மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினை; அடிப்படைக் காரணம் குறித்து, அமைச்சர் றிசாத் ஆராய்வு

🕔 October 17, 2016

 

rishad-974
ன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்துக்கு பெருந்தடையாக இருக்கும் காணிப் பிரச்சினை தொடர்பிலான விவகாரங்களை தீர்ப்பது குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன்தலைமையில், முசலிப் பிரதேச சபையில் இன்று திங்கட்கிழமை உயர்மட்டக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் முசலிப் பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், ராணுவ, கடற்படை, வனஜீவராசிகள் திணைக்கள, வனபரிபாலனத் திணைக்கள, நீர்ப்பசானத் திணைக்கள அதிகாரிகளும் மற்றும் கிராம சேவையாளர்களும் பங்குபற்றினர்.

சுமார் 26 வருடங்களுக்கு மேலாக இந்த மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களின் குடியேறுவதற்கு, காணிகள் இல்லாத குறை தொடர்பில் அமைச்சர் அங்கு பிரஸ்தாபித்தார்.

“1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் முசலிப் பிரதேசத்தின் கிராமங்களான கரடிக்குளி, பாலைக்குளி, மறிச்சுக்கட்டி மற்றும் முள்ளிக்குளம் ஆகியவற்றில் வாழ்ந்த மக்களின் பூர்வீகக் காணிகள் – வனஜீவராசிகள் திணைக்களத்தினால், அந்தத் திணைக்களத்துக்கு உரித்தான காணிகளாக வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்பட்டதனால், இடம்பெயர்ந்தவர்கள் தமது காணிகளில் குடியேறுவதற்கு தடை ஏற்பட்டுள்ளது.

சிலாவத்துறை, முள்ளிக்குளம் மக்களின் காணிகள் ராணுவத்தினராலும், கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் அந்தப் பிரதேசத்தில் முன்னர் இருந்த கோவில்கள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள், குடியிருப்புக்களுக்கு மக்கள் செல்வதற்கோ, வாழ்வதற்கோ அனுமதிக்கப்படாத ஒரு துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்தவக் கிராமமான – முள்ளிக்குளத்தில் முன்னூறு ஏக்கருக்கு அதிகமான, மக்கள் வாழ்ந்த குடியிருப்பு ஒன்றை கடற்படை ஆக்கிரமித்துள்ளனர். சிலாவத்துறை, மறிச்சுக்கட்டியிலும் மக்களின் காணிகளில் படையினர் தொடர்ந்தும் நிலை கொண்டிருக்கின்றனர்.

யுத்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், யுத்தம் முடிந்து அமைதி ஏற்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்தக் காணிகளைத் தொடர்ச்சியாகப்  படையினர் வைத்திருப்பதன் நோக்கம்தான் என்ன? இதைவிட மிக அநியாயம் என்னவென்றால் மக்களின் விவசாயக் காணிகளில் படையினர் தொடர்ந்தும் வேளாண்மையையும், உணவு உற்பத்தியையும் மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் படையினருக்கு பல வசதிகள் வழங்கியுள்ள போதும், படையினர் விவசாயம் செய்வதற்கான காரணம்தான் என்ன?

மீளக்குடியேறுவோர் அன்றாடம் வாழ்வதற்கு தொழில்கள் செய்ய முடியாது கஷ்டப்படும்போது, அவர்களின் நிலங்களை தொடர்ந்தும் வைத்திருப்பது நியாயமானது அல்ல” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் ஒரு சுமூகமான தீர்வை ஏற்படுத்துவதற்காகவே பல்வேறு கஷ்டங்கள், சிரமங்களுக்கு மத்தியில் உங்களை அழைத்துள்ளேன் என்று அமைச்சர் கூறியதுடன், இதற்கு சமரசமான தீர்வொன்றை காணவேண்டியதன் அவசரத்தையும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அங்கு பிரசன்னமாகியிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், புத்தளத்தில் உள்ள படைத்தளபதி ஒருவருடன் தொடர்புகொண்டு, இதில் சம்பந்தப்பட்ட படை உயரதிகாரிகளையும், அவரையும் மீண்டும் முக்கிய சந்திப்பொன்றை ஏற்படுத்துவதற்கு முடிவு செய்தார்.

மக்களின் பூர்வீகக் காணிகள் – அவர்களுக்கோ, அவர்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கோ தெரியாமல் அடாத்தான முறையில், வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்பட்ட விடயத்தை வனபரிபாலனத் திணைக்கள, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம்  சுட்டிக்காட்டியதுடன், முசலிப் பிரதேச சபையிலும், காணித் திணைக்களம் மற்றும் கல்வித் திணைக்களங்களிலும் இந்த மக்கள் வாழ்ந்ததற்கான ஆவணங்கள், உறுதிப்பத்திரங்கள் மற்றும் கமநல இடாப்புக்கள் இருப்பதற்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்தினார். அத்துடன் இவர்கள் பயன்படுத்திய குளங்கள், கிணறுகளின் கல்வெட்டுக்களில் இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதையும் உணர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்.

முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும், அதிகாரிகளும், கிராம சேவையாளர்களும் மனம்போன போக்கில் செயற்பட்டு மக்களின் மனதை நோகடிக்க வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்.

மக்களுக்காகவே நாம் பணிபுரிய வந்திருக்கின்றோம். நானும் மக்களின் பிரதிநிதியாகவே உங்கள் முன் வந்திருக்கின்றேன். அவர்களை கடினமான முறையில் அணுகாது மென்போக்கை கடைப்பிடியுங்கள். சில விடயங்கள் உங்களுக்குச் செய்ய கஷ்டமாக இருந்தாலும் அதனை அவர்களிடம் நாசூக்காகக் கூறுங்கள். கோபிக்காதீர்கள். மனிதாபிமானத்துடன் நீங்கள் பிரச்சினைகளை அணுகினால் சிறிய சிறிய பிரச்சினைகள் மாவட்ட, பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் வராது. அதன்மூலம் அந்தக் கூட்டங்களில் பாரிய பிரச்சினைகளும் ஏற்பட நியாயம் இல்லை. இவ்வாறு ஏற்படும்போதே சில ஊடகங்கள் வேண்டுமென்றே இதனைப் பெரிதுபடுத்திக் காட்டுகின்றன. இதனைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

எதிர்வரும் காலங்களில் மீள்குடியேறிய மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வு கிடைக்கும். வீடில்லாத அனைவருக்கும் அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

தரையிலே படிக்கும் மாணவர்களுக்கு தளபாட வசதிகளை பெற்றுக்கொடுத்து, எல்லோரும் வசதியாகக் கற்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவோம் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர் மற்றும் அங்கு பங்கேற்றிருந்த வனபரிபாலன மற்றும் ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் அந்தப் பிரதேசத்துக்குச் சென்று தனியாருக்குச் சொந்தமான, ஆக்கிரமிக்கப்பட்ட  காணிகளையும், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களையும் பார்வையிட்டதுடன், அது சம்பந்தமான ஆவணங்களை திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.   மீளக்குடியேறிய மக்களையும் சந்தித்து, அவர்கள் படுகின்ற துயரங்களையும் கேட்டறிந்தார்.

அமைச்சரின் ஊடகப்பிரிவுrishad-975 rishad-976

Comments

புதிது பேஸ்புக் பக்கம்