தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, தமிழ் தேச விரோத குழுக்களின் கூட்டாகும்; டக்ளஸ் தேவானந்தா

🕔 July 3, 2015
Douglas devananda - 02 – பாறுக் ஷிஹான் –

மிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ்த் தேசவிரோத குழுக்களின்
கூட்டாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதேவேளை, த.தே.கூட்டமைப்பானது – தேர்தலுக்கானதொரு கூட்டேயொழிய வேறொன்றுமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு  கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“ஊடகங்கள் எப்போதும் வெளிப்படையாகவும் உண்மைத்தன்மையுடனும் செய்திகளை வெளியிட வேண்டும். அதேவேளை, நடுநிலைமையுடன் – பக்கம் சாராதும் செயற்பட வேண்டும்.

அரசசார்பான நிகழ்வுகளை முன்னைய காலங்களில்  நடத்துகின்ற போது,  மூடிய அறைக்குள் நடத்தாமல் வெளிப்படைத்தன்மையுடன்தான் நான் நடத்தியுள்ளேன். அவ்வாறான செயற்பாட்டினைத்தான் விரும்புகின்றேன்.

ஊடகங்கள் – மாற்றுக் கருத்துக்களுக்கும் இடம்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.  கடந்த காலங்களில் பக்கசார்பாக நடந்து கொண்டதன் காரணமாகவே, மக்கள் இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

நாம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதனூடாகவும், நீடித்த ஆட்சியிலும்தான் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமென்கின்ற நம்பிக்கை எமக்குள்ளது. இதற்கு மாறாக, ஆட்சிமாற்றத்தின் ஊடாகவே – பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறிவந்திருந்த போதிலும், இதுவரையில் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை.

அத்துடன், எமது இணக்க அரசியல் ஊடாக – அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதன் பயனாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமன்றி – வடமாகாணத்தில் பல இடங்களை விடுவித்துள்ளோம்.

குறிப்பாக, வலிகாமம் வடக்குப் பகுதியில் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலங்கள் – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலப்பகுதியில் விடுவிக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தவையாகும். இதனை, தமிழரசுக் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஏற்றுக் கொண்டுள்ளார்.

தூரநோக்கமும், நடைமுறைச்சாத்தியமானதுமான எதிர்கால இலக்கை நோக்கிய எமது பயணத்தில் – மக்கள் நலன்சார்ந்த பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம்’ என்றார்.

இதேவேளை, ஆட்சி மாற்றத்தின் பின்னர் – புதிய அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக,  மாவை சேனாதிராஜா தெரிவித்ததாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியினையும், ஈ.பி.டி.டி. செயலாளர் நாயகம் இதன்போது, ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினார். Douglas devananda - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்