப்பாட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்த ரஊப் ஹக்கீம், பின்னர் மாறு செய்து விட்டார்.

இதனால், அந்தத் தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றவுடன் ஹக்கீமை பழிவாங்க முயற்சித்தார். அதன்போது மஹிந்தவுடன் நான் கெஞ்சிப் பேசினேன். நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு மு.காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று கூறி சமரசப்படுத்தினேன்’ என்றார் பசீர்.

மேலும், இந்தத் தகவலினை மிகவும் பொறுப்புணர்வுடன் தெரிவிப்பதாகவும் பசீர் அந்த நிகழ்வில் குறிப்பிட்டார்.

பசீர் கூறிய விடயங்களில் அதிகமானவை, அப்பாவி முஸ்லிம் வாக்களர்களுக்கு திடுக்கிடும் தகவல்களாகவே இருந்திருக்கும். மேலும், கட்சியினை மதம் போல் நேசித்துக் கிடக்கும் பாமர தொண்டர்கள், அரசியல் குறித்து பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள்.

தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பு

எனவே, பசீருடைய இந்தத் தகவல்கள் தொடர்பில், மு.காங்கிரசின் தலைமை கட்டாயமாகப் பதிலளிக்க வேண்டும். மக்களை உடனுக்குடன் சென்றடையும் இலத்திரனியல் ஊடகமொன்றின் வழியாக, நேரடி நிகழ்ச்சியொன்றில் தோன்றி, மு.கா. தவிசாளர் எனும் வகையில் பசீர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவையாகும். இவற்றினை வழமைபோல், மு.கா. தலைவர் ஹக்கீம் தட்டிக் கழித்து விட்டுப் போய்விட முடியாது. மு.கா.வுக்கு வாக்களித்த ஒவ்வொரு பிரஜைக்கும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்க வேண்டிய பாரிய பொறுப்பு ரஊப் ஹக்கீமுக்கு இருக்கிறது.

தடுமாற்றம்

ஏற்கனவே மு.காங்கிரசின் உயர் மட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில்ளூ ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகமொன்று வெளியாகி, அரசியலரங்கில் பெரும் பரபரப்பினையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் பொய்யானவை என்றும், அடிப்படையற்றவை என்றும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்துத் தெரிவித்தார். ஆனால், கடந்த சனிக்கிழமை நிர்தவூரில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மு.கா. தலைவர்; ‘அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தவல்களில் உண்மைகளும் இல்லாமலில்லை’ என்று தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

‘உண்மைகளைப் புறக்கணிப்பதால், அவை – பொய்களாகி விடாது’ என ஆங்கில எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி தெரிவித்த கருத்து, இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. உண்மைகளை மறைப்பதென்பது, அரசியலில் ஒருபோதும் சாணக்கியமாகி விடாது. அவ்வாறான செயற்பாடுகள் இறுதியில் அவமானங்களையே பெற்றுத்தரும்.

பாவம்

மு.காங்கிரசின் தலைமைக்கு, அரசியலில் இது மிகவும் இக்கட்டான காலகட்டமாகும். கோடிகள் குறித்து விமர்சனங்களாக ஊடகங்கள் முன்வைத்து வந்த விடயங்களை, இப்போது மு.கா. தவிசாளரே – ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிப்பதற்காக பணம் வாங்குவது மட்டும்தான் பாவம் என்றில்லை. ஒரு சமூகம் தனக்கு வழங்கும் அரசியல் ஆதரவினைக் காட்டி, அதனைப் பெற்றுத் தருவதற்காகச் சொல்லி, பணம் வாங்குவதும் மிகப் பெரும் பாவம்தான்.

அதிர்வு தொலைக்காட்சி நிகழ்சியில் மேற்படி தகவல்களை வெளியிட்ட மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத்ளூ அழ்ழாஹ்வின் பெயரில் ஆணையிட்டுத்தான் அவற்றினை உறுதிப்படுத்தினார். மேலும், அந்த நிகழ்சிக்கு வருவதற்கு முன்னர், இரண்டு ‘ரக்அத்’ சுன்னத்தான தொழுகையில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார். ஒரு விடயத்தின் உண்மைத் தன்மையினை இஸ்லாமிய ரீதியாக உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் விடயங்களே இவையாகும்.

கண்டு பிடிக்கப்பட வேண்டிய உண்மைகள்

எனவே, பசீர் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் மு.காங்கிரசின் உயர்பீடத்தில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும். மு.காங்கிரசின் பேராளர் மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அந்தக் கட்சிக்குள் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த விடயங்கள் தொடர்பில், மு.காங்கிரசின் உயர்பீடம் தீவிர கவனம் செலுத்தி விவாதிக்க முன்வர வேண்டும்.

உண்மை என்பது பொய் பேசுவதனால் மட்டும் மீறப்படுவதில்லை; மௌத்தினாலும் அவமதிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்