உயர்பீடக் கூட்டத்தில் உய்யலாலா; தாருஸ்ஸலாத்தில் நடந்த தாறுமாறுகள்

🕔 December 15, 2016

h-c-meeting-022– றிசாத் ஏ காதர் –

முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று புதன்கிழமை, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது, செயலாளர் ஹசனலி தொடர்பான விடயங்களே அதிகம் பேசப்பட்டன. ஹசனலிக்கு சார்பாக கடந்த காலங்களில் வெளிப்படையாகப் பேசாத பல உயர்பீட உறுப்பினர்கள், நேற்றிரவு நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் – ஹசனலியின் பக்க நியாயங்களையும், அவருக்கு பொறுப்பு வாய்ந்த செயலாளர் பதவியினை வழங்க வேண்டியதன் அவசியங்களையும் வலியுறுத்தினர்.

மு.கா.வின் உயர்பீட உறுப்பினரும், மசூறா சபையின் தலைவருமான கலீல் மௌலவி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத், கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி றக்கீப், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில் உள்ளிட்ட பலர், ஹசனலிக்கு சார்பான கருத்துக்களை உயர்பீடக் கூட்டத்தில் முன்வைத்தனர்.

இந்த நிலையில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல். பளீல், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் ஆகியோர் ஹசனலிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டனர்.

கலீல் மௌலவி இங்கு பேசும் போது;

“இஸ்லாமிய வரலாற்றில் பத்ர் சஹாபாக்கள் எவ்வாறு முன்னணி போராளிகளாக இருந்தார்களோ, அது மாதிரி – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை ஹசனலி என்பவர் கட்சியின் ஒரு முன்னணிப் போராளியாவார். அவர் மீது வாய்க்கு வந்தவாறான குற்றச்சாட்டுக்களையெல்லாம் முன்வைத்துப் பேச முடியாது.

மேலும், கட்சிக்குள் இரண்டு செயலாளர்கள் இருப்பதென்பது ஒருபோதும் சரிவராது. அதுவும், செயலாளர் ஒருவருக்கு சம்பளம் கொடுத்து பணியாற்ற வைப்பதென்பது, மிகப்பெரும் அவமானமாகும். ஜம்மியத்துல் உலமா சபையில் நான் பொருளாளராக இருந்தும் கூட, நாங்கள் சம்பளம் எதையும் பெறுவதில்லை. ஆக, முஸ்லிம் காங்கிரஸ் எனும் மிகப் பெரும் நிறுவனத்தில் சம்பளத்துக்கு ஒரு செயலாளரை நியமிப்பதென்பது கூடாது.

முஸ்லிம் காங்கிரசில் சம்பளத்துக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மன்சூர் ஏ. காதர் எனது மச்சான் முறையானவர்தான். அவரை இழிவுபடுத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் எனும் மிகப் பெரிய நிறுவனத்துக்கு சம்பளம் கொடுத்து ஒரு செயலாளரை வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை இந்த சபைக்குச் சொல்ல வேண்டியுள்ளது.

இப்படிச் சொல்வதால் என்னைக் கட்சிலிருந்து நீக்கி விட்டாலும் பரவாயில்லை. ஆனால், மு.காங்கிரசுக்கு தலைவர் ஒருவர் மட்டுமே இருக்கின்றமை போல், செயலாளர் என்பவரும் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும். அந்த செயலாளர் பதவிக்குரியவர் ஹசனலிதான். அவர் எந்தவித குற்றங்களையும் செய்யவில்லை. சமூகத்துக்காகத்தான் பேசினார்” என்றார்.

இதனையடுத்து, ஹசனலியை இந்த சபைக்கு அழைத்துப் பேச வேண்டும் என்று, பலரும் அங்கு கருத்துத் தெரிவித்தனர்.

இதன்போது எழுந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம்;

“சமூகத்தில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அவை பற்றிப் பேசாமல், கூட்டம் ஆரம்பித்த நேரம் முதல் – ஹசனலி பற்றித்தான் இங்கு பேசப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக நீதிமன்றம் போகப் போவதில்லை என்று ஹசனலி கூறியிருக்கின்றார். ஆனால், ஏற்கனவே – தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்சியைக் கொண்டு சென்று நிறுத்தி விட்டார்.

மேலும், தலைமைத்துவத்துடன் ஹசனலி முரண்பட்டு விட்டார். அவருக்கும் தலைவருக்குமிடையில் பிளவு வந்து விட்டது. இனி அந்தப் பிளவினை ஒட்ட முடியாது.

ஆகவே,  தலைமைக்கு நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றிப் பேசுவதை விடுத்தும், சமூகப் பிரச்சினைகளை இங்கு பேச வேண்டும்” என்றார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத் இதன்போது எழுந்து பேசினார்;

“தவத்தின் கருத்தினை நான் முற்றாக எதிர்க்கிறேன். இந்தக் கட்சிக்கென்று ஒரு வரலாறு உள்ளது. மு.காங்கிரசின ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் அவர்கள் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் வந்து தங்கிருந்தபோது, ஒரு சிறிய மோாட்டார் சைக்கிளை வைத்துக் கொண்டு ஹசனலி அவர்கள்தான், ஆர்கிடெக் இஸ்மாயிலையும் சேர்த்துக் கொண்டு, நமது கட்சியின் அனைத்து விவகாரங்களையும் செய்துகொண்டிருந்தார்.

அந்தவகையில், ஹசனலியை எளிதாக இந்தக் கட்சி மறந்து விட முடியாது. ஒரு முரண்பாடு வந்து விட்டால், பேசிக் கதைத்து சமாதானத்தை ஏற்படுத்துவதுதான் முறையாகும். பிளவு ஏற்பட்டு விட்டால், இனி ஒட்டாது என்று தவம் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, ஹசனலியை நாளையே அழைத்து வந்து அவருடன் பேச வேண்டும்” என்றார்.

இதனையடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் எழுந்தார்;

“நான் இங்கு எதுவும் பேசுவதில்லை என்று நினைத்துத்தான் வந்தேன். ஆனால், இங்கு பேசப்படும் கருத்துக்களைக் கேட்கும் போது கதைத்துத்தான் ஆக வேண்யிருக்கிறது.

இந்தக் கட்சிக்குள் முரண்பாடுகளும், பிளவுகளும் வந்து விட்டால், முரண்பட்டவர்கள் இனி இணையவே முடியாது என்கிற பேச்சுக்களெல்லாம் இந்தக் கட்சிக்குள் கிடையாது.

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரும், தற்போதைய நமது கட்சியின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர்தான், நமது கட்சிக்கு எதிராக ஒரு காலத்தில் வழக்கு வைத்தார். அதனால், நமது கட்சி – சொந்தச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது போனது. நமது கட்சிக்கு மிக மோசமான எதிரியாக இருந்தார். ஆனால், இப்போது அவர் கட்சியில் இணைந்து பிரதித் தலைவர் பதவியையும் பெற்றுக் கொண்டு, நமது கட்சித் தலைவருடன் மிக நெருக்கமான உறவுடன் உள்ளார்.

எனவே, பிளவு வந்து விட்டால் இனி ஒட்டாது  என்கிற கதைகளையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. உடனடியாக ஹசனலி அவர்களை அழைத்து வந்து, பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற மு.காங்கிரசின் உயர்பீட கூட்டத்தில் ஹசனலிக்கு சார்பான கருத்துக்களே அதிகமாக வெளியிடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஹசனலிக்கு கட்சிக்குள் எந்தளவு ஆதரவுள்ளது என்பதை நாடி பிடித்துப் பார்ப்பதற்காகவே, மு.காங்கிரசின் நேற்றைய உயர்பீடக் கூட்டத்தை, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூட்டியதாக ஒரு பேச்சு உள்ளது.

உண்மையில், அதற்காகத்தான் உயர்பீடம் கூட்டப்பட்டிருந்தால், நேற்றைய கூட்டம், ஹக்கீமுக்கு சந்தோசமானதாக அமையவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்