முஸ்லிம்கள் எமக்கு ஒத்துழைக்கவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

🕔 October 31, 2016

Sambanthan - 013மிழ் மக்களின் போராட்ட நடவடிக்கைகளில், முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பைின் தலைவர் ரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கிலிருந்த முஸ்ஸிம் மக்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு, நேற்று 30 ஆம் திகதியுடன் 26 வருடங்கள் பூர்த்தியாவதையொட்டி, வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்த விஷேட கலந்துரயாடல் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“புதிய அரசியலமைப்பின் ஊடாக, வடக்கு கிழக்கில் எமது மக்கள் ஆட்சி செய்யும் வகையில் அதிகாரங்கள் பகிரப்படும் நிலமையை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை செய்து வருகின்றோம்.

நாம் சாத்வீக ரீதியாக, அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக, ஆயுத ரீதியாகப் போராடினோம். தற்போது, ராஜதந்திர ரீதியாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்தப் போராட்டங்களில் முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்காக நாங்கள் உழைத்துக் கொண்டிருந்தோம். அப்போது, முஸ்லிம் தலைமைகள், எங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்தனர். முஸ்லிம்கள் எமக்கு ஒத்துழைக்கவில்லை.

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது போன்று, 1995ம் ஆண்டு தமிழ் மக்களும் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் ஆட்சிபுரிய வேண்டும். ஒற்றுமை இல்லாவிடின், கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோகும்.

காணி, பொலிஸ், நிதி, கல்வி, விவசாயம், போன்ற அனைத்து அதிகாரங்களும் எம்மிடம் முழுமையாக வரவேண்டும். இவ்வாறு அதிகாரங்கள் நம்மிடம் வந்தால்தான் அனைத்துப் பிரச்சினைகளும் தீரும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்