அடுத்தவரின் மானத்தில் கை வைத்த வலைத்தளப் போராளிகளுக்கு, விசித்திரத் தண்டனை

🕔 January 9, 2017

siras-01111மூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புகின்ற செயற்பாடுகள் நமது சமூகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில், அவ்வாறான ஒரு குழுவினருக்கு சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்சரியான பாடம் படிப்பித்திருக்கிறார் எனத் தெரியவருகிறது.

இந் நிலையில் இத் தகவல் முதலில் பகிரப்பட்ட வட்ஸ்அப் குழு, அக் குழுவின் நிர்வாகி (அட்மின்), அதில் பதிவிட்டவர், அதனை வேறு குழுக்கள் மற்றும் தனி நபர்களுடன் பகிர்ந்து கொண்டவர்கள் என 06 நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, கொம்பனித்தெரு குற்றப் புலனாய்வுப் பிரிவில் சட்டத்தரணி சிராஸ் முறைப்பாடொன்றை பதிவு செய்தார்.

இதற்கமைய இவர்களில் நால்வர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றச்சாட்டை எதிர்கொண்டவர்களில் ஒருவர் காதி நீதிவான். இருவர் மௌலவிகள். மற்றொருவர் அரபுக் கல்லூரி அதிபர். ஏனையோர் அதன் நிர்வாகிகள்.

கைது செய்யப்பட்டவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், கிடைக்கப்பெற்ற தகவலையே பகிர்ந்து கொண்டதாகவும் பொலிஸில் தெரிவித்தனர். எனினும் மேற்படி செயற்பாடானது, 02 வருட சிறைத் தன்டனை மற்றும் தண்டப்பணம் அல்லது இரண்டினாலும் தண்டிக்கப்படக்கூடிய இலங்கை தண்டனைச் சட்டக்கோவை பிரிவுகள் 32, மற்றும் 100 உடன் சேர்த்து வாசிக்கப்படக்கூடிய பிரிவுகள் 120, 485 மற்றும் 486 இன் கீழ் பாரிய குற்றமாகும். மேலும் இத்தகைய செயலானது 2007ம் ஆண்டின் 56ம் இலக்க ICCR சட்டத்தின் கீழும் குற்றமாகக் கருதப்படக் கூடியதாகும் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் மேற்படி செயல்கள், பிடியாணை இன்றி கைது செய்யப்படக்கூடிய மற்றும் பிணை வழங்கப்பட முடியாத தவறுகளாகும். சந்தேக நபர்களுக்கு மேல் நீதிமன்றத்தினால் மட்டுமே பிணை வழங்கப்பட முடியும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனையடுத்து இவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிசார் விரும்பிய போதிலும் முறைப்பாட்டாளரான சட்டத்தரணி சிராஸ், மேற்படி நால்வருக்கும் அவர்களது சமூக அந்தஸ்தினை கருத்திற் கொண்டு நிபந்தனைகளுடன் கூடிய மன்னிப்பளிக்க முன்வந்தார்.

தாம் செய்தது தவறு என்பதை ஏற்றுக் கொள்வதுடன், அதற்காக பாவ மன்னிப்புத் தேட வேண்டும், தாம் பகிர்ந்து கொண்ட தகவல் தவறானது, இட்டுக்கட்டப்பட்டது என்பதைக் குறிப்பிடும் புதிய தகவல் ஒன்றை, தாம் முன்னர் அனுப்பிய அதே குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு அனுப்ப வேண்டும்,  தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கிணங்க இவர்களில் மூவர் மஹரமக புற்று நோய் வைத்தியசாலை அல்லது மாகொல அனாதைகள் நிலையம் என்பவற்றில் ஏதேனுமொன்றுக்கு தலா 5000 ரூபா வீதம் அன்பளிப்புச் செலுத்த வேண்டும், அத்துடன் குறித்த வட்ஸ் அப் குழுமம் ஒன்றின் நிர்வாகியான இந்தத் தகவலை பரப்புவதில் பிரதான பாத்திரமேற்றுச் செயற்பட்ட நபர் ( கண்ணிருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடராக நடந்து கொண்டமைக்காக) கட்புலன், செவிப்புலனற்றோர் நிலையத்திற்கு 25 ஆயிரம் ரூபா அன்பளிப்பாக செலுத்த வேண்டும் எனும் நிபந்தனைகளே சட்டத்தரணி சிராஸ் நூர்தீனினால் முன்வைக்கப்பட்டன.

இதற்கமைய இருவர் தலா 5000 ரூபா வீதம் அன்பளிப்புச் செலுத்தி அதற்கான பற்றுச் சீட்டை  சட்டத்தரணி சிராஸ் நூர்தீனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுவரை தலைமறைவாகியுள்ள, குறித்த தகவலை எழுதிய, பரப்பிய பிரதான சூத்திரதாரிகளான மேலும் இருவர் கைது செய்யப்படும் பட்சத்தில் அவர்களை நீதிமன்றில் நிறுத்தவும், அவர்களுக்கு எதிராக 100 மில்லியன் ரூபா, மான நஷ்டயீடு கோரவும் சட்டத்தரணி சிராஸ் தீர்மானித்துள்ளார்.

இவ்வாறு அவதூறுகளை பரப்புவது சட்டத்தின் பார்வையில் எவ்வளவு பாரதூரமானது என்பதை சமூகத்திற்கும் இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் புரிய வைக்கவே, தான் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக இந்த முறைப்பாட்டைச் செய்யவில்லை என்றும் சட்டத்தரணி சிராஸ் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்