நீண்ட சுரங்கத்தின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது; நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 June 24, 2016

Hakeem - 9864கவலறியும் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கத்தின் கட்டமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் என்று, அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த ஆழ வேரூன்றிய அநீதிகள்தான், ஒரு பிரிவினர் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு வன்முறைகளை கையாள வழிவகுத்தது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தகவலறியும் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, நாடாளுமன்றில் அமைச்சர் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும்போதே, மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்;

தகவலறியும் சட்டம் இன்று நிறைவேற்றப்படுகின்றமை குறித்து நாங்கள் உண்மையிலேயே பெருமைப்பட வேண்டும். இது இரண்டு தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பெறுபேறாகும். இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். முக்கியமாக ஊடகவியலாளர்களுக்கும், ஊடக அமைப்புகளுக்கும் அதிலும் குறிப்பாக சுதந்திர ஊடகவியலாளர் சங்கம், எடிட்டர்ஸ் கில்ட் மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கம் போன்ற பல அமைப்புகள் மேற்கொண்ட நீண்ட போராட்டத்தின் விளைவாகவே இது கைகூடியுள்ளது.

அத்துடன், பல சிவில் அமைப்புகள் இதற்காகப் போராடின. நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்துவரும் எங்களுடன், அமைச்சர் பதவிகளை வகித்துவரும் எங்களுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதன் முக்கியத்துவம் பற்றி கருத்துக்களை முன்வைத்து அதனைச் சாதித்துக் கொள்ள முன்னெடுத்த போராட்டத்தில் பயனாகவே இது சாத்தியமாகியுள்ளது.

அவ்வாறே கடந்த தேர்தல் காலங்களில் குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடாக அடிப்படை உரிமைகள் கோப்பில் தகவலறியும் சட்டத்தையும் உள்ளடக்கக் கூடியதாகவிருந்தது.

இதில் நாங்கள் கவலையடைக்கூடிய ஒரு விடயமும் உள்ளது. அதாவது தென்கிழக்கு ஆசியாப் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளில், நாம் மிகவும் தாமதமாகப் பயணித்து இப்பொழுதுதான் இதை நிறைவேற்றுகின்றோம். எங்களுக்கு முன்னர் ஏனைய நாடுகள் இதற்காக நடவடிக்கை எடுத்து முடித்துவிட்டன.

மிலேனியம் இலக்கு, நிலையான இலக்கு என்பவற்றை அடைவதைப் பொறுத்தவரை இந்தப் பிராந்தியத்தில் நாங்கள் முன்னணியில் இருந்த போதிலும், மிகவும் முக்கியமான இந்த சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் நாங்கள்தான் பிந்தியவர்களாக இருக்கின்றோம்.

இந்தத் தாமதம் ஒவ்வொரு வாக்காளரும் தகவலை அறிந்து கொள்வதற்கான உரிமையை மறுப்பதாக இருக்கின்றது. இந்த சட்டத்தினூடாக நாம் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை என்பவற்றின் மூலம் மக்களை ஆட்சிக்கு நெருக்கமானவர்களாக ஆக்கமுடிகின்றது.

முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் போது, இது பற்றி நேர்மையான ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அந்த ஆட்சியிலும் நான் அமைச்சராக இருந்தேன். 2001ஆம் ஆண்டிலிருந்து 2004ஆம் ஆண்டு வரைக்கும் இடைப்பட்ட இரண்டரை வருட காலப்பகுதியில், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த விடயத்தில் நேர்மையான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்பொழுது எடிட்டர்ஸ் கில்ட் என்ற ஊடகவியலாளர் அமைப்பு இதில் முக்கியமான பங்களிப்பைச் செய்தது. அவர்கள் ஒரு முழுமையான வரைவை தயாரித்திருந்திருந்தார்கள். ஆகையால் அதில் அரசாங்கமென்ற முறையில் நாம் சிலவற்றை மட்டுமே உள்ளடக்க வேண்டியதாக இருந்தது.

அன்றைய அரசாங்கம் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்ற போதிலும், அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க திடீரென நாடாளுமன்றத்தை கலைத்ததனால் அதனை நிறைவேற்ற முடியாது போய்விட்டது.

எவ்வாறாயினும் இந்தச் சட்டம் இப்பொழுது எங்கள் முன் இருக்கின்றது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பமாகும். இது இந்த நாட்டின் ஆட்சியின் சூழ்நிலையை பெரிதும் மாற்றியமைக்க இருக்கின்றது. இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தில் நாங்கள் இதனூடாக ஒரு முழுமையான மாற்றத்தை காணலாம்.

இந்த நாட்டின் வடக்கிலும், தெற்கிலும் கலவரங்கள் ஏற்பட்டன. ஆட்சி செய்த முறைமையே அவற்றுக்கு வழிகோலின. பொதுமக்களுக்கு உரிய தகவல்களை மறுத்த அரசியல் இழுத்தடிப்புகளும் அவற்றுக்கு காரணமாகின.

இதில் வெளிப்படைத் தன்மை இருப்பதால் நாங்கள் நாட்டை ஆளும் முறையில் ஒரு வெளிப்டைத் தன்மையை எடுத்துக் காட்டப்போகின்றோம். இது நாட்டின் நிறைவேற்று அதிகாரம் ஒழுங்காக நடைபெறுவதில் எங்களது நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த சட்டத்தின் வெவ்வேறு பந்திகளில் உள்ள அம்சங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த சற்று காலம் செல்லலாம். எவ்வாறாயினும் ஊழல்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமாகும். வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளும் சாத்தியமாகும்.

ஒதுக்கப்படும் பணம் பயனுள்ளதாகவும், உரிய முறையிலும் செலவிடப்படுகின்றதா? என்று, நிறைவேற்று அதிகாரமுள்ளவரிடத்தில் ஒரு சாதாரண பிரஜை கேள்வி கேட்பதற்கு இதனால் வழிபிறக்கும்.

இந்த அதிமுக்கியத்தும் வாய்ந்த சட்ட மூலத்தினூடாக கணக்காய்வு நடவடிக்கைகள் ஒழுங்கு முறையாக மேற்கொள்ளப்பட்டனவா என்பதை கேள்விக்குட்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இந்தச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கத்தின் கட்டமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த ஆழ வேரூன்றிய அநீதிகள்தான் ஒரு பிரிவினர் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு வன்முறைகளை கையாள வழிவகுத்தது.

புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவுள்ள உறுதியான சட்ட விதிகளினால், சிறுபான்மை மக்கள் இவ்வாறு நீண்டகாலமாக அனுபவித்து வந்த அநீதிகளுக்கு தீர்வு காணப்படவிருக்கின்றது. பொதுத்துறைகளில் வேலைவாய்ப்புகள், வாக்குரிமை போன்ற பல்வேறு விடயங்களில் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்கள் அநீதிகளுக்கு முகம் கொடுத்து வந்திருக்கின்றார்கள்.

இதனால், இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் இன, மொழி, மத, நிற வேறுபாடு இன்றி நிறைவேற்று அதிகாரமுள்ளவரிடம் இருந்து தேவையான தகவல்களை பெற்று, தனது உரிமையை நிலைநாட்டுவதற்கும் வழிபிறக்கும். சமஉரிமையை இந்த நாட்டின் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதையும் உறுதிப்படுத்த இது உதவும்.

இந்த சட்டத்துக்கு சபையின் சகல தரப்பினரினதும் ஆதரவு கிடைக்குமென்று நான் நம்புகின்றேன். இந்த நாட்டின் பிரஜைகளையும், வாக்காளர்களையும் பொறுத்தவரை இதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டமென நான் மீண்டும் கூறுகின்றேன்.

நீண்ட சுரங்கத்தின் முடிவில் இப்பொழுது வெளிச்சம் தெரிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்