ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்: வாழ்வாதாரத்தில் விழும் மண்

🕔 December 2, 2016

article-mtm-084– முகம்மது தம்பி மரைக்கார் –

திட்டமிடப்படாத அபிவிருத்திகள் வெற்றியளிப்பதில்லை என்பதற்கு ஒலுவில் துறைமுகம் நிகழ்கால உதாரணங்களில் ஒன்றாகும். ஒலுவில் துறைமுகமானது அரசியலை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஒலுவிலில் ஒரு துறைமுகம் அமைப்பதற்கான சாத்திய வள அறிக்கைகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு, அங்குள்ள மக்களை அரசியல் ரீதியாக பிரமிப்பூட்டுவதற்காக ஒலுவில் துறைமுகத்தை உருவாக்கினார்கள். இதற்காக, ஒலுவில் மற்றும் பாலமுனை பிரதேசங்களிலுள்ள சுமார் 125 ஏக்கர் பரப்புடைய பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டன.

1998ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அப்போதைய துறைமுக அபிவிருத்தி அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப்பினால் ஒலுவில் துறைமுகம் பிரகடனப்படுத்தப்பட்டது. டென்மார்க் அரசாங்கம் வழங்கிய 46.1 மில்லியன் யூரோ வட்டியில்லாக் கடன் மூலம், ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. அந்தக் கடன் தொகையானது இலங்கை நாணயத்தின் இன்றைய பெறுமதியில் சுமர் 728 கோடி ரூபாயாகும். துறைமுகம் செயற்படத் தொடங்கி 06 மாதம் முதல் 10 வருடங்களுக்குள் கடனைக் கட்டி முடிக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

ஒலுவில் துறைமுகம் இரண்டு பிரிவாக நிர்மாணிக்கப்பட்டது. பிரதானமானது வர்த்தகத் துறைமுகம், மற்றையது மீன்பிடித் துறைமுகம். கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து இதுவரை செயற்படாத நிலையில் வர்த்தகத் துறைமுகம் உள்ளது. அங்குள்ள பல இடங்களில் புதர்கள் வளர்ந்துள்ளன. சில கட்டடிடப் பகுதிகளும், சாதனங்களும் பாவனையின்றித் துருப்பிடித்துள்ளன. இந்த நிலையில், மீன்பிடித் துறைமுகம் ஓரளவு செயற்பாட்டு நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுகம் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் நெல் விவசாயத்துக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் புகழ்பெற்ற பிரதேசமாகும். அந்த வகையில், ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் இங்குள்ள கடற்றொழிலாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் கலங்கள் (நமது பாசையில் படகு என்று கூறலாம்) ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நின்று தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோன்று, வெளி மாவட்டங்களிலிருந்து இங்குள்ள கடல் பகுதியில் தொழிலை மேற்கொள்ளும் கடற் கலங்களும் இங்கு தரித்துச் செல்கின்றன. சாதாணமாக ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் 170 பெரிய படகுகளும், 200 சிறிய படகுகளும் தரிப்பதாக, அங்குள்ள படகு உரிமையாளரில் ஒருவரான எம்.ஏ. றிபாய்தீன் கூறுகின்றார்.

றிபாய்தீன் சிறிய படகு ஒன்றின் உரிமையாளர். அவருடைய படகு 32 அடி நீளமானது. அவர் உட்பட நான்கு பேர் சேர்ந்து அந்தப் படகில் தொழிலுக்காக கடலுக்குள் சென்று வருவார்கள். சாதராணமாக, சிறிய படகில் இவ்வாறு தொழிலுக்குச் செல்பவர்கள், ஒரு வாரம் கடலில் தங்கியிருந்து மீன்களைப் பிடித்துக் கொண்டு கரை திரும்புவார்கள். பெரிய படகில் தொழிலுக்குச் செல்பவர்கள் மாதக் கணக்கில் கடலில் சஞ்சாரித்து மீன்களைப் பிடித்துக் கொண்டுதான் கரைக்கு வருவார்கள்.

இவ்வாறு கரைக்கு திரும்புகின்ற படகுகள் – ஒலுவில் மீன்பிடி துறைமுகத்துக்குத்தான் வருகின்றன. இங்கிருந்துதான் படகுகளிலுள்ள மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் ஒலுவில் துறைமுகத்துக்கு படகுகளும், அவற்றில் மீன்களும் வந்துகொண்டேயிருக்கும்.

ஆனால், கடந்த ஒரு மாத காலமாக ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. அங்கிருக்கும் படகுகள் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாகத் தொழிலுக்குச் செல்லவில்லை. கடற்றொழில் மூலம் தமது ஜீவனோபாயத்துக்கான வருமானத்தினை நம்பிக் கொண்டிருக்கும் அங்குள்ள மீனவர்கள் மிகவும் கவலையுடன் உள்ளார்கள்.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினுள் படகுகள் வந்து செல்லும் நீர்ப் பாதையாது, கடந்த ஒரு மாத காலமாக மணலால் மூடப்பட்டுள்ளது. அதாவது, துறைமுகத்தின் வாய்ப் பகுதி அடைபட்டுப் போயுள்ளது. இதனால், துறைமுகத்தினுள் தரித்து நிற்கும் படகுகளால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இதன் காரணமாகத்தான் கடந்த ஒரு மாத காலமாக இங்குள்ளவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் தரித்து நிற்பதற்காக, துறைமுக நிருவாகம் கட்டணம் வசூலிக்கிறது. படகுகளின் அளவுக்கேற்ப கட்டணம் பெறப்படுகிறது. அந்த வகையில் படகு ஒன்றிடமிருந்து மாதமொன்றுக்கு 300 ரூபா முதல் 1200 ரூபா வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர, படகில் தொழில் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் 150 ரூபாய் வீதம், மாதக் கட்டணம் அறவிடப்படுகிறது.

உதாரணமாக, 32 அடி நீளமான தனது படகுக்கு 700 ரூபாவினை மாதக் கட்டணமாக றிபாய்தீன் செலுத்துகின்றார். அத்தோடு, படகில் பணியாற்றும் நான்கு தொழிலாளர்களுக்கும் 150 ரூபாய் வீதம் 600 ரூபாய் கொடுக்கின்றார். மொத்தமாக 1300 ரூபாவினை மாத வாடகையாக அவர் செலுத்துகின்றார். ஆயினும், இவருடைய மேற்படி படகானது ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே தரித்து நிற்கும். மிகுதி நாட்கள் கடலில் பயணப்பட்டு, தொழிலில் ஈடுபடும்.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை மணல் மூடும் அபாயம் உள்ளதாக, இங்குள்ள படகு உரிமையாளர்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்திருந்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில்தான், தற்போது படகுப் பாதை முழுவதுமாக மணலால் மூடப்பட்டுள்ளது. இப்போது படகுகளால் வெளியேற முடியாதுள்ளது. எனவே, தமக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை தொடர்பில், இங்குள்ள படகு உரிமையாளர்கள் சேர்ந்து, அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் சந்தித்துப் பேசிய போதும் பலனெதுவும் கிடைக்கவில்லை. எனவே, தமது சொந்த செலவிலாவது துறைமுகத்தை மூடியுள்ள மணலை அகற்றுவதெனத் தீர்மானித்து, அந்த முயற்சியில் படகு உரிமையாளர்கள் ஈடுபட்டார்கள்.

இதற்கிணங்க, கடந்த 23ஆம் திகதியன்று மணல் தோண்டும் இயந்திரமொன்றினை படகு உரிமையாளர்கள் – வாடகை செலுத்திக் கொண்டுவந்தனர். துறைமுக படகுப் பாதையினை அடைத்துள்ள மணலை அந்த இயந்திரத்தின் மூலம் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் மணல் அடைத்துக் கொண்டது.

ஆயினும், படகு உரிமையாளர்கள் தமது முயற்சியினைக் கைவிடவில்லை. 25ஆம் திகதியன்றும் மணல் தோண்டும் இயந்திரத்தினைக் கொண்டு வந்து, படகுப் பாதையிலுள்ள மண்ணை அகற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டார்கள். ஓரளவு தோண்டப்பட்ட வழி ஊடாக, சில படகுகளை இயந்திரத்தின் உதவியுடன் கட்டியிழுத்து வெளியேற்றினார்கள். இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளுக்காக 65 ஆயிரம் ரூபாவினை படகு உரிமையாளர்கள் செலவிட வேண்டியேற்பட்டது. இந்தப் பணத் தொகையில் ஒரு பகுதியினை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், தனது சொந்த நிதியிலிருந்து வழங்கியிருந்தார் என்று, அங்குள்ள கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இப்போது மீண்டும் துறைமுகத்தின் படகுப் பாதையை மணல் மூடி விட்டது.

வருடத்தின் இறுதிப் பகுதியில் கடலில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்று மீனவர்கள் கூறுகின்றார்கள். தங்கள் தொழிலில் நல்ல வருமானம் இந்தக் காலப்பகுதியில்தான் கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறித்து, கடற்றொழிலாளர்கள் மிகவும் கவலைப்படுகின்றார்கள்.

சிறிய படகு ஒன்றில் நான்கு பேருடன் கடலுக்குச் சென்று, 07 நாட்கள் கடலில் தங்கி தொழில் செய்வதற்கு 60 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்கிறார் படகு உரிமையாளர் றிபாய்தீன். ‘அவ்வாறு தொழிலுக்குச் சென்று வரும் போது, சாதாரணமாக ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் கிடைக்கும். அந்தத் தொகையில் செலவினைக் கழித்தால் 90 ஆயிரம் லாபமாகக் கிடைக்கும். இதில் படகு உரிமையாளருக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும். வலையின் மூலம் மீன் பிடிக்கும் படகுகளின் உரிமையாளருக்கு, லாபமாகக் கிடைக்கும் தொகையில் அரைவாசியைக் கொடுக்க வேண்டும். தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் படகுகளின் உரிமையாளருக்கு லாபத்தில் மூன்றில் ஒரு பகுதியினைக் கொடுக்க வேண்டும். எங்கள் படகில் தூண்டில் மூலமாகவே மீன் பிடிப்போம். அந்த வகையில் 90 ஆயிரம் லாபமாகக் கிடைத்தால் அதில் மூன்றில் ஒரு பங்கான 30 ஆயிரம் ரூபாவினை முதலாளிக்கு வழங்கி விட்டு, மிகுதி 60 ஆயிரம் ரூபாவினையும், படகில் தொழிலுக்காகச் சென்ற நான்கு பேரும் பிரித் தெடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் பார்த்தால், ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இது 07 நாட்கள் கடலில் தரித்து நின்று தொழில் செய்தமைக்கான வருமானமாகும். அந்த வகையில், நாளொன்றுக்கு 02 ஆயிரத்துச் சொச்சம் ரூபாய் ஒரு தொழிலாளிக்குக் கிடைக்கும். எங்கள் படகுக்கு நான் முதலாளியாக இருப்பதோடு, படகில் கடமையாற்றும் நான்கு தொழிலாளர்களில் ஒருவராகவும் இருக்கிறேன்’ என்று, கடற்றொழிலின் உள்ளரங்கத்தினை விபரித்தார் றிபாய்தீன்.

மேலே சொன்ன கணக்கு – எல்லாக் காலங்களுக்கும் பொருந்தாது. சில சமயம், செலவு செய்யும் பணத்தொகையைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்குக்கூட மீன்கள் கிடைக்காமல், நட்டத்துடன் படகுகள் கரை திரும்புவதுமுண்டு. அதனால்தான் கடற்றொழிலை – உயிருக்கும், உழைப்பக்கும் உத்தரவாதமற்ற தொழிலாகச் சொல்வார்கள்.

இது மட்டுமல்லாமல், அதிகமானோர் கடன் அடிப்படையில் பெற்றுக்கொண்ட பணத்தில்தான் படகுகளைக் கொள்வனவு செய்து, தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தப் படகுகள் மூலமாக தமக்குக் கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டுதான், அதன் உரிமையாளர்கள் – தமது குடும்பச் செலவுகளை ஈடுகட்டுவதோடு, படகு கொள்வனவுக்காகப் பெற்றுக் கொண்ட கடனையும் அடைத்து வருகின்றார்கள். இப்போது ஒரு மாத காலமாக மீன்பிடி துறைமுகத்தை மண் மூடிக்கொண்டதால், இங்குள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் ‘மண்’ வீழ்ந்துள்ளது.

ஒலுவில் மீன்பிடித்துறைமுகம் இலங்கை துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சின் கீழ் இருந்தது. இந்த நிலையில், அதன் உரிமம் கடற்றொழில் அமைச்சுக்கு மாற்றப்பட்டு விட்டதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் பரவியிருந்தன. இந்த நிலையில், தற்போது ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள மேற்படி பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும் பொறுப்பு யாருடையது என்பதில் சந்தேகங்கள் இருந்தன. எனவே, இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி டப்ளியு.எம்.எம்.ஆர். அதிகாரி என்பவருடன் பேசினோம். ‘ஒலுவில் மீன்பிடி துறைமுத்தினை கடற்றொழில் அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளபோதும், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சிடமிருந்து இன்னும் உத்தியோகபூர்வமாக தமது அமைச்சுக்கு ஒலுவில் மீன்பிடி துறைமுகம் கையளிக்கப்படவில்லை’ என்று அவர் கூறினார்.

அப்படியாயின், ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பு, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சிடமே உள்ளது என்பது தெளிவாகிறது.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு மீதான வரவு – செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்றது. இதன்போது, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மண் மூடியுள்ளமை தொடர்பில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உரையாற்றியிருந்ததாக ஊடகங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது. மேலும், நாடாளுமன்றத்தில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை சந்தித்த பிரதியமைச்சர் ஹரீஸ், ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்த்துத் தருமாறு, எழுத்து மூலக் கோரிக்கையொன்றினைக் கையளித்ததாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் தெரியவருகிறது. இதன்போது, இரண்டு நாட்களுக்குள் ஒலுவிலுக்கு இயந்திரங்களை அனுப்பி வைத்து, அங்குள்ள மணலை அகற்றுவதாக, பிரதியமைச்சர் ஹரீசிடம் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உறுதியளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை (புதன்கிழமை காலை 10.30) ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்துக்கு, அமைச்சர் அர்ஜுன வாக்களித்தவாறு எந்தவித இயந்திரங்களும் வந்து சேரவில்லை. அங்குள்ள கடற்றொழிலாளர்கள் ஏமாற்றங்களுடன் காத்திருக்கிறார்கள். யாரும் அவர்களுக்குக் கைகொடுப்பதாகத் தெரியவில்லை.

படகு உரிமையாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து, இறக்காமம் பிரதேச ஒன்றிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பொறியலாளர் எஸ்.ஐ. மன்சூரைத் தொடர்பு கொண்டும் பேசியிருந்தனர். இதனையடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை பொறியிலாளர் மன்சூர் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இருந்தபோதும், படகு உரிமையாளர்கள் மணலை அகற்றும் போது களத்துக்கு விஜயம் செய்த பொறியலாளர் மன்சூர் – அங்கு நின்றவாறு, சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு நிலைமைகளை அறிவித்ததோடு, ஊடகங்களையும் அங்கு அழைத்து நிலைவரத்தினை வெளிப்படுத்தினார்.

இவ்வளவு நடந்தும், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை மூடிய மணலை அகற்றுவதற்கான உரிய நடவடிக்கையினை, எந்தவொரு அதிகாரியும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் தொடர்ந்தும் ‘மண் விழுந்து’ கொண்டேயிருக்கிறது.

நன்றி: தமிழ் மிரர் (02 டிசம்பர் 2016) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்