ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மண் மூடியது; பயணிக்க முடியாமல் படகுகள் பாதிப்பு

🕔 November 25, 2016

022– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் –

லுவில் மீன்பிடித் துறைமுகத்தினுள் படகுகள் வந்து செல்லும் மார்க்கம் மணலால் மூடப்பட்டுள்ளமை காரணமாக, துறைமுகத்தினுள் தரித்து நிற்கும் படகுகள் தொழில் நிமித்தம் வெளியேறிச் செல்ல முடியாத நிலைவரமொன்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, போக்குவரத்து மார்க்கத்தினை மூடியுள்ள மணலினை தோண்டும் நடவடிக்கைகள், இன்று வெள்ளிக்கிழமை அங்குள்ள படகுகளின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் சுமார் 350 படகுகள் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் தரித்து நிற்பது வழமையாகும். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த படகுகள் மட்டுமன்றி, மாத்தறை, நீர்கொழும்பு மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த படகுகள் – ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் தரித்து நின்று தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், துறைமுகத்திலிருந்து கடலினுள் சென்று வரக்கூடிய போக்குவரத்து மார்க்கம் – கடந்த ஒரு வாரகாலமாக மணலினால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, துறைமுகத்தினுள் தரித்து நிற்கும் படகுகள் அங்கிருந்து வெளியேறி கடலுக்குள் செல்ல முடியாததொரு நிலைவரம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அங்குள்ள படகு உரியமையாளர்கள் தொழிலின்றி பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தமக்கு ஏற்படுள்ள இந்த நிலைகுறித்து உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் படகுகளின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், போக்குவரத்து மார்க்கத்தினை மூடியுள்ள மணலை இயந்திரத்தினைக் கொண்டு அகறும் நடவடிக்கையில், படகு உரிமையாளர்கள் ஏற்கனவே ஈடுபட்டபோதும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.

ஆயினும், இன்றைய தினமும் தோண்டும் இயந்திரத்தினைக் கொண்டு, மூடப்பட்டுள்ள மணலினை அகற்றும் நடவடிக்கையினை படகு உரிமையாளர்கள் மேற்கொண்டனர்.

இதற்கான செலவினை படகு உரிமையாளர்களே ஏற்றுக் கொண்டனர்.

இதேவேளை, துறைமுகத்தின் போக்குவரத்து மார்க்கத்தினை மூடியுள்ள மணலை அகற்றும் முன்னைய நடவடிக்கைக்கான செலவில் ஒரு பகுதியினை, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கியிருந்தார் என்று, படகு உரிமையாளர்கள் தெரிவித்தார்கள்.

இங்குள்ள படகுகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தினை நம்பி, 02 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன என்று இதன்போது அங்கிருந்த தொழிலாளர்கள் கூறினார்கள்.

எனவே, ஒலுவில் துறைமுகத்தில் தரிக்கும் படகுகள் தற்போது எதிர்நோக்கியுள்ள இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு, உரிய தரப்பினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, அங்குள்ள படகு உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த நிலையில், இறக்காமம் பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர், ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்துக்கு இன்று காலை சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதோடு, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிலைமைகளை விளக்கினார்.
011 003

Comments

புதிது பேஸ்புக் பக்கம்