ஆலிம்சேனை: துன்பங்களால் சூழப்பட்ட கிராமம்

🕔 August 4, 2016

Article - Rishad - 016
லிம்சேனை என்கிற பெயரைக் கொண்ட கிராமம் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ளது. பிற்பட்ட காலத்தில் ஆலிம் சேனைக்கு ‘அஷ்ரப் நகர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. வாழ்வதற்கான வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்பட வேண்டிய தேவைகள் கொண்ட இந்தக் கிராமம் – இயற்கை எழில் மிக்கதாகும்.

வரலாறு நெடுகிலும் இக்கிராமம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, இக்கிராமத்தின் நிலங்கள், தொடர்ச்சியாக, அபகரிக்கப்பட்டும் – ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டும் வருகின்றன.

ஆலிம்சேனையின் நிலம் ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருகின்றமை தொடர்பாக, வேறொரு கட்டுரையில் விரிவாக எழுதுவதற்கு உத்தேசித்துள்ளேன்.

இந்தக் கட்டுரை வேறொரு விடயத்தினை பேசுகிறது. ஆலிம்சேனயில் அமைக்கப்பட்டுள்ள திண்மக்கழிவகற்றல் நிலையத்தினால் இங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை இந்தக் கட்டுரை வெளிப்படுத்த முயற்சிக்கிறது.

ஆலிம்சேனை கிராமம் காடும், காடுசார்ந்த இடமுமாகும். அதனால் வன ஜீவராசிகள் வசிக்கின்ற பகுதியாக காணப்படுகிறது. ஆயினும், 1990ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வனவிலங்குகளால் ஏற்பட்ட அச்சநிலை, இப்போ இல்லை என்று இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

ஆலிம்சேனையில், திண்மக் கழிவுகள் கொட்டும் நிலையமொன்று உள்ளது. இது அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமானது. ஐரோப்பிய ஒன்றிய பங்காளிக் கூட்டமைப்பு எனும் சர்வதேச அரச சார்பாற்ற நிறுவனமொன்று, சூழல் மீள் நிர்மாண நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பொறியியல் முறையில் கழிவுகளை நிலத்தில் குவிக்குமிடம் பெயரில், இந்த திண்மக் கழிவுகளைக் கொட்டும் நிலையத்தினை நிர்மாணித்துக்கொடுத்துள்ளது. பிரதேச செயலகத்தினால் இதற்கான நிலம் அடையாளப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டிருந்தாலும் இதனை பிரதேச சபைதான் நிர்வகிக்கின்றது.

இத் திண்மக் கழிவுகள் கொட்டும் நிலையம் அமைக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் முறையாக பராமரிக்கப்பட்டாலும், பிற்பட்ட காலங்களில் அதனைப் பராமரிப்பதில் பொடுபோக்குகள் ஏற்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் தத்தமது பகுதிகளில் சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை, மேற்படி திண்மக்கழிவுகள் கொட்டும் நிலையத்திலே குவிக்கின்றனர். அதற்காக குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றங்களிடமிருந்து பணமும் அறவீடு செய்யப்படுகின்றது. இத் திண்மக் கழிவுகள் கொட்டும் நிலையத்தினால,; அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு நாள் ஒன்றுக்கான வருமானமாக சுமார் நாற்பத்து ஐயாயிரம் (45000.00) ரூபா கிடைப்பதாக அறியமுடிகின்றது. மாதமொன்றுக்கான வருமானமாக பதின் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் (1350000.00) ரூபாவினை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கு கொட்டப்படும் குப்பைகளிலுள்ள உணவுப்பொருட்களை உண்பதற்காக தினமும் ஏராளமான யானைகள் வருகின்றன. மேலும், யானைகளுக்குத் தேவையான உணவுகள் இங்கு கிடைக்கப்பெறுவதானல் இந் நிலையத்தினை அண்மித்தே யானைகள் தங்கிவிடுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆலிம்சேனை பிரதேச மக்களின் பிரதான வருமான வழிகளாக இருப்பது உப உணவுப்பயிர்ச் செய்கையும் நெற்செய்கை விவசாயமுமாகும். இந்த நிலையில், தமது பயிர்களைப் பாதுகாப்பதற்கு இப் பிரதேச மக்கள் மிகக் கடுமையாக கஷ்டப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

இங்குள்ள திண்மக் கழிவுகள் கொட்டும் நிலையத்தினை சுற்றி அமைக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப்பு வேலி, யானை வேலி என்பன முற்றாக சேதமடைந்து காணப்படுவதனாhல், இலகுவாக உள்ளே வருகின்ற யானைகள், இரவு வேளை வரை இங்குள்ள உணவுகளை உட்கொள்வதாகவும், இரவில் தங்களின் உப உணவுப்பயிர்களை நாசம் செய்வதோடு, குடியிருப்புக்களையும் சேதப்படுத்துவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திண்மக்கழிவுள் கொட்டும் நிலையத்தைச் சுற்றியுள்ள வேலி மற்றும் யானைப் பாதுகாப்பு வேலி ஆகியவை முறையாக திருத்தியமைக்கப்படாமல் காணப்படுகிறது. மேலும், இக் கழிவுகளிலிருந்து வெளியாகும் துர்நாற்றத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாமையினால், கிராம மக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

யானைகள் தங்களது உப உணவுப்பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்பதுத்துகின்றபோதும், அதற்கான நஷ்டஈடுகளை பெற்றுக்கொள்வதில் தாம் பாரிய இடர்களை எதிர்கொள்வதாகவும், நஷ்டஈடுகளை பெறுவதற்கு விண்ணப்பிக்க செல்கின்ற வேளையில் அதிகாரிகளால் மிகவும் சிரமப்படுத்தும் வகையில் ஏராளமான ஆவணங்கள் கோரப்படவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு என்பது மனிதனுக்கு நிம்மதியான தூக்கத்திற்கான ஒரு பொழுதேயன்றி வேறில்லை என்று கூறுகின்ற ஒரு கிராமவாசி, அதனை இம்மக்கள் தொலைத்து நீண்ட நாட்கள் ஆகின்றன என்கின்றார்.

தினமும் நல்ல வருமானத்தினைப் பெற்றுத் தருகின்ற மேற்படி திண்மக் கழிவுகள் சேகரிக்கும் நிலையத்தினை, சிறப்பாகப் பாராமரிப்பதில், அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் ஏன் இவ்வளவு அசமந்தமாக நடந்துகொள்கின்றார்கள் என ஆலிம் நகர் கிராம மக்கள் கேட்கின்றனர்.

இவ்வாறான பல்வேறு மனக்குமுறல்களுடன் இப் பகுதி மக்கள், தங்கள் வாழ்க்கையை தினமும் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

தமது பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திண்மக்கழிவுகள் கொட்டப்படும் இடத்தினை முறையாகப் பராமரிக்கும்படியும், தமக்கு ஏற்படும் யானைத் தொல்லைகள் குறித்தும், இம் மக்கள் பல தடவை முறையிட்டும் சம்மந்தப்பட்டோரல் எதுவித நடவடிக்கைளும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

‘இவ்வாறு பல்வேறுபட்ட இன்னல்களுக்கும், அழிவுகளுக்கும் மத்தயில் இக்கிராமத்தில் நாங்கள் வசிப்பது பெரும் சவாலாகும். இங்கு வசித்த பல குடும்பங்கள் இவ்வாறான இன்னல்களை சகித்துக்கொள்ள முடியாமல் இடம்பெயர்ந்து சென்று விட்டனர். நாங்களும் இடம்பெயர்ந்தால், அதனை சாதகமாக்கிக் கொண்டு, எங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு ஒரு சாரார் காத்துக்கொண்டிருக்கின்றனர்’ என்று கிராமத்தின் மூத்த பிரஜை ஒருவர் கூறினார்.

எது எவ்வாறு இருப்பினும், தொடர்சியாக ஆக்கிரமிப்புக்களையும், அழிவுகளையும் வாழ்வாக கொண்டுள்ள ஆலிம்சேனை மக்களுக்கு, மேற்சொன்ன பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும்.

இல்லாவிட்டால், இன்னும் சில காலங்களின் பின்னர், ஆலிம்சேனை என்கிற இந்தக் கிராமம், மக்கள் வாழ முடியாத ஒரு பகுதியாக மாறி விடக்கூடும்.

நன்றி: விடிவெள்ளிAshraf nagar - 002 Ashraf nagar - 003 Ashraf nagar - 004 003

Comments

புதிது பேஸ்புக் பக்கம்