அடடே

🕔 October 31, 2016

article-mtm-0134– முகம்மது தம்பி மரைக்கார் –

சாதனை என்கிற சொல்லுக்கு ஒரு காலத்தில் நம்மில் அதிகமானோரிடையே பொதுவானதொரு கற்பிதம் இருந்தது. கல்வியில் ஒருவர் உச்ச இடத்தினை அடைந்து கொள்ளும் போது, அதனை சாதனையாகக் கருதினோம். விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் தேசிய, சர்வதேச மட்டங்களில் குறிப்பிடத்தக்க அடைவுகளைப் பெறும்போது – அதனைச் சாதனை என்று கூறி மகிழ்ந்தோம். ஆனால், இப்போது இந்தப் பொதுக் கற்பிதத்தினூடாக சாதனைகளைக் கண்டடைய முடியாது. இப்போது, சாதனை என்பதற்கு புதிய கற்பிதங்களையும், அர்த்தங்களையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. சிலவேளைகளில் அவை – அபத்தமாகக் கூட நமக்குத் தோன்றக் கூடும்.

சாதனை என்பது – ஒருவரின் முயற்சியினால் அடைந்து கொள்வது. ஆனால், உலகில் உயரமாக வளர்ந்த ஒரு மனிதரையும், மிக நீளமான மூக்கினைக் கொண்டவரையும், பெரிய காதுகளைக் கொண்டவரையும் எப்படிச் சாதனையாளராக மதிப்பிட முடியும் என்கிற கேள்வி – பலரிடையே உள்ளது. ஆனால், அந்தக் கேள்விகளையெல்லாம் தட்டிக்கழித்து விட்டு, மேலே சொன்னவர்களையெல்லாம் சாதனையாளர்களாகக் கருதும் நிலை உருவாகி, கனநாள் ஆகிறது.

‘இங்லீஸ்காரன்’ என்கிற திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி வரும். நடிகர் வடிவேலுவிடம், சக நடிகர் போண்டாமணி – கிறுக்குத்தனமாக பேசிக் கொண்டேயிருப்பார். ஒரு கட்டத்தில் கடுப்பாகிப்போன வடிவேலுளூ ‘மூக்கு புடைப்பா இருந்தால், சிலநேரத்தில் இப்படியெல்லாம் யோசிக்கத்தான் தோணும்’ என்று கூறிக்கொண்டே, போண்டாமணியில் மூக்கை, சவரக் கத்தியால் அறுப்பார்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த முகம்மட் ஒஸியொரிக் (Mehmet Ozyurek) என்பவரின் படத்தைக் காணக் கிடைத்தபோது, வடிவேலுவின் மேலே சொன்ன நகைச்சுவை நினைவுக்கு வந்து சிரிப்பூட்டியது. உலகில் வாழ்பவர்களில் – நீளமான மூக்கைக் கொண்டவர் முகம்மட் ஒஸியொரிக். இவருடைய மூக்கின் நீளம் 8.8 சென்ரி மீட்டர் என்று கின்னஸ் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி சாதனைக் குறிப்பினை கின்னஸ் இணையத்தளத்தில் படித்த ஒருவர், இந்த மூக்கையாவுக்கு ‘தடிமன் வந்தால் நிலைமை எப்படியிருக்கும்’ என்று நகைச்சுவையாகக் கேட்டு, பதிவிட்டிருக்கிறார்.longest-nose-01122

எக்ஸ்ஸை கியுபிங் (Xie Qiuping) சீனாவைச் சேர்ந்த பெண். இப்போது இவருக்கு 56 வயதாகிறது. உலகில் நீளமான முடியுள்ளவர் இவர்தான் என்கிறது கின்னஸ். 2004ஆம் ஆண்டு இவருடைய முடியை அளந்து பார்த்தபோது 18 அடியும் 5.54 அங்குலமும் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு ஒட்டகச்சிவிங்கியின் உயரத்துக்குச் சமனானது இவருடைய முடியின் நீளம் என கின்னஸ் குறிப்பிடுகிறது. 1973 ஆம் ஆண்டில் தன்னுடைய 13ஆவது வயதிலிருந்து எக்ஸ்ஸை கியுபிங் தனது முடியை வளர்தெடுக்கத் தொடங்கியிருக்கிறார். அரையடிக் கூந்தலை வைத்துக் கொண்டு, அதனைப் பராமரிப்பதற்கு நமது பெண்கள் படுகின்ற அவஸ்தைகளைக் காணும்போது, எக்ஸ்ஸை கியுபிங் செய்திருப்பது மாபெரும் சாதனையாகத்தான் தெரிகிறது.

longest-hair-011533உலகில் பெரிய ‘முண்டைக் கண்ணி’ அமெரிக்காவில் இருக்கின்றார். கிம் குட்மேன் (Kim Goodman) என்பது அம்மணியின் பெயர். இவர் தன்னுடைய கண் உருண்டைகளை 12 மில்லி மீட்டர் அளவு வெளியில் தள்ளும் ஆற்றலைக் கொண்டவர். அந்தவகையில், இவரை ஓர் உலக சாதனையாளராக கின்னஸ் பதிந்துள்ளது. 2007ஆம் ஆண்டு கிம் குட்மேன் சாதனை நிகழ்த்தும் பொருட்டு, தன்னுடைய கண்களை வெளியே பிதுக்க, அதை அளந்து பார்த்துப் பதிந்துள்ளார்கள். கற்பனைக் கதைகளில் வரும் ‘சூனியக்காரக் கிழவி’ என்கிற கதாபாத்திரத்தின் கண்களை கிம் குட்மேன் நினைவுபடுத்துகிறார்.

eyeball-pop-01224மேலே கூறிய நபர்களிலிருந்து முழுவதும் மாறுபட்டவர் அமெரிக்காவைச் சேர்ந்த சின்டி ஜக்ஸன் (Cindy Jackson). இவர் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்காக 47 வகையான முறைகளைக் கையாண்டுள்ளார். அவற்றில் 09 அறுவை சிகிச்சைகளும் உள்ளடங்குகின்றன. இதற்காக சின்டி ஜக்ஸன் செலவு செய்த பணம் இலங்கைப் பெறுமதியில் 01 கோடியே 47 லட்சம் ரூபாயாகும் (99,600 அமெரிக்க டொலர்). முகத்திலுள்ள தேவையற்ற சதைகளை அறுவை சிகிச்சை மூலம் மூன்று தடவை அகற்றியுள்ளார். மூக்கை அழகுபடுத்துவதற்காக இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார். 1988ஆம் ஆண்டிலிருந்து இந்தக் காரியங்களை அம்மணி செய்து வருகிறார். இதனால், தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்காக, அதிக தடவை இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டவர் என்கிற வகையில், இவரை ஓர் உலக சாதனையாளராக 2005ஆம் ஆண்டு கின்னஸ் பதிந்து வைத்துள்ளது.most-cosmetic-098
அமெரிக்காவைச் சேர்ந்த லீ ரெட்மண்ட் (Lee Redmond) என்கிற பெண்ணைக் கண்டால் உங்களுக்குள் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் தோன்றும். உலகிலேயே மிக நீளமாக கைவிரல் நகங்களைக் கொண்ட பெண் இவர்தானாம். இதற்கு முன்னர் இப்படி நீளமான நகங்களை யாரும் வைத்திருக்கவுமில்லையாம். 1979ஆம் ஆண்டிலிருந்து மிகவும் கவனமாகவும், அழகாகவும் தனது நகங்களை ரெட்மண்ட் வளர்த்து வந்தார். 2008ஆம் ஆண்டு இவருடைய நகங்களை சாதனைப் பதிவுக்காக கின்னஸ் அளந்து பார்த்தது. அப்போது 28 அடி 4.5 அங்குலம் நீளமுடையவையாக அவருடை நகங்கள் இருந்தன. ஆனால், 2009 ஆம் ஆண்டு நடந்த விபத்தொன்றில் இவர் சிக்கியதில், நகங்களெல்லாம் பறிபோய்விட்டன.

இந்தம்மாவின் நகங்களைப் பார்த்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இவர் எப்படிச் சாப்பிட்டிருப்பார்? அழுக்குத் தேய்த்துக் குளித்திருப்பார்? என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ திரைபடத்தில் வரும் விஜய்சேதுபதி போல, ‘ப்பா…’ என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.longest-fingernails-098333
ஆண்களுக்கு மீசை அழகு என்பார்கள். மீசையில்லாத ஆணழகர்களும் இருக்கின்றார்கள். ஆனால், தனக்கு எல்லாமே தன்னுடைய மீசைதான் என்கிறார் இந்தியாவைச் சேர்ந்த ராம்சிங் சவான் (Ram Singh Chauhan). உலகிலேயே நீளமான மீசை வைத்திருப்பவர் என்கிற பெருமை இவருக்குத்தான் உள்ளது. அதனால், இவரின் இந்தப் பெருமையை 2010ஆம் ஆண்டு கின்னஸ் பதிவு செய்துகொண்டது. மனுஷனின் மீசையினுடைய நீளம் 14 அடியாகும். அதனால், ‘எனது மீசை, விலை மதிக்க முடியாதது’ என்று, ராம்சிங் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

ராம்சிங் சவான் – தனது மீசையை இந்தளவு வளர்த்தெடுப்பதற்கு 42 வருடங்களைச் செலவு செய்திருந்தாக அப்போது கூறியிருந்தார். மட்டுமல்லாமல், தன்னுடைய மீசையானது பெருமை, மரியாதை மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடையாளமாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

65 வயதான ராம்சிங், தனது மீசையைப் பராமரிப்பதற்காக தினமும் 02 மணித்தியாலங்களைச் செலவு செய்கிறார் என்று, அவரின் சாதனையினை பதிவு செய்த காலங்களில் கூறப்பட்டது.

இதில் குறிப்பித்தக்க விடயம் என்னவென்றால், ராம்சிங்கின் ஆத்துக்காரம்மா ஆஷா, தனது கணவருடைய மீசையை ‘ரொம்பவும் லவ் பண்ணுகிறேன்’ என்கிறார்.longest-moustache-09842
‘உனக்கு மீசை நீளமென்றால், எனக்கு தாடி நீளம்’ என்று சொல்லாமல் சொல்வது போல், இன்னுமொரு சிங் களத்தில் குதித்தார். அவரின் முழுப்பெயர் சர்வான் சிங். கனடாவில் வசிக்கிறார்.

2011ஆம் ஆண்டு இவரின் தாடியை அளந்து பார்த்தபோது 08 அடி 2.5 அங்குலமாக இருந்தது. அதனால், அது – கின்னஸ் சாதனையாகிற்று. சர்வான் சிங் கொஞ்சம் உணர்வுபூர்வமானவராகத் தெரிகின்றார். ‘எனது தாடியில்லாமல், நான் இல்லை’ என்கிறார். இவரின் தாடியை 2010 ஆம் ஆண்டு அளந்து பார்த்தபோது 07 அடி 9 அங்குலமாக இருந்தது. அப்போது, அதுவும் உலக சாதனையாகவே இருந்தது.longest-beard-099811
‘வாய் கொஞ்சம் நீளம்’ என்று, சிலர் குறித்து நாம் சொல்வதுண்டு. அதிகமாக வாக்குவாதம் செய்கின்றவர்களையும், மற்றவர்கள் எதைக் கதைத்தாலும் அதற்கு வெடுக்கென ஒரு மறுமொழியைப் பேசுகின்றமையை வாடிக்கையாகக் கொண்டவர்களையுமே இவ்வாறு நாம் சொல்கிறோம். பிரான்சிஸ்கோ டொமிங்கோ ஜோகிம் (Francisco Domingo Joaquim) என்கிற முழுப்பெயரைக் கொண்ட ‘சிக்கின்ஹோ’வுக்கு வாய் கொஞ்சம் அகலமானது. ‘கொஞ்சம்’ என்றால் கொஞ்சமில்லை. 17 சென்றி மீட்டர் அகலமானது. ஆசாமி அங்கோலா நாட்டைச் சேர்ந்தவர்.

சிக்கின்ஹோ தனது இரண்டு கைகளாலும், தன்னுடைய வாயை இழுத்துப் பிடிக்க, 2010ஆம் ஆண்டு அதனை அளந்து பார்த்த கின்னஸ் அதிகாரிகள், ‘அடடே எவ்வளவு அகலமான வாய்’ என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே, உலக சாதனையாகப் பதிந்து கொண்டார்கள். சிக்கின்ஹோவின் வாய் எவ்வளவு அகலமானதென்றால், நமது கடைகளில் கிடைக்கும் சாதாரணமான குளிர்பான டின் ஒன்றை, அப்படியே அகலப்பாட்டில் வாக்குள் விடுகிறார் என்றால் பாருங்களேன்.widest-mouth-011111
மேலே உள்ளவற்றினையெல்லாம் வாசித்து ‘அடடே’ சொன்ன நம்மை ‘அடடே’களை சொல்ல வைக்குமளவு ஆச்சரியப்படுத்துகிறார் சார்லட் குட்டன்பேர்க் (Charlotte Guttenberg) எனும் பெண். உடலில் மிக அதிகமாக பச்சை குத்திக் கொண்ட மூத்த பெண் பிரஜை இவர்தான் என்கிறது கின்னஸ். இந்தம்மா – அமெரிக்காவைச் சேர்ந்தவர். தனது உடலின் 95 வீதமான பகுதிகள் முழுக்கவும் ‘டட்டூ’ எனக் கூறப்படும் பச்சை குத்திக் கொண்டுள்ளார். 2006ஆம் ஆண்டு, தன்னுடைய பிறந்த நாளன்று பட்டாம்பூச்சி ஒன்றினை தனது உடலில், முதன் முதலாக பச்சை குத்திக் கொண்டார். அதன் பின்னர், அவருடைய உடலில் பச்சை குத்திக் கொள்வதற்காக 1000 மணித்தியாலங்களை 2015ஆம் ஆண்டுவரை செலவிட்டிருந்தார்.

ஜப்பானிய கலாசாரத்தினால் கவரப்பட்டமை காரணமாகவே, தனது உடல் முழுக்க இப்படி பச்சை குத்திக் கொண்டுள்ளதாக கூறும் சார்லட் குட்டன்பேர்க்கின் உடல் முழுக்க – மலர்களும், விலங்குகளுமே தெரிகின்றன.

அம்மணி இத்துடன் விடுவதாக இல்லை. தனது தலை முழுக்கவும் பச்சை குத்திக் கொள்ளும் எண்ணம் வேறு இருக்கிறதாம் என்று 2015 ஆம் ஆண்டு, அவரின் சாதனையை கின்னஸ் அதிகாரிகள் பார்வையிட்டபோது கூறியிருந்தார். இப்போது நிலைமை என்னவோ தெரியாது.most-tattooed-01333

இப்படி, சாதனைகள் என்கிற பெயரில் நடக்கும் விடயங்களில் அதிகமானவற்றினை நமது முன்னோர்களுக்குப் பார்க்கக் கிடைத்திருந்தால், ‘கண்றாவி’ என்று சொல்லி, காறித்துப்பியிருப்பார்கள்.

நாம்தான் ‘நவீன’ மனிதர்களாயிற்றே. அதனால், இந்தக் கட்டுரையை வாசித்து மகிழுங்கள்.

ஆச்சரியப்படுத்துகின்ற விடயங்களைக் காணுகின்றபோது, ‘அடடே’ என்போமல்லவா. அதனால் – அப்படியே ஆகட்டும், இந்தக் கட்டுரையின் தலைப்பு.

நன்றி: தமிழ் மிரர் (27 ஒக்டோபர் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்