அம்பியுலன்ஸில் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட துமிந்தவுக்கு, இறங்க முடியவில்லையாம்; வழக்கு ஒத்தி வைப்பு

🕔 January 5, 2017

duminda-silva-0111கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்துக்கு அம்பியுலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட முன்னாள் நாடாமன்ற உறுப்பினரும், மரண தண்டனைக் கைதியுமான துமிந்த சில்வா, அம்பியுலன்ஸ் வாகனத்திலிருந்து இறங்க முடியாதவாறு சுகயீனமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.

இதேவேளை, துமிந்த சில்வாவின் மருத்துவ அறிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை, சொத்து விபரங்களை வெளியிடாமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் ஆஜராக்கும் பொருட்டு, இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் அவர் அம்பியுலன்ஸ் மூலம் நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்துவரப்பட்டார். ஆயினும், நோயாளர் காவு வண்டியிலிருந்து கீழே இறங்க முடியாத அளவிற்கு துமிந்த சுகயீனமுற்றிப்பதாக அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து துமிந்தவின் மருத்துவ அறிக்கைகளை எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அதுவரை வழக்கை ஒத்திவைத்தார்.

கடந்த 2010, 2011 மற்றும் 2013ஆம் ஆண்டுகாலப் பகுதிகளில் துமிந்த சில்வா தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்த தவறியுள்ளமைக்காக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவருக்கெதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்