உயர் கல்வி அமைச்சரின் வரவினை எதிர்பார்த்து, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

🕔 August 20, 2016

Protest - SEUSL - 002
– முன்ஸிப் அஹமட், றிசாத் ஏ காதர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு குழுவினர், கோரிக்கைகள் சிலவற்றினை முன்வைத்து ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் இன்று சனிக்கிழமை காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு இன்றைய தினம் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வருகை தரவிருந்த நிலையிலேயே, மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை இடம்பெறுகிறது.

இதன்போது, ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்கலைக்கழக முன்றலில் கறுப்புக் கொடிகளையும் கட்டியிருந்தனர்.

பல்கலைக்கழக நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் பொலிஸ் கடவையினை நீக்க வேண்டும், விரிவுரையாளர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய வேண்டும், விடுதிகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

ஆயினும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வி அமைச்சர் வருகை தரும் தருணத்தில், இவ்வாறு மாணவர்களில் ஒரு குழுவினர் நடந்து கொண்டமை குறித்து, பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை மற்றும் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவை தமது கண்டனங்களைத் தெரிவித்தன.

மேலும், பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தியின் பொருட்டு வருகை தரும் உயர்கல்வி அமைச்சரை, தாம் பெருமனதுடன் வரவேற்கத் தயாராக உள்ளதாக பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் யூ.எல்.எம். சறூஸ் மற்றும் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் செயலாளர் ஐ.எம். கியாஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இன்று காலை 10.00 மணிக்கு,  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும், இந்தச் செய்தி எழுதப்படும் வரை (பி.ப. 1.40 மணி) அமைச்சர் பல்கலைக்கழகத்துக்கு வருகை தரவில்லை.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மேற்படி ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் கற்கும் சிங்கள மாணவர்களில் ஒரு குழுவினர் மட்டுமே ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Protest - SEUSL - 004 Protest - SEUSL - 005 Protest - SEUSL - 003 Protest - SEUSL - 001

Comments

புதிது பேஸ்புக் பக்கம்