காணாமல் போன பெண்ணொருவர், 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பினார்: கம்பளையில் அதிசயம்

🕔 January 19, 2017

Lady - 011காணாமல் போனதாக கூறப்படும் பெண் ஒருவர் சுமார் 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பியுள்ள அதிசயம், கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பத்மகுமாரி எனும் 43 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மீண்டுள்ளார். காணாமல் போகும் போது அவருக்கு 18 வயதாக இருந்தது.

இவர் காணாமல் போன நிலையில், இவரின் உறவினர்கள், காணாமல் போனவர்களுக்காக வழங்கப்பட்ட நஷ்டஈட்டினையும் பெற்றுள்ளனர்.

“எனது 18 வயதில் தொகோமட பகுதிக்கு சென்ற போது, எனது கணவரை சிலர் கடத்திச் சென்றனர். அப்போது அவர்கள் கண்களை கட்டியிருந்தனர். பின்னர் தேயிலைத் தோட்டத்தில் வைத்து எனது கணவர் சுட்டுக் கொன்று விட்டனர்” என, அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

அந்தத் சுமைகளை மனதில் சுமந்தபடி, கணவரின் இறுதிக் கிரியைகளை நிறைவு செய்த அவர் மீண்டும் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவரது வாழ்வில் நடந்த துயரம் மிகுந்த சம்பவங்களை பத்மகுமாரி பின்வருமாறு விபரிக்கிறார்.

“நான் வீட்டுக்கு வந்து இரண்டு, மூன்று நாட்களில் கணவரின் பெரியம்மாவின் மகள் ஒருவர் என்னை நாவலப்பிடியிலுள்ள அவர்களது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்போது பெரும் மன உளைச்சலில் இருந்த நானும் அங்கு சென்றேன். பின்னர் அவர்கள் என்னை விஹாரமஹாதேவி பூங்காவைப் பார்க்க கொழும்பு செல்வோம் என அழைத்தனர்.

நானும் சரி என்று அவர்களுடன் சென்றேன், ஆனால் அவர்கள் என்னை கொழும்புக்கு அழைத்துச் சென்று வீடொன்றில் ஒப்படைத்தனர். அவர்கள் என்னை அடைத்து வைத்து வேலைகள் வாங்க ஆரம்பித்தனர்.

26 வருடங்கள் எனக்கு சுதந்திரம் இல்லை, காலை 05.00 மணிக்கு எழுந்து வேலைகளை செய்ய வேண்டும். நான் அந்த வீட்டுக்கு செல்லும் போது இரு பிள்ளைகள், கணவன் மற்றும் மனைவியும் இருந்தனர்.

சிறு பிள்ளைக்கு 3 மாதங்களே. நான் பிள்ளைகளை பராமரித்ததோடு, வீட்டு வேலைகளையும் செய்தேன். இவ்வாறு சில வருடங்கள் கழிந்த பின்னர் எனது தந்தை இறந்து விட்டதாக அவர்கள் பேசிக் கொண்டனர். நான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றேன். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.

எனக்கு 13 சகோதர, சகோதரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் கடற்படையில் இருந்தார். அவர் இறந்துள்ளார். மற்றைய சகோதரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். நான் இவர்கள் பேசியவற்றில் இருந்து இதனை அறிந்து கொண்டேன். ஆனால் என்னை எதற்கும் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை”என்றார்.

சுமார் 26 வருடங்களில் பின்னர் இந்த பெண் கடந்த 17ம் திகதி மீண்டும் கம்பளை – கிராஉல்ல பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மீண்டும் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் தன்னை அடைத்து வைத்திருந்தது தெல்கந்தை மற்றும் கொட்டாவ பகுதியிலுள்ள வீட்டில் எனவும், தன்னை பலவந்தமாக அடைத்து வைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த பெண் நாவலப்பிட்டி பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நாவலபிடிய பொலிஸாரால் கொட்டவா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்