சிராந்தியின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தும் நிலை; அமைச்சர் ஹர்ஸ தகவல்

🕔 June 3, 2016

Harsha DE Silva - 087ஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவருடைய மனைவி மனைவி சிராந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டு ஹோட்டலொன்றில் தங்கியமைக்கான பெருந்தொகைக் கட்டணத்தை, தற்போதைய அரசு செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பிரான்ஸில் 2014ம் ஆண்டு நடைபெற்ற வெசாக் விழாவினை பார்வையிடுவதற்காக, சிராந்தி ராஜபக்ஷ சென்றிருந்தபோது, அங்குள்ள மிகவும் சொகுசு ரக ஹோட்டலொன்றில் தங்கியிருந்தார். அதற்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை. அதனைச் செலுத்துமாறு  தற்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்;

“முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, பிரான்ஸில் நடைபெற்ற வெசாக் நிகழ்வு ஒன்றை பார்வையிடுவதற்காக 2014ம் ஆண்டு சென்றிருந்தார்.

அப்போது, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒரு இரவிற்கு 25 லட்சத்து 73 ஆயிரத்து 746 ரூபா என்ற அடிப்படையில் அறை ஒதுக்கப்பட்டு தங்கியுள்ளார்.

இது தொடர்பான கொடுப்பனவுகளை மேற்கொள்ளுமாறு கோரி, ஹோட்டல் பில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிராந்தியுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்ட ஏனையவர்களும், ஜனாதிபதி பயன்படுத்தும் தரத்தைக் கொண்ட அறைகளை ஒதுக்கீடு செய்திருந்தனர்.

அறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தலா 700 யூரோக்களும், மினி பார்களுக்காக தலா 371 யூரோக்களும் செலவிடப்பட்டுள்ளது.

மக்களின் பணத்தைக் கொண்டு இவ்வாறு செய்யும் விரயங்களுக்கான செலவுகளை அரசாங்கமே செலுத்த நேரிட்டுள்ளது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பணம் விரயமாக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய ஜனாதிபதி ஜீ7 மாநாட்டின் போது கூட, பிரத்தியேக விமானத்தில் பயணம் செய்யவில்லை. வர்த்தக விமானமொன்றிலேயே பயணம் செய்திருந்தார்.

தனியான விமானமொன்றில் செல்லாத காரணத்தினால் ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய சிகப்பு கம்பள வரவேற்பு ஜனாதிபதிக்கு வழங்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இது தொடர்பில் ஜப்பான் அரசாங்கம் வருத்தம் தெரிவித்திருந்தது. அது ஒரு பெரிய விடயமல்ல எனவும், அதனை தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி பதிலளிதிருந்தார்.

சாதாரண வர்த்தக விமானமொன்றில் சிங்கப்பூர் சென்று, அங்கு நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்து, அதன் பின்னர் ஜப்பானுக்கு ஜனாதிபதி சென்றிருந்தார் எனவும், இதனால் பாரியளவு பண விரயம் சேமிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்