அப்பம் சாப்பிட்டு விட்டு, சதி செய்ய மாட்டோம்; வெளிப்படையாக விளையாட்டுக் காட்டுவோம்: மஹிந்த

🕔 October 9, 2016

mahinda-009மைத்திரியும் ரணிலும் இணைந்து நாட்டை துண்டுகளாக உடைக்க முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

கூட்டு எதிர்கட்சியினர் இரத்தினபுரியில் நேற்று சனிக்கிழமை நடத்திய ‘போராட்டத்துக்கு உயிரூட்டும் புதிய மக்கள் சக்தி’ எனும் மகுடத்தில் அமைந்த  பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு,  உரையாற்றுகையிலேயே இந்தக் குற்றச்சாட்டினை அவர் முன்வைத்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரைாயாற்றுகையில்;

“உங்களுக்கு எது தேவையோ அதனைத்தர – நான் தயாராக இருக்கின்றேன்.

மேலும் மக்கள் யாரும் பயப்படவேண்டாம் எம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எம்மிடம் வந்து இணைந்து கொள்வார்கள். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. கூடிய விரைவில் அவர்கள் எம்மிடம் வந்து சேரவேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

தற்போது நல்லாட்சி என்ற பெயரில் மோசமான ஆட்சியே நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆட்சி – ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலேயே என்பதனை நான் உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.

மூழ்கப்போகும் கப்பலில் எவரும் பயணிக்க விரும்ப மாட்டார்கள். அதனால் அடுத்த ஆட்சி – கூட்டு எதிர்க்கட்சியின் ஆட்சியாகவே அமையும்.

மைத்திரியும் ரணிலும் இணைந்து நாட்டை துண்டுகளாக உடைக்க முயற்சித்து வருகின்றனர்.

அமைச்சர்களை புலனாய்வுப் பிரிவினர் – பின் தொடர்கின்றனர். தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.

எமது வீடுகளுக்கு எதிரிலும் பொலிஸ் பிரிவை போட்டு, அங்கு வந்து செல்பவர்களின் பட்டியலை தயாரிக்கின்றனர்.

நாங்கள் ரகசிய சதித்திட்டங்களை தீட்ட மாட்டோம். வெளியில் இருந்தே விளையாட்டுக் காட்டுவோம்.

ஜனநாயகத்தை மதித்து வெளியில் இருந்து கொண்டே தாக்குவோம். இந்த உறுதியை எம்மால் வழங்க முடியும். இரவில் அப்பம் சாப்பிட்டு விட்டு சதி செய்ய மாட்டோம்.

படையினர் காப்பாற்றிய நாட்டை பிரித்து அழித்து விடாமல் பாதுகாக்க வேண்டும். பண்டாரநாயக்க ஆரம்பித்த கட்சியை யானையின் பின்னால் தொங்க விட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த கூட்டத்தை பார்த்தால், பவித்ராவை ஏன் விலக்கினோம் என்று கவலைப்படுவார். உங்களுக்கு தேவையானதை வழங்க நான் தயார்.

நாடாளுமன்றத்தில் தலைகளை மாற்றுவது மிகப் பெரிய காரியமல்ல. நீண்டகாலம் செல்வதற்கு முன் அது நடக்கும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்