மு.கா. தலைவரின் போலி முகம்; புதிது செய்தித் தளத்தில் இன்றிரவு அம்பலமாகிறது

🕔 January 22, 2017

Hakeem - 0987– ஆசிரியர் கருத்து –

மு.காங்கிரசில் இடம்பெற்றதாகக் கூப்படும் பல்வேறு மோசடிகளும், மர்மங்களும் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், அவருடைய அந்தரங்க மற்றும் வர்த்தகக் கூட்டாளிமார்களும் சேர்ந்து கட்சியை எப்படிக் காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து, ஆதாரங்களுடன் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறானதொரு தருணத்தில், குறித்த குற்றச்சாட்டுக்களை பகுத்தறிவுடன் ஆராய்வதை விட்டு, கட்சித் தலைவருக்கு விசுவாசம் காட்டும் தருணமாக – சிலர் இதைப் பயன்படுத்தும் வகையில், ‘காவடியாட்டத்தில்’ ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இது கோமாளித்தனமான செயற்பாடாகும்.

முஸ்லிம் காங்கிரசுக்குள் நடந்த மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில், ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் தலைப்பில் புத்தகமொன்று வெளியாகியுள்ளது. இந்தப் புத்தகம் ‘தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி’ எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், புத்தகத்தில் அம்பலப்பட்டுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதை விடுத்து, “அந்தப் புத்தகத்தை யார் வெளியிட்டிருப்பார்” என்று யோசிப்பதிலும், “இன்னார்தான் வெளியிட்டிருப்பார்” என்று தங்கள் தலைக்குப் பட்டவர்களை வசை பாடுவதிலும் சிலர் ஈடுபட்டுக் கொண்டிக்கின்றனர்.

“சொல்வதைக் கவனி சொல்பவனைக் கவனியாதே” என்கிற முதுமொழி, இவ்வாறான பேர்வழிகளை மனதில் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

புத்திசாலிகள் எப்போதும் சொல்லப்படும் விடயங்கள் குறித்தே கவனம் செலுத்துவார்கள். மூடர்கள்தான்; “சொல்பவர் யார்” என்பதை முகர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்டதொரு கட்சியாகும். இந்தக் கட்சிக்காக ஏராளமானோர் தமது உயிரை, ரத்தத்தை, நிதியை, வியர்வையை மற்றும் காலங்களை தியாகம் செய்திருக்கின்றார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட கட்சியை, ஒரு சில நபர்கள் கையகப்படுத்திக் கொண்டு, காசாக்கிக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது.

மு.காங்கிரஸ் நமது சமூகத்துக்குரிய கட்சி என்பதற்காக, அந்தக் கட்சியின் தலைவருடைய, முக்கியஸ்தர்களுடைய பிழைகளையெல்லாம் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அஷ்ரப் என்கிற பெருந்தலைவரை இழந்த பிறகும், இந்தக் கட்சி உயிரோடு இருக்கிறதென்றால்; ரஊப் ஹக்கீம் இல்லாமலும், ஹாபீஸ் நசீர் இல்லாமலும், சல்மான் இல்லாமலும் இந்தக் கட்சியால் உயிரோட்டத்துடன் இருக்க முடியாமலா போய்விடும்.

அம்பாறை மாவட்டத்தில் கருக்கொண்டு, கிழக்கில்  பிரசவமான முஸ்லிம் காங்கிரஸ்; இப்போது – கிழக்கின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஹசனலிக்கு கட்சியில் இடமில்லை, பசீருக்கு இடமில்லை, நிசாம் காரியப்பருக்கு தொடர்ந்தும் வெட்டு, முழக்கம் மஜீதுக்கு எந்தவிதமான அதிகாரங்களுமற்ற ஒரு பதவி – என்று, கிழக்கின் முக்கியஸ்தர்கள் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து கழற்றி விடப்படுகிறார்கள்.

இது குறித்து உயர்பீடத்தில் உள்ளவர்களில் கணிசமானோர் கவலைப்படுகின்றார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், வாய் திறந்து – ஹக்கீமுக்கு முன்னால் இது குறித்துப் பேசுவதற்குத் திராணியற்றவர்களாகவே அதிகமானோர் உள்ளனர். இவர்களுடைய இந்தப் பவீனங்கள்தான், மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு பலமாக அமைந்து விட்டது.

கடந்த பேராளர் மாநாட்டுக்கு முன்னர் நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில், அத்தனை உயர்பீட உறுப்பினர்களுக்கும் முன்னால் வைத்துக் கூறிய பல விடயங்களை – தற்போ, மு.கா. தலைவர் ஹக்கீம்; “நான் அப்படிச் சொல்லவேயில்லை” என்று மறுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ரஊப் ஹக்கீம் பொய் சொல்கிறார் என்று அத்தனை உயர்பீட உறுப்பினர்களுக்கும் தெரியும். அதை, ஹக்கீமுடைய முகத்துக்கு நேராகச் சொல்வதற்குப் பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக, மு.காங்கிரசின் உயர் பீடத்துக்கென செயலாளரொருவர் நியமிக்கப்படுவார் என்றும், அந்த செயலாளருக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும், குறித்த உயர்பீட செயலாளரை – கட்சித் தலைவரே நியமிப்பார், தேவையாயின் பதவி விலக்குவார் என்றும் கடந்த கட்டாய உயர் பீடக் கூட்டத்தில் மு.கா. தலைவரே கூறியிருந்தார். ஆனால், இப்போது; “நான் அப்படிக் கூறவேயில்லை” என்று ஹக்கீம் சொல்கிறார். “உயர்பீட செயலாளருக்கு சம்பளம் கொடுப்பதாக நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சொன்னது கிடையாது” என்று ஹக்கீம் வாதிடுகிறார்.

இதற்கெல்லாம் அப்பால் சென்று, உயர்பீட செயலாளராக நியமிக்கப்பட்ட நபரை, இப்போது கட்சியின் செயலாளர் என்று தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்தும் விட்டார். இதனூடாக, கட்சியின் மூத்த உறுப்பினரான ஹசனலிக்கு ‘காய்’ வெட்டியுள்ளார்.

இதையெல்லாம், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, தங்களுடைய உணவும், மூச்சும் – மு.கா. தலைவருடைய உள்ளங் கைகளுக்குள் உள்ளன போல், இவர்கள் பயப்படுகிறார்கள். ‘தவறுகளைத் தட்டிக் கேட்கத் திராணியற்றவர்களும், தவறுகளைப் புரிபவர்களும் இறைவனின் சன்னிதானத்தில் குற்றவாளிகளாகவே நிறுத்தப்படுவார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் ஏதோவொரு தருணத்தில் சொரணை பெற்று, கட்சித் தலைவர் புரிந்து கொண்டிருக்கும் மோசடிகளையும், தவறுகளையும் தட்டிக் கேட்பார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள், இப்போது தமது நம்பிக்கைகளை இழந்து விட்டனர்.

எனவே, ஒரு பொறுப்பு மிக்க ஊடகமாக, இந்த விவகாரத்தினை நாம் கையிலெடுக்கத் துணிந்துள்ளோம். முஸ்லிம் சமூகத்தின் கட்சியென அடையாளம் பெற்றுள்ள மு.காங்கிரசின் உள்ளுக்குள் நிகழ்ந்த மோசடிகள் சிலவற்றினை, அம்பலப்படுத்துவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

இதற்காக, மிக நீண்ட காலமாக முயற்சித்து சில ஆவணங்களை நாம் சேகரித்துள்ளோம். அந்த ஆவணங்கள், மு.காங்கிரஸ் தலைவரின் போலி முகத்தை வெளிப்படுத்தும் வகையிலானவையாகும். அவற்றினை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியமை அவசியமாகும்.

அந்த வகையில், மு.காங்கிரசுக்குள் நிகழ்ந்த மோசடிகளையும், மு.கா. தலைவரின் சுத்துமாத்துகளையும் அம்பலப்படுத்தும் சில முக்கிய ஆவணங்களை, இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், ‘புதிது’ செய்தித் தளம் தொடர்ச்சியாக வெளியிடவுள்ளது.

இந்த ஆவணங்கள் இதற்கு முன்னர் எங்கும் வெளியாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments