மஹிந்தானந்த: 1200 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை ஆரம்பித்தவரின், இப்போதைய சொத்து விபரம்

🕔 September 16, 2016

mahindananda-aluthgamage-014முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே, மோசடியாக பெருமளவான சொத்துக்கள் சேர்த்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சொத்துக்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மஹிந்தானந்த அளுத்கமகே, இவ்வாறு பெருமளவான சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு, பணத்தை எங்கிருந்து பெற்றார் என்பதற்குரிய சரியான பதிலை வெளிப்படுத்தத் தவறியமையினை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1980 ஆம் ஆண்டு காப்புறுதி முகவராக மஹிந்தானந்த அளுத்கமகே தனது தொழிலை ஆரம்பித்தார். அப்போது அவரின் சம்பளம் 1200 ரூபாயாகும். ஆயினும், பின்னர் அவர் பெரும் சொத்துக்களுக்கு அதிபாதியானார். கொழும்பு மாவட்டத்தில் மிக அதிகமான காணிகளை வாங்கினார்.

மஹிந்தானந்த அளுத்கமகேயின் சொத்து மற்றும் நிதி நிலைமையினை பின்வரும் சம்பவத்தினை வைத்துப் புரிந்து கொள்ள முடியும்.

மஹிந்தானந்தவின் மனைவி, அவரை விட்டும் 2013 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில், மஹிந்தானந்தவிடமிருந்து இழப்பீட்டுத் தொகையொன்றினையும், மாதாந்தம் ஒரு தொகை தாபரிப்புப் பணத் தொகையினையினையும் கோரியிருந்தார்.

மஹிந்ததானந்தவிடம் அவரின் மனைவிகேட்ட இழப்பீட்டுத் தொகை 5000 மில்லியன் ரூபாயாகும் (500 கோடி ரூபாய்). இதேவேளை, மாதாந்தம் 50 லட்சம் ரூபாய் தாபரிப்புப் பணமாகவும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.

ஆனால், இவ்வாறானதொரு தொகையினை வழங்குமளவுக்கு தன்னிடம் வசதியில்லை என்று மஹிந்தானந்த கூறிவிட்டார். அதன்போது, மஹிந்தானந்தவின் சொத்து விபரங்களை அவரின் மனைவி வெளிப்படுத்தினார்.

காப்புறுதி துறையில் பணிபுரிந்த மஹிந்தானந்த அளுத்கமகே, பின்னர் அரசியலுக்குள் நுழைந்து 1995 ஆம் ஆண்டு, மத்திய மாகாண சுகாதார அமைச்சரானார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரானார். அதன்பிறகு மத்திய அரசியல் அமைச்சரானார்.

கின்லி வீதி, கொழும்பு 07 இல் 27 மில்லியன் ரூபாவுக்கு காணியொன்றினை வாங்கிய மஹிந்தானந்த அளுத்கமகே, அதில் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடொன்றைக் கட்டியெழுப்பினார்.

பொரளை பகுதியிலும் மஹிந்தானந்த மற்றும் அவரின் மனைவி பெயர்களில் 20 பேர்ச் காணி உள்ளது. இந்தக் காணி கொள்வனவு செய்யப்பட்டபோது அதன் பெறுமதி 15 மில்லியன் ரூபாயாக இருந்தது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆயினும், உறுதியில் இந்தக் காணியின் பெறுமதி 10 மில்லியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று 3.5 பேர்ச், 7.8 பேர்ச் மற்றும் 18.3 பேர்ச் ஆகிய பரப்புக்களில் மூன்று காணித்துண்டுகள் உள்ளன. இவை, மஹிந்தானந்த அளுக்கமகேயின் குடும்பத்தவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், அளுத்கமகேயின் மனைவி மற்றும் மகன் ஆகியோரின் பெயர்களில் மேலதிகமான இன்னும் இரண்டு துண்டுக் காணிகள் உள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்தக் காணித் துண்டுகள் இரண்டும் 27 மற்றும் 16 மில்லியன் ரூபாய்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட போதிலும், 11 மற்றும் 08 மில்லியன் ரூபாய்களுக்குக் கொள்வனவு செய்யப்பட்டதாகவே உறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜப்பானில் வசிக்கும் அளுத்கமகேயின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் பெயரிலும் இலங்கையில் சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிதானந்த அளுத்கமகே, இவ்வாறு சொத்துக்கள் சேர்த்துள்ளமை தொடர்பில் 2014 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பகிரங்கமாக கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்